அன்று மாலை ஹிரணியுடைய குழந்தையை பார்க்கவென்று ஜெய்யின் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனை சென்றிருந்தனர்.
அங்கே தாய், சேய் இருவரின் நலம் விசாரித்து, அகிலுடன் சற்று நேரம் கேலிப் பேசி கலகலத்து விட்டு அதே மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.
"அச்சோ... அந்த க்யூட் குட்டி எவ்வளவு அழகு இல்லை, தொட கூட தேவையில்லை பக்கத்தில் விரலை கொண்டு போனாலே சிவக்க ஆரம்பித்து விடுகிறது. அப்பா... என்ன சாப்ட் ஸ்கின்?" என்று வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் கன்னத்தில் கை வைத்தபடி சிலாகித்த மணியை கண்டு நகைத்தார் செண்பகம்.
"ஏய்... நீ முன்னே பின்னே குழந்தையையே பார்த்ததில்லையா இப்படி சிலிர்க்கிறாய்?"
"அய்யோ அத்தை... அக்கம்பக்கத்தில் பார்த்திருக்கிறேன் தான் ஆனால் இப்படி பிறந்த குழந்தையாக இல்லை, ஒரு சில மாதங்களாவது வளர்ந்த குழந்தையாக. இந்த குட்டிப்பாப்பா இருக்கிறாளே... ச்சோ... அவளை விட்டு வரவே எனக்கு மனம் வரவில்லை!" என்று மீண்டும் தான் கண்டு வந்த பட்டுக் குழந்தையின் நினைவில் களிப்புடன் மூழ்கினாள் மணிகர்னிகா.
"ம்ஹும்... இது சரிப்படாது இவளை நீ எப்படியோ சமாளித்துக் கொள்ளடா, நான் போய் தூங்குகிறேன். திலக் வேறு வீட்டிற்குள் வந்து நுழைந்தும் நுழையாததுமாக எனக்கு தூக்கம் வருகிறது என்று போய் படுத்து விட்டான்!" என்றபடி எழுந்து தன்னறைக்கு சென்றார்.
அதுவரை அறையில் ஏதோ ஒரு வேதனையோடு கேவிக் கேவி அழுதுக் கொண்டிருந்த திலக், செண்பகம் வரும் அரவம் கேட்டு வேகமாக கன்னங்களில் வழிந்த நீரை துடைத்து விட்டு திரும்பி படுத்து விழிகளை இறுக்க மூடி தூங்குவது போல் நடித்தான்.
அருகில் வந்தமர்ந்த செண்பகம் அவன் உறங்குவதாக நினைத்து தலையை மென்மையாக வருடி விட்டு மெல்ல தானும் படுத்துக் கொண்டார். எதிர்புறம் திரும்பியிருந்தவனின் விழிகள் மீண்டும் நீரைப் பொழிந்தது.
YOU ARE READING
என்னை தெரியுமா
Mystery / ThrillerHighest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக...