வாசலில் மீண்டும் ஏதோ அரவம் கேட்க, திவாகர் எழுந்து வெளியே வந்தான்.
ஆய்வாளர் அழகேசன் நின்றிருந்தார். லேசாக மூச்சிரைத்தது அவருக்கு.
"சார்?? என்னாச்சு?"
"அந்த ஆதிகேசவன்... அவன் இங்க வர்றதா எனக்கு இன்ஃபர்மேஷன் வந்தது. அதான் திரும்பிவந்தேன். உங்களுக்கு ஒண்ணும் இல்லயே?"
காரேஜ் அருகில் அமர்ந்து விசும்பிக்கொண்டிருந்த வானதி திடுக்கிட்டு எழுந்து வந்தாள்.
"ஆதிகேசவனா? இங்கயா??"
அவள் வினவியபோதே நான்கைந்து பெரிய கருநிற ஸ்கார்ப்பியோ கார்கள் அவர்கள் தெருவுக்குள் நுழைந்து, அவர்களது வீட்டின்முன் நின்றது. ஒன்றிலிருந்து மலையப்பன் இறங்கினான். அழகேசனை அங்கே எதிர்பாராத அதிர்ச்சியில் அவன் திகைத்து நிற்க, மற்றொரு காரிலிருந்து, ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் இறங்கினார்.
வாசலில் நின்றிருந்த மூவரையும் அளவெடுக்கும் பார்வை பார்த்துவிட்டு, மலையப்பனுக்குக் கண்ணைக் காட்ட, அந்த ஆள்தான் ஆதிகேசவன் எனப் புரிந்தது திவாகருக்கு.
நரித்தனமான சிரிப்போடு கைகூப்பியபடி, "வணக்கம்.. சிம்மக்கல் ஆதிகேசவன்னு என்னை சொல்வாங்க.. என்கூட ஏதோ பிணக்கு உங்களுக்கு இருக்குன்னு கேள்விப்பட்டு வந்தேன்... உள்ள போயி பேசலாமா?" என வந்தான் அவன்.
திவாகர் அரண்போல் அவன்முன் நின்று, "பேசலாம். இங்கயே." என்றான்.
பிற கார்களிலிருந்து அடியாட்கள் பத்துப் பதினைந்து பேர் இறங்க, அழகேசன் தனது பெல்ட்டோடு வைத்திருந்த துப்பாக்கியைக் கைக்குக் கொண்டுவந்து சாவதானமாக அசைத்தார்.
ஆதிகேசவன் ஒருநொடி முறைத்தாலும், மறுபடி முகத்தை மாற்றிச் சிரித்துக்கொண்டு, "இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு அநியாயத்துக்கு கோவம் வரும்போல.. அவிக எல்லாரும் நம்ம சொந்தக்கார பயலுவ சார்.. அதுக்கு ஏன் துப்பாக்கிய தூக்கறீக?" என்றான்.