அர்ஜீனுக்கோ துளசியை எப்படி நேருக்கு நேராய் சந்திக்கப் போகிறோமென்று தவிப்பாக இருந்தது...அரவிந்தனின் கையை உதறிவிட்டு எங்கேயாவது ஓடி விடலாம் போலிருந்தது அவனுக்கு..அவன் எவ்வாறெல்லாம் தப்பிக்கலாமென்று யோசித்து முடிக்கும் முன்னே சமையலறையை நெருங்கியிருந்தார்கள்...
உள்ளே எதையோ எடுத்துக் கொண்டிருந்தவளை அழைத்து வந்து அர்ஜீனின் எதிரே நிறுத்தினான் அரவிந்தன்..
"துளசி,இது யாரென்டு சொல்லு பார்க்கலாம்..."
அவளுக்கு எங்கே அவனைத் தெரியும்...அவனை அறிமுகமில்லாத பார்வை பார்த்தவள்,சாயலில் அவன் அரவிந்தனோடு ஒத்துப் போனதால் அவனது தம்பியாகத்தான் இருக்க வேண்டுமென்று யூகித்துக் கொண்டாள்...
"உங்க தம்பியா...??.."
அவளை மெச்சுதலாய் நோக்கியவன்,
"பரவாயில்லையே கரெக்டா கண்டுபிடிச்சிட்ட...இவன் எனக்குத் தம்பி மட்டுமில்லை...என்னோட பெஸ்ட்டு பிரண்ட்டும் கூட...கூடப் பிறக்கலைன்னாலும் நாங்க இரண்டுபேருமே ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மாதிரி..."
அவனது வார்த்தைகளிலிருந்தே அர்ஜீன் அவனுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதை புரிந்து கொண்டவள்,அர்ஜீனை நோக்கிப் புன்னகைத்தாள்..
அவனும் வெளியில் அவளுக்கான பதில் புன்னகையை உதிர்த்தவன்,உள்ளூர மிகவும் உடைந்து போயிருந்தான்...அவளின் அறிமுகமில்லாத பார்வையிலேயே நொந்து போயிருந்தவனால் அவளோடு முகம் கொடுத்துப் பேச முடியவில்லை...
"சொரி...உங்க கல்யாணத்தில என்னால கலந்து கொள்ள முடியாமப் போச்சு..."என்றவனுக்கு அப்போதுதான் அவர்களுக்காக வாங்கிய பரிசுப் பொருள் நினைவு வர..
"ஒரு நிமிசம்..இதோ வந்திடுறேன்..."என்றவாறே மாடியை நோக்கி ஓடினான்...
"டேய் அர்ஜீன்..."என்ற அரவிந்தனின் அழைப்பு காத்தில் கரைய அவன் அங்கிருந்து சென்றிருந்தான்..
"ம்ம்...ஓடிட்டான்...அப்புறம் என்னை பலியாக்கிறதுக்கான வேலைகளில களமிறங்கிட்டீங்க போல..??.."
"உங்களுக்கு ரொம்பத்தான் கூடிப் போச்சு அரவிந்தன்...இருங்க இன்னைக்கு நீங்க போதும் போதுமென்டாலும் உங்களை விடுறேல..."
"அடிப்பாவி...என்னைப் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா..."
"ம்ம்..ரொம்பத்தான் பாவம்..."என்றவாறே தலையைச் சரித்து புன்னகைத்தாள் துளசி...
அந்தப் மாயப் புன்னகையில் கட்டுண்டு போனவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்...துளசியும் அவனிலிருந்து பார்வையை அகற்ற முடியாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
அப்போது அங்கே வந்த அர்ஜீன்,அவர்கள் இருவரின் நிலை கண்டு விக்கித்துப் போய் வாசலிலேயே நின்று கொண்டான்...
மெதுவாக அவளின் மாயச் சுழலில் இருந்து விடுபட்ட அரவிந்தன்,தள்ளி நின்று கொண்டிருந்த அர்ஜீனைக் கண்டதுமே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அவனை உள்ளே அழைத்தான்..
"அர்ஜீன் உள்ள வாடா...எதுக்குடா இந்த ஓட்டம் ஓடின...??.."
தனது கையிலிருந்த பரிசுப் பொதியினை அவர்கள் இருவரிடமும் வழங்கியவன்,இருவருக்குமான தனது திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டான்..
"டேய் என்னடா இதெல்லாம்..."என்ற அரவிந்தன், துளசியோடு இணைந்து அதைப் பிரிக்க ஆரம்பித்தான்..
அதை திறந்து பார்த்தவர்களின் முகத்தில் ஆச்சரியத்தோடு இணைந்து ஆனந்தமும் கூத்தாடியது...அவர்கள் இருவரின் படங்களும் அழகான வேலைப்பாடுகளோடு வடிமைக்கப்பட்டிருந்தது..அதில் இருவரின் பெயரும் அற்புதமாக இணைக்கப்பட்டுமிருந்தது...
"இதை எப்போடா பண்ணாய்...??உண்மையிலேயே ரொம்ப சூப்பரா இருக்குடா...
"நேத்து நைட் கொடுத்து காலையிலதான் எடுத்தேன்...உங்களுக்குப் பிடிச்சிருக்கா....??.."
"எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு அர்ஜீன்....ரொம்ப அழகா இருக்கு...தங்யூ சோ சோ மச்..."
"அதான் மேடமே சொல்லிட்டாங்களே..."
"....அவசரமா பண்ணது...உங்களுக்குப் பிடிச்சதில எனக்கும் ரொம்பவே சந்தோசம்..."
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் அருகே வந்த அரவிந்தனின் அப்பா,
"என்ன எல்லாரும் இங்க மாநாட்டை கூட்டிட்டீங்களா...??..என்னபா அரவிந்தா கிளம்பலாமா...?.."
"கிளம்பலாம் பா..."
"அர்ஜீன் நீயும் வாறியாடா...??.."
"இல்லை பெரியப்பா...கொஞ்ச வேலை இருக்கு...நீங்க போயிட்டு வாங்க..."
"உனக்கு எப்போத்தான்டா வேலை இல்லாம இருந்திருக்கு...அரவிந்தா நீ போய் காரை எடு...நான் இதோ வந்திடுறன்.."
"சரிடா நீ கிளம்பு...நானும் என்னோட வேலையை போய் தொடருறேன்..."என்றவாறே இருவருக்கும் பொதுவாக புன்னகையைச் சிந்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அர்ஜீன்..
அவனது மனதிற்கு ஒன்று மட்டும் தெளிவாக விளங்கியது...இனி ஒரு நிமிடம் கூட அங்கே தாமதப்படுத்த முடியாதென்று...துளசி தற்போது அவனுக்கு அண்ணியாகிவிட்டாள் என்பதை அறிவு ஏற்றுக் கொண்டாலும்,மனம் முரண்படத்தான் செய்தது..
அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டவனின் மனமும் அந்தக் கதவைப் போலவே இறுக்கமாக மூடிக் கொண்டது...
"சரி துளசி...நானும் போயிட்டு வந்திடுறேன்...நீ உன்னோட அறுசுவை நிகழ்ச்சியை கன்டினியூ பண்ணு..."
"நீங்க போயிட்டு வாங்க சேர்...உங்களுக்கு அப்புறமாயிருக்கு..."
"என் மேல இருக்கிற பாசத்தில எனக்குத் ஸ்பெசலா எதையும் பண்ணிறாதமா...என் உடம்புக்கு அதையெல்லாம் தாங்கிற சக்தி இல்லை..."என்றவாறே அவளிலிருந்து பத்தடி தூரத்திற்கு தள்ளி நின்று கொண்டான் அரவிந்தன்..
அங்கே துளசிதான் அவன் ஆரம்பிக்கும் போதே அவனை அடிப்பதற்காய் பொருளைத் தேடத் தொடங்கிவிட்டாளே...நல்ல வேளையாக அவளது கையில் அர்ஜீன் கொடுத்த பரிசு இருந்ததால் தப்பித்துக் கொண்டான்...
"இப்போ தப்பிச்சிட்டீங்க...ஆனாலும் உங்களை விட்றதாயில்லை..."என்று அவள் அவனருகே வர முற்படவும்,
"அடியாத்தி...அரவிந்தா எஸ்கேப்..."என கூவிக் கொண்டே அங்கிருந்து பறந்துவிட்டான் அரவிந்தன்...
அவன் விழுந்தடித்து ஓடுவதைக் கண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவள்,அவனோடு எப்படி இவ்வளவு இலகுவாகப் பழக முடிகிறதென்று தன்னைத்தானே வியந்து கொண்டாள்...
அரவிந்தன் அங்கிருந்து கிளம்பி ஐந்து நிமிடங்கள்தான் ஆகியிருந்தன...ஆனால் துளசிக்கோ அவனில்லாத அந்த நிமிடங்கள் மிகவும் வெறுமையாகத் தோன்றின...
அவனது குறும்புத்தனமான ஒவ்வொரு பேச்சுக்களையும் நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தவள்,குக்கரின் விசில் சத்தத்தில் விழித்துக் கொண்டாள்...அதன் பின் அனைத்து வேலைகளையும் மின்னல் வேகத்தில் செய்து முடித்தவள் ,இருபது நிமிடங்களில் மதிய உணவினைத் தயார் செய்து முடித்திருந்தாள்...
அவள் மதிய உணவினைத் தயார் செய்து முடிக்கவும்,அரவிந்தனின் அம்மா கோவில் சென்று வரவும் சரியாக இருந்தது...வீட்டினுள் நுழையும் போதே மூக்கைத் துளைத்த வாசத்தை நுகர்ந்து கொண்டே வந்தவர்,மேசையில் அடுக்கப்பட்டிருந்த வகை வகையான உணவுகளைக் கண்டு அசந்துதான் போய்விட்டார்..
"வாங்க அத்தை...கோவில் தரிசனமெல்லாம் முடிஞ்சாச்சா...??.."
"அதெல்லாம் சிறப்பாவே முடிஞ்சுதம்மா...இதெல்லாம் நீயா செஞ்ச துளசி...??வாசனையே சும்மா வெளிய வரைக்கும் வீசுது..."
"ஆமா மா...காலையிலதான் ஒன்னும் பண்ண முடியல...அதான்..."
"அதுக்கென்னமா...தனியாவே எல்லாத்தையும் பண்ணியா...சொல்லியிருந்தா நான் உதவிக்காச்சும் நின்டிருப்பனே..."
இதற்கான பதிலைக் கூற துளசியை வாயைத் திறக்கும் போதே அர்ஜீனின் தாயார் அவ்விடத்திற்கு வந்திருந்தார்...
"நல்லா கேளு பார்வதி....உன் மருமகள் செஞ்சது கொஞ்சம் கூடச் சரியில்லை..."
அவர் எதைச் சொல்கிறார் என்று புரியாமல் அவரையே குழப்பத்தோடு நோக்கினாள் துளசி...
ESTÁS LEYENDO
கண்ட நாள் முதலாய்
Romanceவிழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் "கண்ட நாள் முதலாய்"