Part 4

198 9 6
                                    


  சுபஹுக்கு எழுந்தவள் கடையப்பமாக இடியப்பம் அவித்தாள்.
வீட்டில் கேஸ் அடுப்பு இருந்தாலும் மண் அடுப்பினைத் தான் பாவிக்க வேண்டும்.மாமியின் கட்டளை அது. அவசரத்துக்கு மட்டும் தான் கேஸ் பாவிக்கலாம். விலைவாசி இருக்கிற நிலமையில் இதெல்லாம் கட்டாது.

மண் சட்டியை அடுப்பில் வைத்து சொட்டு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு ,கறிவேப்பிலையும் கொஞ்சம் கடுகும் இட்டுத் தாளித்தாள்.

தக்காளித்துண்டங்களும்,கூறு கூறாய்ச் சீவிய மாசியும் சேர்த்து கொஞ்சம் மிளகாய்த்தூளும் மஞ்சளும் தூவினாள். வெந்து வரும் போது தேங்காயின் கெட்டிப்பால் ஊற்றி திகு திகுவென்று கொதிக்க வைத்தாள் .பால் ஆணம் ரெடி.

இன்னும் கொஞ்சம் தேங்காய் துருவி, உப்பும் உறைப்புமாய் சம்பல் அரைத்தாள். இது மட்டும் அம்மியில்லாமல் மிக்ஸி பாவிக்க அனுமதித்திருப்பதில் அவளுக்கு சந்தோஷம் தான். மாமி காலையில் சுபஹுக்கே எழுந்து விடுவார். தொழுது விட்டு அவ்றாதுகளை ஓதி விட்டு இன்னும் கொஞ்சம் நேரம் சாய்ந்தால் திரும்ப எழும்ப எட்டு எட்டரை ஆகி விடும்.

மாஜிதுக்கு சாப்பாட்டு மேசையில் சுடச் சுட கடையப்பத்தைப் பரத்தி வைத்தாள்.

பிள்ளைளிருவரையும் எழுப்பி அவசர அவசரமாக பாடசாலைக்கு ரெடி பண்ணி அனுப்பி விட்டு மாஜிதின் சேர்ட்டை அயர்ன் பண்ணத் துவங்கினாள். அவன் அனேகமாக அரைக்கை சேர்ட் தான் போடுவான்.

ஒன்பது மணிக்குக் கடை திறந்தாக வேண்டும்.

சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்தவன் மேசையில் ஏதோ தேடினான். இவள் எழுதிய தாள் அப்போது தான் அவன் கண்ணில் பட்டிருக்க வேண்டும்.

'உஙளுக்கு கொஞ்சமாலும் அறிவீக்கா, மாடு மாய்றி ஆள் வளந்தீற ,மூள வேல செய்றில்ல' அவனது அலறல் சபானாவின் செவியில் அறைந்தது.

ஏதோ முக்கியமான டொகியூமென்ட் ஆம், அதன் பிரட்டுப் பக்கத்தில் தான் இவள் கவிதை எழுதியிருக்கிறாள்.

தவறு தான்.
அதைக் கொஞ்சம் அன்பாகச் சுட்டிக் காட்டியிருக்கலாமே.

அவளுக்குத் தலை வலிக்கத்தொடங்கியது.

அரை மணி நேரம் மாஜித்தின் பயானைக் கட்டாயமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுக்குப் பொறுப்பில்லை, ஒரு விடயத்தையும் ஒழுங்காகச் செய்யத் துப்பில்லை. அவனவன் பெண்டாட்டிகள் வெளியே போய் வேலையெல்லாம் பார்க்கிறாள்கள். இவளுக்கு வீட்டுக்குள்ளேயாவது ஒழுங்கா ஒரு வேலை செய்ய முடியாமல் இருக்கிறது. இந்த மாதிரி வாழ்ந்து என்ன பிரயோசனம். இது தான் சுருக்கம்.

சபானாவின் கண்களில் நீர் பெருக்கெடுக்கத் துவங்கியது.

மாஜிதுக்கு அழுவதைப் பார்க்கப் பிடிக்காது.கெட்ட கோபம் வந்து விடும்.

அவன் விடுவிடுவென ரெடியாகி பைக்கை உதைத்தான்.ஸலாம் கூடச் சொல்லாமல் சென்று விட்டான்.

மாமி எழுந்து குளித்துக் கொண்டிருப்பதை பாத்ரூமில் நீர் விழும் சப்தம் உறுதி செய்கிறது.

அவள் இன்னும் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
என்ன பேச்செல்லாம் பேசி விட்டான்.

அந்த விசாலமான வீட்டில் அவளது என்று சொல்வதற்கு எதுவுமேயில்லை என்பதை எண்ணிய போது கழிவிரக்கம் மிகுந்து கண்களில் கண்ணீர் கரைகட்டத் துவங்கியது.  

You've reached the end of published parts.

⏰ Last updated: Jan 23, 2017 ⏰

Add this story to your Library to get notified about new parts!

கடுங்கோடை நாட்கள்Where stories live. Discover now