"இப்போ எதுக்கு பார்க்கனும்னு சொன்ன? உனக்கு என்னை பாத்தா வேலை வெட்டி இல்லாதவனு தோணுதா? வர முடியாதுன்னு அவ்வளவு தூரம் சொல்றேன்.... யார் காதுலயோ ஊதின சங்கு எனக்கு என்ன அப்படின்ற நெனப்பு உனக்கு..... நீ வர வரை வாசலிலே காத்திருப்பேன் வரலனா கூட அங்கேதான் இருப்பேன் அப்புறம் உன் இஷ்டம் அப்படிங்கிற.,... நீ இருக்கியே உனக்கு.....திமிருடி உடம்பு முழுக்க திமிர் என்று" சொல்லிக்கொண்டே போக அவளோ தன் போக்குக்கு பையை திறந்து மதிய உணவு பாத்திரத்தை பிரித்து அவன் வாய்க்குள் ஒரு முதல் வாய் உணவை திணித்தாள்.
"சாப்பிடும் போது பேசக்கூடாது உனக்கு தெரியாதா" என்றபடி அடுத்த வாய் உணவையும் அவன் வாய்க்குள் திணித்தாள். அவசர அவசரமாக அவள் கொடுக்கும் உணவை மென்று முழுங்கிக் கொண்டு இருந்தவன் கண்ணில் அவனையும் மீறி கண்ணீர் துளிகள் சுரக்க தண்ணீர் பாட்டிலை அவன் கைகளில் திணித்தாள் பிரசன்யா. தண்ணீரைக் குடித்து முடித்து அவள் கொடுத்த ஒரு டிபன் சாதத்தையும் உண்டு முடிக்கும் போது தான் தன் பசியின் அளவு அவனுக்கே தெரிந்தது.
அடுத்த டிபன் சாதத்தை அவள் எடுத்து உண்ண துவங்கிய போது தனக்கு ஊட்டிவிட்டவளிடம் "கை கழுவிட்டு சாப்பிடுடி" என்ற ஆகாஷை முறைத்துவிட்டு மேலே உண்ண துவங்கினாள். அவனோ அவள் சாப்பிடும் வரை அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
சாப்பிட்டு முடித்ததும் கைகளைக் கழுவி கொண்டே அவனை பார்த்து மென்மையாக புன்னகைத்தவள் அவன் அருகில் மீண்டும் வந்தமர்ந்தாள்.
"மேடம் இப்போவாவது அது என்ன தலை போகிற விஷயம்னு சொல்றீங்களா?" என்று வினவ அவளோ
"வீட்ல வந்து பேசு ஆகாஷ். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்."என்றாள்.
"என்ன கல்யாணமா! யாருக்கும் யாருக்கும்?"
"ஹும்ம் இந்த திருச்சி சவுத் ஜோன் அசிஸ்டன்ட் கமிஷனர்க்கும் எனக்கும்"
"எனக்கு பயங்கரமா கோவம் வரும். உன் கூட அதிகமா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது..... அப்புறம்" இன்று அவன் ஆரம்பிக்க
"உன் வேலைதான் உனக்கு முதல் மனைவி. லஞ்சம் வாங்க மாட்ட. எல்லா பங்ஷனுக்கு நான் மட்டும் தனியாக போற மாதிரி இருக்கும். ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணக்கூடாது. உனக்கு டியூட்டி தான் பஸ்ட்... இன்னும் இத்தியாதி இத்தியாதி.... இதுக்கெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு உன்னால இருக்க முடியாது... அதானே"அவள் முடித்தாள்.
"சர்வ சாதாரணமா சொல்றீங்க ஆனா இதெல்லாம் சரிபட்டு வராது மேடம்...."
"டேய் பிச்சுருவேன் பிச்சு என்ன நெனச்சிட்டு இருக்க? ஆளப் பாரு ஆறு அடி அண்டர்டேக்கர்... எல்லாம் சரிப்பட்டு வரும்"
"சரி சரிப்பட்டு வரலைன்னா அப்ப என்ன பண்றது?"
"நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்"
"உன்னால முடியாதுடி .....அப்புறம் கஷ்டம்"
"என்னால முடியாத நிலையில் நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ"
"என் வேலையில் ரிஸ்க் ஜாஸ்திடி... என்ன பழி வாங்கனும்னு யாராவது வந்தா கூட உன்ன தான் முதலில் டார்கெட் பண்ணுவாங்க..."
"ஊரையே பார்த்துக்க தெரிஞ்ச மனுஷனுக்கு என்னையும் பாத்துக்க தெரியும்"
"சரி உங்க அப்பாட்ட வந்து என்னன்னு கேக்க?"
"உங்க பொண்ணா எனக்கு கட்டி கொடுங்கன்னு கேளு"
"என்னேரமும் ஸ்டேஷன், ரவுடிங்க, கோர்ட் கேஸ்னு அலையுற உனக்கெல்லாம் என் பொண்ணு கட்டி கொடுக்க முடியாதுன்னு சொன்னா...."
"என்னை தவிர உங்க பொண்ணை வேற எவனாலும் பொறுத்துப் போக முடியாதுன்னு சொல்லு"