கொரோனாவே..

13 3 0
                                    

கொரோனாவே
உலகை ஆக்கிரமிக்கும் கொடியவனே
என்றுதான் முடியுமோ
உன் கோரத் தாண்டவம்

ஆட்டங்களும் ஓட்டங்களும்
அடங்கி ஒடுங்கி
அகில உலகமுமே
அச்சத்தின் உச்சத்தில் உன்னால்...

வலிமை மிக்க வல்லரசென
வீரம் பேசிய நாடுகள் கூட
வீழ்ந்து கிடக்கின்றன
உன் கோரப்பிடியில்...

பாரபட்சமின்றி
பாரெல்லாம் பரவி - பல லட்சம்
உயிர் குடித்து - நீ
உணர்த்தியதெல்லாம் உலகில்
உயர்ந்தவர்கள் யாருமில்லையென்பதுதான்..

சாதி.. மதம்..
மொழி.. நிறம் எனச்
சண்டை வளரத்தவர்களுக்கெல்லாம்
சமத்துவப் பாடம் புகட்டினாய்

ஆனாலும் துரதிர்ஷ்டம்
உன் வகுப்பிலும்
சொற்கேற்கா பிள்ளைகள்
இருப்பது தான்...

ஏராளமாய் நீ புகட்டிய
பாடங்களெல்லாம்
எம்மில் பலருக்குப் புரிந்தது...

ஆனாலும் கொரோனாவே
சற்று நில்...
இங்கு நீயறியாப் பக்கங்களுமுண்டு
அவற்றை அறிந்து செல்...

உன்னிடமிருந்து
உயிர் தப்ப
ஊரடங்கினோம் அன்று

நாட்கள் வாரங்களாக
வாரங்கள் மாதங்களாகி
மாதங்களும் கடந்து போகின்றன - ஆனாலும்
நீயோ போனபாடில்லை..

அறிவாயா...
உலக சனத்தொகையில்
அதிகம் ஏழைகள் தான்...
நீ ஊரடக்கியதில் அடங்கியது
அவர்களின் பிழைப்புமல்லவா...

உன்னிடமிருந்து உயிர் தப்ப
ஊரடங்கிய பலர்
பசியின் கொடுமையால்
உயிர் துறந்த கதையைக் கேள்...

மண்ணுக்கு இறையாக வேண்டிய
மனித உடல்கள் பல
தீயில் பொசுக்கப்பட்ட கதையைக் கேள்..

கௌரவமாய் வாழ்ந்த பலர்
பிறரிடம் கையேந்தும் நிலைக்கு
ஆளான கதையைக் கேள்..

உன்னால் கூட
அரசியல் ஆதாயம் தேடிய
அரசியல் வாதிகளின்
அசிங்கக் கதைகளைக் கேள்..

கொரொனா எனும் பெயரில்
அரங்கேறும்
கொள்ளைகளின் கதைகளைக் கேள்..

இனி..
மருந்து எனும் பெயரில்
அரங்கேரப்போகும் ஆட்டங்களை
சற்று நினைத்துப் பார்...

கொரோனாவே...

அன்று முகக்கவசம் அணிந்தால்
தீவிரவாதி
இனி
முக்கவசம் அணியதவர்கள் தீவிரவாதிகள்...

போதும் உன் பாடங்கள்...

இனி...
பசியால் மயங்கி விழுந்தாலும்
உதவிக்கு யாரும்
பக்கத்தில் வர மாட்டார்கள்...

****

என் பாதை என் நியதி Where stories live. Discover now