Part 3

107 7 1
                                    


  குழந்தைகள் மட மடவென வளர்ந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பாட்டுக்கு பாடசாலைக்கும், மதரஸாவுக்கும் போய் வந்தார்கள்.

இடையில் இரண்டு முறை மாமி படுத்துக் கொண்டு விட்டார்கள்.ஆஸ்பத்திரியில்அட்மிட் பண்ண வேண்டி வந்தது.

ஒரு முறை நுவரெலியாவுக்கு குடும்பமாகப் போய் ஒரு வீடு எடுத்து சந்தோஷமாய்த் தங்கி சுற்றிப் பார்த்து விட்டு வந்தார்கள்.

அவள் தேங்காய்த் துருவலும் அரிசிமாவும் பிதறி பூ மாதிரி புட்டு சமைத்தாள். எட்டூருக்கு மணக்க காய்ந்த எண்ணெயில் வெங்காயமும்,உளுவரிசியும்,தட்டிய வெள்ளைப் பூண்டும், இஞ்சியும் இட்டு இறைச்சி தாளித்துக் கொட்டினாள்.

எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
ஆனாலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பது சபானாவுக்கு விளங்கவேயில்லை.

ஆனால், எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லை என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற் போல் அன்று காலை அந்தச் சம்பவம் நடந்தது.

விசயம் இது தான்.

முந்தாநாள் மத்தியானம் சாப்பிட்ட பின்னர் சபானா வழமை போல ஜன்னலடிக்கு வந்தாள். குளித்து விட்டு ஈரம் காயாத சுருள் முடி தோளைத் தழுவிக் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

அன்று மனசில் ஏதோ இனம் புரியாததொரு குதூகலம்.
மாஜிதின் மேசையிலிருந்த கருநீலக் கலர் பேனா அவள் கண்களில் பட்டது.துள்ளலுடன் அவனது சுழல் கதிரையில் அமர்ந்தாள். தனக்குத் தானே சிரித்தவளாய் காலை உயர்த்திக்கொண்டு ஒரு சுற்று சுற்றி மேசைக்கு மீண்டும் வந்தாள்.

அவளது ஆர்ப்பரிக்கும் உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்க முடியுமா என்பது தான் அவளது அந்த நிமிடத்து ஆசை. மேசையில் இருந்த ஹாப் சீட் தாளை எடுத்து எழுதத்தொடங்கினாள்.

எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எழுதுகிறாள். ஒரு வரி எழுதி விட்டு அதை அப்படியே
வெட்டினாள்.

ஒரு நிமிடம் யோசித்து விட்டு மட மடவென நாலைந்து வரி எழுதினாள். அவ்வளவு தான் முடிந்தது. சொல்ல முடியாத ஒரு நீண்ட ஏக்கத்தின் முதற்பகுதி தாளுக்கு இடம் மாறியிருந்தது. எழுத்துப் பிழைகளுடன் கூடிய அதனை கவிதை என்றோ உரைநடை என்று எவரும் இலகுவாக ஒத்துக் கொண்டு விட மாட்டார்கள். ஆனால் அவளுக்குத் திருப்தியாக இருந்தது.

'புள்ள சபானானா.......யாரோ பேசுற முன்னுக்கு, கொஞ்சம் பாருங்கோ'

மாமியின் அழைப்புக்கு ' வாரென் மாமி' என்ற பதிலோடு எழுந்து போனவள் தான் சுத்தமாக இந்த விடயத்தையே மறந்து போனாள்.

கடுங்கோடை நாட்கள்Where stories live. Discover now