"உனக்கு என்னலாம் செய்யனும்னு ஆசை சொல்லு?" வதுவை கேட்டான் பிரவீன்.
"ம்ம்.. கல்யாணத்துக்கு முன்னாடி உங்களோட டேடிங் போனும்னு ரொம்ப ஆசை. நிறைய இடம் சுத்தி பாக்கனும், நிறைய காதலிக்கனும்... "
"எனக்கும் ஆசை தான், கொஞ்ச நாளாவது நல்லா பேசி பழகி அப்புறம் கல்யாணம் பண்ணிக்கனும்னு. என்ன செய்ய நல்லா எக்குத்தப்பா மாட்டிட்டு இருக்கேன் நகரமுடியாம" என பெருமூச்செறிந்தான் பிரவீன்.
ஆனால் அவன் கேட்டதை செயல்படுத்த கூடியவன் என சீக்கிரத்தில் அறிந்தால் வதனா. அவளை சந்திக்க நேரில் வருவதாக சொன்னான். அந்த சனிக்கிழமை இருவரும் ஒரு மாலில் சந்திப்பது என முடிவாயிற்று.
காலையிலேயே சீக்கிராக சைக்காலஜி கிளாஸிற்கு செல்வது போல தயாராகி அவளின் அத்தானை காண புறப்பட்டாள் வதனா. எப்போதும் பஸ்ஸில் இதுவரை சரியான இடத்தில் அவள் இறங்கியதே இல்லை. மற்றவரிடம் எதும் கேட்க கூச்சப்பட்டு பேசாமல் இவளாக கூகுளில் பார்த்து தான் செல்வாள். ஆனாலும் ஒன்று முன் நிறுத்தத்திலோ அல்லது அடுத்த நிறுத்தத்திலோ இறங்குவாள். சில சமயங்களில் அதற்கு நேர் எதிர் பஸ்ஸில் கூட ஏறி நடத்துனர் பாதி வழியில் இறக்கி விட்டதும் உண்டு.
இந்த முறை அப்படி எதும் ஆகாமல் சரியாக போய் சேர வேண்டும் என முன்னரே கிளம்பி விட்டாள். பஸ்ஸில் ஏறி இன்று ஜாக்கிரதையாக நடத்துனரிடம் இறங்க வேண்டிய இடம் வந்தாள் தெரிவிக்க சொல்லி அவர் அருகில் உள்ள முன் இருக்கையில் அமர்ந்தாள். அப்படியும் கூகுளில் ஒவ்வொரு நிறுத்தமாக பார்த்து கொண்டே வந்தாள். இறங்க வேண்டிய நிறுத்தம் அருகில் வர வர ஒவ்வொரு நிறுத்தத்திலும் நடத்துனரை ஏறிட்டு பார்த்தாள்.
அவரும் இது இல்லை என தலையாட்டிக்கொண்டு வந்தார். இவள் இறங்க வேண்டிய இடம் வர
"இங்க தான் மா இறங்கனும், இறங்கிக்கோ. இதுக்கு நேரா போனினா வலது பக்கத்துல மால் இருக்கும்" அவருக்கு நன்றி சொல்லி விட்டு இறங்கினாள் வதனா.