தனது தோழியை நோக்கி அமைதியான ஒரு பார்வை வீசிய இஷால், அதீனாவின் கட்டிலுக்கு அடியிலிருந்து ஒரு பெட்டியை இழுத்தெடுத்தாள். இது என்ன? என்பது போல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் அதைக் கொடுத்துத் திறக்கச் சொன்னாள்.
பெட்டியையும் அதன் மீது அச்சிடப்பட்டிருந்த ஆங்கிலப் பெயரையும் பார்த்ததுமே அதீனாவுக்குப் புரிந்து போனது அது கேக் என்பது. கேக்கைக் காண முன்பு நா நீரில் ஊற, புன்னகையுடன் திறந்தாள்.
வெள்ளை நிற வட்ட வடிவமான கேக்கில் பச்சையும் மஞ்சளும் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்க, ஓரத்தில் இருந்த மஞ்சள் பூக்கள் மற்றும் பச்சை இலைகளுக்கு நடுவில் '4 years of friendship' என்று அழகாகப் பொறிக்கப்பட்டிருந்தது.
கண்களே முழுக் கேக்கையும் சாப்பிட்டு விட, இவளது ரியாக்ஷனை எதிர்பார்த்திருந்த இஷாலைக் கட்டிப்பிடித்து மூச்சுத் திணற வைத்தாள்.
"ஆஆ.. விடுடி செத்துடுவேன். இது தான் உனக்கு கடைசி கேக்கா இருக்கும்" என்றவளைப் பயந்து விடுவித்த அதீனா விழித்துப் பார்த்தாள்.
"நீ மறந்துட்டல்ல? இன்னிக்கி தான் நாம ஃபர்ஸ்டா மீட் பண்ண.." என்று முறைக்க ஆரம்பித்த இஷாலின் கையைப் பற்றிக் கொண்டு,
"ஓஓ.. நீ தான் இத எப்பவும் ஞாபகப்படுத்துற. எனக்கு ஏன் மறக்குது?" என்று வருந்தினாள் அதீனா.
"அத விடு. இந்த அனிவர்சரி எல்லாம் இஸ்லாத்தில் இல்ல. நான் சும்மா தான் நேத்து நைட் இந்த கேக்க போட்டேன் உன்னப் பாக்க வரும்போது கொண்டு வரும்வொம்னு. டேட் சரியா செட்டாகிடுச்சி" என்று கூறி சிரித்தாள்.
"எனக்குத் தெரியாம இத கட்டிலுக்குக் கீழ ஒளிச்சு வச்ச இல்லயா?" என்று அதீனா கேட்டதும் இருவரும் சிரித்தனர். பின்னர் கத்தியை இருவருமாகப் பிடித்து கேக்கை வெட்டினர்.
கேக்கையும் தங்களையும் புகைப்படம் பிடித்துப் பத்திரமாக வைத்து விட்டு ஆளுக்கொரு துண்டைக் கதை பேசிக் கொண்டே சுவைத்து மகிழ்ந்தனர். இருவரும் உண்ட பின்பு மீதமாகவிருந்த முக்கால்வாசிக் கேக்கைத் துண்டுகளாக வெட்டி அதீனாவின் வீட்டிலிருந்த அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர்.
YOU ARE READING
இதயத்திலோர் ஆணி
Spiritualஎங்கு கீறல் விழவே கூடாதென இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டாளோ, அங்கு ஆணி அறைந்தாற் போல வடுவொன்று!