Part 1

291 12 2
                                    


சபானாவுக்குள் கண்ணீர் பொங்கித் ததும்பியது.
ஜன்னல் கம்பியில் முகத்தைப் பதித்து அந்தரத்தைப் பார்த்து அடக்கிக் கொண்டாள்.

என்னமாய் பேசி விட்டான்.

மாஜிதை சபானா திருமணம் முடித்து முழுதாக பத்து வருஷம் ஆகியிருந்தது. அவள் நன்றாகப் படிக்கக்கூடியவள். 

ஏலெவல் வரை படித்தால் பெண் பிள்ளைக்குப் போதாதா என்று உம்மாவும் வாப்பாவும் வீட்டில் இருத்திய போது அவளுக்கு பதினெட்டு முடிந்து பத்தொன்பது வயது தொடங்கியிருந்தது. 

கெம்பஸ் அனுப்புவதில்லை என்ற வீட்டின் கொள்கையை எப்போதோ அறிந்திருந்தவளாகையால் சபானா அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

பீ ஏ வெளிவாரியாகவாவது படிக்கலாம் என்ற நப்பாசையிலும் மண் விழுந்த போது அழுது பார்த்தாள்.கெஞ்சியும் மிஞ்சியும் பார்த்தாள். 

வாப்பாவோ நானாவோ கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை, ரொம்ப அழுத்தமாகவே இருந்தார்கள்.

சரி பார்க்கலாம் என்று அவளும் விட்டேற்றியாக இருந்து விட்டாள். தையலும்,பின்னலும் பின் வீட்டு சய்தா தாத்தாவிடம் கற்றுக் கொண்டாள். 

விதவிதமாக ஆக்கவும், கேக்கின் மேல் பூ ஐசிங் செய்யவும் தெரிந்து கொண்டாள். 

அவள் இறைச்சி ஆணம் வைத்தால் எட்டு ஊருக்கு மணக்கும். வாப்பா இன்னும் இரண்டு கரண்டி இடியப்பத்தின் மேல் ஊற்றிச் சாப்பிடுவார்.

வீட்டுக்கு வரும் அல்ஹஸனாத்தும்,மீள்பார்வையும் தான் அவளின் அதிகபட்ச வாசிப்பு.

சரியாக இருபத்தி மூன்று வயதில் சபானாவுக்குத் திருமணம் நடந்தது.

இரு வீட்டவர்களும் பேசி நிச்சயித்த திருமணம். மாப்பிள்ளை மாஜித் அவளை விட நிறம் அதிகம் என்று சொல்லிக் கொண்டார்கள்.

அவனுக்கு தந்தை இல்லை, தாய் தான் எல்லாம். இரண்டு தங்கைகளுக்கும் நிகாஹ் முடித்து விடும் நிமிரும் போது அவனுக்கு முப்பது வயது தாண்டியிருந்தது.

சவூதியில் பத்து வருட உழைப்பில் தங்கைகளின் திருமணம்,வீட்டை செப்பனிடல் போக கொஞ்சம் காசு மீதமிருந்தது. சின்னதாக ஒரு பர்னிச்சர் கடை மாவனல்லை டவுனில் ஆரம்பித்தான்.

அவனது தோற்றமும் உழைப்பும் சபானாவின் வாப்பாவுக்குப் பிடித்துப் போக அவளிடம் கேட்டார். அவளுக்கோ எதுவும் சம்மதம் தான்.

வீட்டுக்குள்ளால் இருக்கிற பெண்ணுக்குத் தானா முடிவெடுக்கின்ற அளவுக்கு வெளியுலகம் தெரியாதே. 

அவள் வயசு எல்லாப் பெண்களுக்கும் போல இந்த வீட்டின் ஜன்னல்களுக்கு வெளியால் உள்ள உலகம் பற்றிய கனவு அவளுக்கும் இருந்தது.

கடுங்கோடை நாட்கள்Where stories live. Discover now