என்னவளைப் பார்த்துக் கூறினேன் ,
அழகாய் இருக்கிறாய் என்று.அதற்கவள் ,
ஐயமொன்று உண்டெனக்கு ,
தெளிவிப்பாயா? என்றாள்.கேளடி என் கண்மணி என்றேன்.
வயோதிகம் வந்த போதும்
நான் உன் கண்களுக்கு
அழகியாக இருப்பேனா ?
என வினவினாள்.நான் விளக்கினேன் பின்வருமாறு .
உன் ஐயமும் அழகடி!மான் ,மீன் ,மின்மினியைத்
தோற்கடிக்கும்
உன் காந்த விழிகளை விட ,
அதில் நீ தேக்கி வைத்துள்ள எனக்கான காதல் அழகடி!சித்திரைப் பௌர்ணமியாய் ஒளிரும்
உன் வதன சித்திரத்தை விட,
அது பிரதிபலிக்கும் உன்
கள்ளம் கபடம் இல்லா
பிள்ளை உள்ளம் அழகடி!உன் தங்கத் திருமேனியை விட,
நான் ஸ்பரிசத்தால்
மணம் வீசும் மலராக மலரும் ,
பிறர் அறியாமல் உன்னைத்
தீண்டினாலும் தீக்குளித்த முள்
குத்தியதாய் குமுறும்
உன் உள்ளம் அழகடி!கண்கள் பொலிவிழக்கலாம் ,
அது காட்டும்
அன்பு பொலிவிழக்காது !தோல் சுருங்கலாம் ,
தோழமை சுருங்காதடி !திருமேனி வண்ணம் மாறலாம் ,
திருக் காதலின் திண்ணம் மாறாதடி !கேசம் வெளுக்கலாம் ,
நம் நேசம் வெளுக்காதடி!கால்கள் தடுமாறலாம் ,
இடம் மாறிய இதயங்கள் தடுமாறாதடி !
காதலே !!!உன் காதலை மட்ட்ட்டுமே காணும் என் காதல் கண்களுக்கு ,
எப்போதும் நீ பேரழகிதான் !
நீ மட்ட்ட்டும் தான் பேரழகி !!!