விடிகாலை துயில் களையும்போது
கரத்தில் தேநீர் கோப்பையுடன்
புன்னகை பூத்த - அவர் முகம்!
பக்குவமாய் சமைத்த உணவை
என் வாயருகே ஏந்தியபடி
குவிந்து இருக்கும் - அவர் விரல்கள்!
சேலைக்கட்டின் களைந்த ஓரங்களை
பாதங்குனிந்து சீர்படுத்தி அங்கிருந்தே
சிமிட்டி சிரிக்கும் - அவர் விழிகள்!
தினசரி தரும் வாசல்முத்தம்
கால்நோக செய்திடுமோ என்றே
மிரட்டி மறுக்கும் - அவர் காதல்!
இவையெதுவும் எனக்கு ரசிக்கவில்லை
என்றே நானும் குறைகொள்ள - ஆகா
எத்தணை பாக்கியசாலி என்தோழியென
பூரிக்கும் உன்னிடம்....!
(எப்படி சொல்வேனடி)
துயிலெழுப்பும் காதல் கணவனுக்கு
தலையணையொளித்த போர்வை வைத்தே
சுழித்த இதழுடன் பழிப்புக்காட்டி
கண்ணாம்பூச்சி ஆடவில்லை...!
(எப்படி சொல்வேனடி)
காதலொடு சமைத்ததை நானுனக்கு
குழைத்தூட்டிவிட எனக்கும் சமஉரிமை
வேண்டுமென ஒற்றை காலில்
கொக்காய் கொடிபிடிக்கவில்லை...!
(எப்படி சொல்வேனடி)
பிடித்துவைத்து அவர் ஆசையாய்
எனிதழ் குறிவைத்தெய்த முத்ததை
விளையாட்டாய் கன்னத்தில் தாங்கி
துள்ளியோடி மறையவில்லை...!
(எப்படி சொல்வேனடி)
இல்லை... இல்லை... இல்லை
இப்படி ஆயிரம் இல்லைகள்
எனை நிதம்கொன்று தின்பதை
என் இதயம் ஓலமிடுவதை...!
ஒரு திடீர் விபத்தில்
என் கால்கள் இல்லை
என்றே அறிந்து கொண்ட
நான்!!!