நள்ளிரவு. நிலவு உச்சியைத் தொட்டிருந்தது. இரண்டு வெண்ணிறபுரவிகள் புழுதியைக்கிளப்பிக்கொண்டு பாய்ந்து பறந்துகொண்டிருந்தது. காளிக்கோட்டத்தின் அருகில் வந்ததும், பறந்தோடிக்கொண்டிருந்த குதிரைகள் மெல்ல மெல்ல நடக்கத்துவங்கியது.
"தளபதி!! நீங்கள் இடப்பக்கம் செல்லுங்கள். இரவு நான்காம் ஜாமத்தில் கோட்டையின் தெற்கு வாயிலில் சிந்திப்போம்." என்றாள் கன்யாதேவி, குமரித்தீவின் முடிசூடா இளவரசி..
"ஊர்க்காப்பாளரின் மேல் தான் நம்பிக்கையில்லை. என் மீதுமா? கள்வர்களை பிடிக்க நீங்களே வரவேண்டுமா என்ன??" என்றார் தளபதி, பேரரையன் கவினயன்.
"இல்லை தளபதி!! சில நாட்களாகவே நாட்டில் குழப்பங்களும், கலகங்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது. கள்வர் கூட்டத்தை ஒழித்தால் தான், மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்." எப்போதுமே ஒரு மென்னகையை தாங்கியிருக்கும் அந்தப்பொலிவான, வட்டமுகத்தில் கவலை ரேகை படர்ந்து, இருண்டது.
"வெண்ணாட்டுவேந்தன், தென்னவன் தமிழவேளின் சதிசெயல்களில் இதுவும் ஒன்று.." ஆத்திரத்துடன் மொழிந்தான் கவினயன்.
மெலிதாக சிரித்துக்கொண்டவள், திண்ணிய துகிலைக்கொண்டு முகத்தையும், தலையையும் மறைத்துக்கொண்டாள். அந்த மெல்லிய சிரிப்பே, அனைத்தையும் அவள் தூசு போல உதறிவிட தயாராகிவிட்டாள் எனக் காட்டியது. போர்வீரர்களைப் போல மாறுவேடம் தரித்திருந்தாள்.
"சதிசெயல்களால் நம்மை வீழ்த்திட முடியாது தளபதி!! செல்லுங்கள்." என்றாள் கட்டளையாக.
குமரித்தீவின் படைத்தளபதியும், 'ஏனாதிப்பட்டம்' பெற்றவனுமான பேரரையன் கவினயன், இளவரசி கன்யாதேவியின் கட்டளைக்கு பணிந்து இடப்பக்கம் புரவியை திருப்பினான்.
குமரிநாடு.. குமரித்தீவின் நெடுங்களநாடு, புறமலை நாடு, வெண்ணாடு, தாழைநாடு, குரவ நாடு ஆகிய ஐந்து நிலங்களுக்கும் தலைநகர். ஐந்து சிற்றரசுகளும், கீழ் பணிந்து கப்பம் கட்ட, குமரிநாடு யார் வசமிருக்கிறதோ, அவரே தீவின் பேரரசி.. சட்டதிட்டங்களை விதிப்பவரும் அவரே!

YOU ARE READING
காதலெனுந் தீவினிலே! 2
Historical Fictionsequel story of kathalenum theevinile - 1 சோழதேசத்து இளவரசன் ஆதன்அறனாளனையும், குமரித்தீவின் இளவரசி கன்யாதேவியையும் மையமாகக்கொண்ட, வரலாற்று புனைவு.