ஒவ்வொருவரினதும் வாழ்க்கை ஒவ்வொரு விதமாக நகர்ந்து கொண்டு தான் இருந்தன. தேநீர் அருந்திக் கொண்டிருந்த முஆத் எதையோ எண்ணி தனியே சிரித்துக் கொண்டிருந்தான். திறந்து வைத்திருந்த ஜன்னலினூடே சில்லென்ற காற்று உள்ளே நுழைந்து அவனைத் தொட்டது.
அன்று மாலை நண்பனைச் சந்திக்கச் சென்று விட்டு வந்திருந்ததால் அவனது யோசனையெல்லாம் அதைப் பற்றியே சுழன்று கொண்டிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் நண்பனுக்குத் திருமணம் என்றிருக்க, தினமும் அங்கு தான் இவனுக்கும் வேலை.
ஒருவரை இன்டர்னெட்டில் கண்டு காதல் கொள்வதா? என்ற அதிர்ச்சியிலிருந்து அவன் இன்னும் மீளவில்லை. இப்படியொன்று சாத்தியமா என்பதைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான் முஆத்.
இது போன்ற விடயங்கள் பற்றி அறியாதவனல்ல அவன். தனது நெருங்கிய நண்பனின் காதல் விவகாரம் அவனுக்குள் வியப்பைக் கிளப்பி விட்டிருந்தது. ஏனோ இது சரிவராது என்பது போல அவனது மனம் கூறிற்று.
இஷாவுக்கு அதான் ஒலிக்க இன்னும் சில நிமிடங்களே இருந்த போதிலும் களைப்பினால் அவனது கால்கள் ஒத்துழைக்க மாட்டேனென்று அடம்பிடித்த காரணத்தினால் மஃரிப் தொழுகையை அன்றைய நாளும் ஒத்தி வைத்தான்.
சரியாக ஐந்து நேரமும் தொழுது கொண்டு தான் இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு அவனது அலுவலகத்தில் நடைபெற்ற முக்கியமான கூட்டமொன்றின் போது அவனையறியாமலே மஃரிப் தொழுகை நேரம் கடந்து சென்று விட்டிருந்தது. இஷா அதானைச் செவியுற்ற போது பதறியடித்துக் கொண்டு எழுந்து பார்த்தான்.
கடிகார முகமோ, "இட் ஈஸ் டூ லேட்" என்று நக்கலடித்துக் கோண்டிருந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்பு அதே போல ஏதோ நினைவில் அஸர் தொழுகையைத் தவற விட்டான். ஆரம்பத்திலிருந்தது போன்ற குற்றவுணர்ச்சி இருக்கவில்லை.
இன்று மூன்றாவது முறையாக ஒரு தொழுகையை அலட்சியம் செய்த போது அறவே குற்றவுணர்ச்சி இல்லை. ஒருவரது ஈமான் எப்போது பலவீனமடையும் என்பது எவருக்கும் தெரியாது.
YOU ARE READING
இதயத்திலோர் ஆணி
Spiritualஎங்கு கீறல் விழவே கூடாதென இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டாளோ, அங்கு ஆணி அறைந்தாற் போல வடுவொன்று!