1.ரதி

38 5 1
                                    

பரிசு 1

இரவின் இருட்டில் நிலவு தன் ஒளியை வழங்கிக் கொண்டிருந்தது. அது ஒரு பௌர்ணமி இரவு. வானதி நிலாவை சன்னலோரம் உள்ள உயர் ரக சோபாவில் அமர்ந்து வெறித்துக் கொண்டிருக்க அவளது சகோதரி சரண்யா ஆராய்ச்சிப் பார்வையுடன் அவளின் வரிவடிவை நிலவின் ஒளியில் பார்த்துக் கொண்டிருந்தாள். இவளின் இந்த நிலைக்கும் தூக்கமற்ற இந்த இரவுகளுக்கும் யார் காரணமாக இருக்கக்கூடும்? ஒழுக்கத்தின் திருவுருவான இவளும்தான் எப்படி இப்படி...ஐந்து மாத கருவுடன்! ஏமாற்றியவன் மிகவும் திறமைசாலிதான் போலும். பின்னே ஆண்கள் வந்தாலே எதிர்திசை செல்லும் இவளை எப்படி இந்ந நிலைக்கு ஆளாக்கியிருக்க இயலும்.

இந்த அழகிய பெண்ணிற்கும்தான் எவ்வளவு சோகம். ஐந்து மாத கருவுடன் "அகல்யா டிசைன்ஸ்"ல் வேலை தேடி வந்தவளுக்கு இன்று நிறைமாதம். அதே பேஷன் டிசைனிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சரண்யா ஒரு அனாதை. வானதியின் தாயும் சென்ற மாதம்தான் தவறிவிட்டார். தந்தை தனது எட்டு வயதில் தவறிவிட்டார். மாதாமாதம் வங்கியிலிருந்து இரண்டு லட்சம் வட்டி மட்டுமே வருகிறது. வசதியானவள். ஆனால் மனம் சோர்வுடன் இல்லாமல் இருக்க வேலைக்கு வந்துள்ளாள். பேச்சினூடே தெரிய வந்த விஷயங்கள் இவை மட்டும்தான்தான்.

மிகுந்த அன்பானவள்தான். அனாதையான தன்னை சகோதரியாகவே ஏற்று தன் பெரிய வீட்டில் இலவசமாக அவளுடனேயே தங்க வைத்து சிரித்து பேசுபவள்தான். ஆனால் அதற்கு மேல் அவள் ஏதும் கூறியதில்லை. சொல்ல விரும்பாத அவளை இவளும் வற்புறுத்தியது இல்லை.

அவளது பெயரளவிலான சிரிப்பல்லாமல் நெஞ்சார்ந்து சிரித்த காலங்களில் இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருப்பாள் என அவளும் பலமுறை வியந்திருக்கிறாள். எனவே தன்னால் முடியும்போதெல்லாம் அவளை சிரிக்க வைப்பாள். அவள் வேண்டாம் என சொன்னாலும் குழந்தைக்காக என சத்தானவை சிலவற்றை சாப்பிட வைப்பாள். அடிக்கடி எதிர்பாரா சமயங்களில் அவளது கண்கள் கலங்கும். என்னவென்று கேட்காமல் அவளை தேற்றி ஆறுதல் சொல்வாள். அந்த கடந்தகால நினைவுகள் ஏதோ என சரண்யாவும் ஊகித்திருவாள்.

வானதியின் அழகான சோர்ந்த வரிவடிவை பார்த்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு சொப்பனம் வந்துவிட சரண்யா உறங்கிவிட்டாள். சற்று நேரத்திலேயே திடீரென கூச்சலிடும் ஓசை கேட்டு பதறி எழுந்த சரண்யா நிலைமையை ஊகித்துவிட்டாள். அமைதியே உருவான வானதி பிரசவ வலியில் கத்திக்கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு அமுதா பாட்டியை அழைத்துக் கொண்டு டிரைவரை காரை வேகமாக ஓட்டச் சொல்லி அவர்கள் கன்ஸல்ட் செய்யும் ஜீவா மருத்துவமனைக்கு விரைந்தனர். அக்கம்பக்கத்தினர் அனைவருமே அவரவர் வண்டிகளில் கிளம்பினர். இதுவே தங்கள் வீட்டுப்பெண் திருமணமின்றி கருவுற்றிருந்தால் கொலை செய்திருப்பர். ஆனால் பகவதியின் மகளான வானதி தப்பு செய்திருக்க மாட்டாள் என்ற முழுநம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் செய்துவிட்டாளே. தந்தையுமானவளாக இருந்த பகவவதியும் மாரடைப்பால் இறந்துவிட ஏதோ கெட்டகாலம் என அனைத்தையும் ஒதுக்கி அவளை அன்போடு அரவணைத்தனர். அதிலும் பிள்ளையற்ற அமுதா பாட்டி அன்பைப் பொழிந்தார். அங்கு அதிகம் வசித்தோர் முதியோர், வானதியின் தாயார் பகவதியுடனும் நெருங்கிப் பழகியவர்கள். எனவே சொல்லவா வேண்டும்...சரண்யா வந்தவுடன் தங்களது வானதியுடன் அவள் பழகிய விதத்தில் அவர்களும் நிம்மதியுற்றனர். கலகலப்பான பெண் வாழும் ஆசையையே கைவிட்டப்பின் இப்போதுதானே சற்று நம்பிக்கையோடு நடமாடுகிறாள். எனவே சரண்யாவும் அவர்களுள் ஒருவளானாள்.

ஆப்பரேஷன் அறைக்கு செல்லும் முன்பு சரண்யாவின் கையைப் பிடித்து பயந்த விழிகளில் நீருடன் விடைபெற்றாள் வானதி. அனைவரையும் பதறவைத்தவள் சுமார் இரண்டு மணிநேரத்தில் சுகப்பிரசவத்தில் அழகிய பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். இருவரும் நலம் என அறிந்தபின் அனைவரும் மகிழ்ந்தனர். குழந்தை மிகவும் அழகாக இருந்தது. ஆனால் வானதியின் சாயலிலல்ல அவள். தந்தையின் சாயல்போலும். ரதிபோன்ற குழந்தையையும் பொற்பாவையான அவளையும் தவிக்கவிட்டு பொக்கிஷங்களை இழந்த அம்மடையன் யாரோ என அமுதா பாட்டி புலம்பினார். எல்லோரும் அவளை ஆமோதிக்க, "நான்தான் அந்த மடையன்" என்ற குரலில் அவர்கள் திடுக்கிட அவர்கள் எதிரில் குழந்தையிடமிருந்து ஒரு வினாடியும் அகலாத பார்வையுடன் நின்றிருந்தான் அந்த நெடியவன். கண்களில் ஒளிர்வது என்ன.... கசிவா ?

~~~~~~~~~~~~~தொடரும்~~~~~~~~~~~~~~

Kaadhal Thantha Parisu (காதல் தந்த பரிசு)Where stories live. Discover now