"சிலநேரங்களில்
எதிர்பாரா சந்திப்புகள் கூட
எத்தனையோ மாற்றங்களை
வார்த்துப்போகிறது வாழ்வில்.."' ப்ரோ, லேட் ஆச்சு; சாப்பாடு தீர்ந்திடும், எழுந்திரிங்க' என்ற அக்கறையான எழுப்பலில் மெல்ல விழித்திருந்தான் பாரி. சற்றே நிமிர்ந்தவனாய் 'தினேஷ், தூங்க லேட் ஆயிடுச்சு, நீ சாப்பிடு' எனக்கூறி திறக்காத கண்களோடு மீண்டும் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் தானாய் விழிப்புற அணைந்து கிடந்த தனது மொபைலை சார்ஜ் போட்டு விட்டு மெல்ல எழுந்தவன், "எப்பத்தான் எல்லாத்தையும் மறந்துட்டு ஒழுங்கா சாப்பிட தூங்க போறீங்கனு தெரியல" என்ற தினேஷின் அதட்டலை அசட்டுச் சிரிப்பில் புறந்தள்ளி பாத்ரூம் நோக்கி நடைபோட்டிருந்தான்.
பாரி, இன்ஜினியரிங் பட்டதாரி. கலகலப்பான பேச்சு, துருதுரு சேட்டைகள் என்றிருந்த அவன் வாழ்க்கை
காதலியின் கட்டாய திருமணத்தால் சுனாமி தாக்கிய கடலோரக் கிராமங்களாய் சூறையாடப்பட்டிருந்தது. தனிமை, ஏமாற்றம், வலிகள் என்றிருந்தாலும் அவள் வந்துவிடுவாள் என்றொரு நம்பிக்கை அவனுள் இழையோடிக் கொண்டிருந்தது. பெற்றோர், உறவினர்கள் உதறி வாழ்ந்தவன் ஊருக்கு வருடம் ஒருமுறையாவது செல்ல நிர்பந்தமாய் நின்றது அவன் தம்பி வளவனின் பாசமே. இப்போது விரும்பி எடுத்த UPSC தவிர அவன் வாழ பிடிப்புகள் வேறெதுவும் இல்லை.குளியலறை சென்றவனின் உச்சந்தலையில் ஷவரின் தண்ணீர் பட்டதும், சட்டென ஆதினியின் நினைவு வந்தவனாய் அரைகுறையாய்க் குளித்து முடித்து வெளியே வந்தான். ஆதினி தன் சொந்த ஊர்க்காரப் பெண், தோழி இனியாவின் ரூம்மெட் என்பதைத் தவிர வேறெந்த தகவலும் அவனிடமில்லை. சென்னையிலிருந்து திரும்பத் தன் சொந்த ஊருக்கே சென்றவள் SI தேர்வுக்காக காலை சென்னை வருவதாய் சொன்னதை மறந்து விட்டதை மூளை சட்டென நினைவேற்றியிருந்தது.
அவசர அவசரமாய் மொபைலில் கால் செய்ய, மறுமுனையில் "உன்னை நம்பி வந்ததுக்கு ஃபோனை ஆஃப் பண்ணிட்டு தூங்கிட்ட தேங்க்ஸ் " என்றவளின் சொல்லில் விரக்தி நிறைந்திருக்க, 'சாரி, சாப்பிட்டு போ, நல்லா எக்ஸாம் பண்ணு" என்பதைத் தவிர வார்த்தை இழந்தவனாய் அழைப்பைத் துண்டித்திருந்தான். அவள் கூறிய "நம்பி வந்தேன்" என்ற வார்த்தை மட்டும் அவனைக் குற்றவாளியாக்கி குமுற வைத்திருந்தது.பசி மறந்தவனாய் அவளது அழைப்புக்காய் காத்திருக்க, மெல்லச் சிணுங்கியது அலைபேசி. தேர்வு முடிந்தது என்றவளிடம் "கோயம்பேடு வந்துட்டு கால் பண்ணு, ஒன்றாய்ச் சாப்பிடலாம்" என்று கூறி தொடர்பைத் துண்டிக்க அவன் கைகளை தினேஷ் ஸ்கூட்டியின் சாவியும் ஹெல்மெட்டும் அணைத்திருந்தது. பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு செல்ல தயாராய் நின்ற தினேஷை மெட்ரோவில் விட்டுவிட்டு கோயம்பேடு நோக்கி வண்டியை முடுக்கினான்.
ஆதினியை ஏற்கனவே இருமுறை சந்தித்திருந்தாலும் இனியா இல்லாமல் அவளைச் சந்திப்பது இதுவே முதல்முறை. காலையில் சாப்பிடாததால் அவளுக்கும் பசி இருக்கும்,செட்டிநாடு ஹோட்டல் சென்று வெளுத்து வாங்க வேண்டும் என்றிருந்தவன் காதுகளில் இடியாய் விழுந்தது பின்னிருக்கையில் இருந்து வந்த நான் 'சைவம்' என்றொரு சொல். அவளுக்காக அசைவத்தை மறந்துவிட்டவன் வண்டி, சத்தமில்லாமல் ஆரியபவனை அடைந்திருந்தது. ஆர்டரைச் சொல்லிவிட்டு காலை நிகழ்வினை மறந்திட்டு இருவரும் ஒருவரை ஒருவர் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்..
சப்பாத்தி அவ்வளவு சுவையில்லை என்றாலும் உரையாடல் மட்டும் இரண்டு மணி நேரத்தைக் கடந்திருந்தது. பெரும்பாலும் கதைப்புகளை நிறைத்திருந்தது பாரியின் காதல் கதைகளே. திருமணமான அவனது காதலிக்கு விவாகரத்து ஆகப்போவதையும், அவ்வாறாகின் இருவர் திருமணம் நடக்கக் கூடும் என்பதையும் அவன் வழியே அறிந்திருந்தாள் ஆதினி.
நேரம் கடந்திருக்க ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நினைப்பில் உரையாடல் சுருங்கியது. வேகமான நடையில் வெயில் மறந்து திருச்சி பேருந்தை அடைந்திருந்தனர். வழியனுப்பி விட்டு ஞாயிற்றுக்கிழமை டிராஃபிக்கை சமாளித்து ஒரு வழியாய் மெல்ல ஹாஸ்டல் வந்திருந்தான் பாரி. தனிமையில் இருந்தவனிடம் ஏதோ ஒரு மாற்றம். எப்பொழுதும் நிறைந்திருக்கும் அவள் முன்னாள் காதலியின் நினைவுகளுக்கு இடைவெளி கொடுத்து அன்று முழுவதும் அவனை நிறைத்திருந்தவை ஆதினி என்றொரு பெயரும், அவளது முகமும் மட்டுமே.
YOU ARE READING
காதலில் "அவன்"; காதலாய் "அவள்".
Romanceகாதல் என்பது ஒரு அழகான தென்றல்.. அது ஒருமுறையோடு மட்டும் தன் வரவை நிறுத்திக் கொள்வதில்லை.. சில நேரங்களில் இரண்டாம் தடவை கூட வாழ்க்கையில் வந்து செல்கிறது.. பாரியின் வாழ்க்கையில் வீசிய மறுதென்றல் அவன் வாழ்க்கைத் தோட்டத்தில் தங்கியதா இல்லை மீண்டும் அ...