அமுதா பைலை பிடுங்கவும் அவளை எரிச்சலோடு பார்த்தவன், "இப்பொழுது உங்களுக்கு என்ன தான் வேண்டும்? உங்கள் இஷ்டத்திற்கு தான் எல்லாம் செய்வேன் என்று சொல்லவும் நான் தான் ஒதுங்கி வந்து விட்டேன் இல்லை பிறகு எதற்கு என்னிடம் வந்து வீணாக வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று முறைத்தான் இளங்கதிர்.
"ஓஹோ... நீ ஒதுங்கி விட்டதால் நானும் ஒதுங்கி விட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறாயா? என் இஷ்டத்திற்கு தான் நடந்து கொள்வேன் என்று சொன்னதற்காக என் தம்பியிடம் பேசக் கூட எனக்கு உரிமையில்லையா இல்லை அவனுக்கு உத்திரவு இடும் அருகதையை தான் நான் இழந்து விட்டேன் என்று எண்ணுகிறாயா?" என்றாள் அமுதா அவனிடம் நேர்ப்பார்வையாக.
"இப்பொழுது எதற்கு தேவையில்லாத வார்த்தைகளை எல்லாம் விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? நான் எதுவும் அது போன்ற அர்த்தத்தில் பேசவில்லை. சரி... நான் சாப்பிட வர வேண்டும் அவ்வளவு தானே வருகிறேன்!" என்று எழுந்தான்.
மனதிலோ... அடுத்து அக்கா எங்கே சுற்றி வளைத்து வருவாள் என அவனுக்கு நன்றாகத் தெரியும். திருமணத்தை மறுத்து பிடிவாதம் பிடித்த பொழுதே அதை நிரூபித்து விட்டாள் அவள்.
"கட்டியக் கணவனும், பெற்ற பிள்ளையும் இல்லாமல் அநாதையாக நம்மை அண்டி வாழ்பவள் என்பதால் தானே என் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க மறுக்கிறாய்?" என்று கேட்டு அவள் தன்னை நோகடித்து கொண்டது மட்டுமல்லாமல் இவனையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கினாள்.
கதிர் பிறந்த நொடியிலிருந்தே அம்மாவுக்கு அடுத்து தானும் ஒரு தாயாய் அவன் மீது பாசத்தை பொழிந்து வளர்த்தவள் தான் அவள். அவனுக்கு ஒன்றென்றால் துடித்துப் போய்விடுபவள் மீது இவன் வைத்திருக்கும் அளவற்ற பாசத்தை புரிந்து கொள்ளாமல் அவள் குறைத்து பேசவும் இவனுக்கு தான் வருத்தமாகி விட்டது. தன் தமக்கையின் மனதில் இப்படியொரு ஒரு தாழ்வுணர்ச்சி இருக்கிறதா என்று முடிந்தவரை அவள் கூற்றிற்கு பெரிதும் ஒத்துப்போய்விடுவான். இப்பொழுது நடந்த திருமணமும், அதன் தொடர்ச்சியாக வந்திருப்பவளும் தான் இவர்களின் கருத்துவேறுபாடுகளுக்கு முக்கிய காரணியாக இருக்கிறார்கள்.
YOU ARE READING
கண்ணே... கலைமானே...
Non-Fictionபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?