2. காதல் மனம் மாறியதேன்

19 5 1
                                    


          கார்த்திக் அன்றும் எப்போதும்போல மருத்துவமனையில் தன் தாயை சற்று நேரம் பார்த்துவிட்டு அறையிலிருந்து வெளியே வந்துக்கொண்டிருந்தான். கடந்த பதினொன்று மாதங்களாக இதுதான் அவனது தினசரி வழக்கம். தாய் பார்வதியும்தான் எவ்வளவு தைரியசாலி. ஆனால் அந்தப் பொல்லாத நாளால் கோமா  நிலைக்குச் சென்றுவிட்டாரே. அந்த நாள்! எவ்வளவு மாற்றங்கள், எத்தனை இழப்புகள்!

           அவள்... இப்போது எங்கு இருப்பாள்... திருமணம் ஆகியிருக்கும்...குழந்தைகூட உண்டாகியிருக்கலாம். இதில் என்ன வருத்தம் கார்த்திக்..அவளது மகிழ்ச்சிக்காகத்தானே......என யோசித்தவாறே வெளியே வந்தவன் அப்படியே உறைந்துவிட்டான்.

   வானதி! அவளா இது! இவ்வளவு மெலிந்து வாடிப்போய் தெரிகிறாளே...அதுவும்....வயிற்றைப் பிடித்துக்கொண்டு?
     
        உடனே அதிர்ந்தான். வானதி பிரசவ வலியில் இருக்கிறாள். தன்னிலையை  அறிந்தான். அன்று அவன் பேசிய பேச்சுக்கு வேறு என்ன செய்வாள். ஆனாலும் பிரிந்து எட்டு மாதங்கள்தானே ஆகிறது. ஒருவேளை குறைப் பிரசவமோ?

   சற்று நேரம் யோசித்தான். அவளது கணவனாக இருப்பவன் வயதையொற்றி யாரும் அவளுடன் இல்லை. அப்படி என்றால் அவளது கணவன் இன்னும் இங்கு வரவில்லை. உடனே ஒரு முடிவெடுத்தான். பிள்ளை பெற்றபின் எப்படியும் மயக்கத்தில்தானே இருப்பாள். அப்போது அவளது உறவினன் எனப் பொய் கூறி குழந்தையை மட்டும் பார்த்துவிட்டு அவள் எழுமுன் சென்று விடலாம் என முடிவெடுத்தான். அப்படி அங்கு சென்றபோதுதான் அமுதா பாட்டியின் புலம்பலைக் கேட்டு அதிர்ந்தான். உண்மை அவன்முன் விசுவரூபம் எடுத்தது. அந்த ஓரிரவின் பரிசு இந்த குழந்தை.... இவன் குழந்தை இந்த ரதி என அறிந்தான்.

          சரண்யாவோ எரிமலையாய் இருந்தாள். இவன்தான் அவனா! ஆனால் அவன் கண்களின் கசிவு அவளைக் குழப்பியது. வருந்துகிறவனைப் பார்த்து ஒருவேளை இவன் பக்கம் ஏதோ ஞாயம் இருக்குமோ என முதல்முறையாக எண்ணினாள். ஆனால் அவளுக்கு ஒன்று உறுதி. வானதி எந்த தப்பும் செய்திருக்க மாட்டாள். காலம் இவர்களுக்கு எதிராக இருந்ததால் வந்த பிரிவு என்றால் நிச்சயமாக இவர்களை ஒன்றாக சேர்க்க வேண்டும் என மனதில் உறுதி கொண்டாள்.

        கார்த்திக் பேரானந்தத்தில் இருந்தான். அவனது வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் கிடைத்தது. காரணம் புரியாத புது நம்பிக்கை அவனுள் பிறந்தது. டாக்டரிடம் வானதியின் நலம் குறித்து விசாரித்தான். எதிர்காலம் இனிய தொடங்கவிருப்பது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால்....அவள் என்ன சொல்வாள்? இனியும் ஏற்பாளா?

         குழந்தையை தன் கைகளால் ஏந்தினான். குண்டு கண்களால் அவனை விசித்திரமாக பார்த்தது. அவளது குட்டி நெற்றியில் முத்தமிட்டான். அவனது கண்கள் நீரால் மங்கலாக குழந்தையை சரண்யாவிடம் தந்தான். ஒரு பெருமூச்சு விட்டான். இனி எல்லாவற்றையும் தெளிவாக எடுத்துரைத்துவிட வேண்டியதுதான்.  வானதி புரிந்துக்கொள்வாள் என நம்பினான்.

           அமுதா பாட்டி மற்றும் மற்ற எல்லோருக்கும் பெரும் நிம்மதி. இவன்தான் தந்தை என்பதில் எவருக்கும் சிறிதும் ஐயம் இல்லை. குழந்தையின் ஜாடையேதான் சொல்கிறதே. ஏதோ ஊடல் போலும். இனியேனும் வானதி நன்றாக வாழவேண்டும் என மனதில் இறைவனிடம் வேண்டினர். அதே பிரார்த்தனையுடன் மௌனமாக வானதியின் வரவுக்காக காத்திருந்தான் கார்த்திக்.

~~~~~~~~~~~~~தொடரும்~~~~~~~~~~~~~~

Kaadhal Thantha Parisu (காதல் தந்த பரிசு)Where stories live. Discover now