அழகான காலைவேளையில் கதிரவன் தன் கொடையான வெளிச்சத்தை உலகிற்கு பரப்பிக் கொண்டிருந்தான். அந்த வீட்டில் காலையில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. பூஜை அறையில் கடவுளுக்கு தீபாராதனை காட்டி முடித்த கௌரி கிட்சனுக்கு சென்று பாலைக் காய்ச்சி பிறகு காலை உணவு, மதிய உணவு என சமையல் வேலையில் பிஸியாகினார். குட்மோர்னிங் கௌரி என்று வந்த கணவன் சிவக்குமாரிடம் காபியை நீட்டியவர் பசங்க இன்னும் எந்திரிக்கலையாங்க என்றிட ஆமாம் கௌரி என்றார் சிவக்குமார்.
கௌரி சென்று மகனின் அறையைத் திறந்திட குட்மோர்னிங் அம்மா என்று வந்தான் பிரதீபன். இந்தாப்பா பூஸ்ட் என்று மகனிடம் பூஸ்ட் கோப்பையை கொடுத்து விட்டு மகளின் அறைக் கதவைத் திறந்து சென்றார்.
உறக்கத்தில் இருக்கும் மகளை அம்மு எழுந்திரு என்றார் கௌரி. அம்மா ப்ளீஸ் ஒரு ஐந்து நிமிசம் என்றவளின் காதை திருகிய கௌரி மணி பாருடி ஆறு முப்பது ஏழு மணிக்கு ஸ்பெசல் க்ளாஸ் இருக்கு எந்திரிடி என்றிட சோகமாக எழுந்தாள் நமது நாயகி நிலவேனில். ஏன்மா இப்படி பண்ணுறிங்களே என்றவள் எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள். அடுத்த இருபது நிமிடத்தில் பள்ளிச் சீருடையில் தயாராகி வந்தாள் நிலவேனில். ரிப்பன்ல குஞ்சம் கூட சரியா வைக்கத் தெரியாதாடி என்ற கௌரி மகளின் ஜடையை சரி செய்து விட்டு உட்காரு என்று காபி, பிஸ்கட் கொடுத்தவர் இரண்டு லஞ்ச் பாக்ஸை கொடுத்தார். இதில் டிபன் வச்சுருக்கேன், இதில் லஞ்ச் வச்சுருக்கேன் என்றதும் சரிங்க அம்மா என்றவள் அப்பா போயிட்டு வரேன் என்றாள். நான் கொண்டு வந்து விடவா அம்மு என்ற தந்தை சிவக்குமார். இல்லைப்பா நான் என் சைக்கிளிலே கிளம்புறேன் என்ற நிலவேனில் பள்ளிக்கு கிளம்பினாள்.
நிலவேனில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி. தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்றாள். சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளை விட்டு விட்டு வேகமாக தன் வகுப்பிற்கு வந்து சேர்ந்தாள். மச்சி என்று அவளைக் கட்டிக் கொண்டாள் கீர்த்தனா. சொல்லு மச்சி என்றவளிடம் டெஸ்ட்டுக்கு படிச்சியா என்றாள் கீர்த்தனா. ஓஓ இன்னைக்கு டெஸ்ட்டா என்றாள் நிலவேனில். அடி மொக்கை பீஸு நீ படிச்சுருப்பனு தானே நான் படிக்காமல் வந்தேன் என்ற கீர்த்தனாவை முறைத்தவள் தூரத்தில் வந்த அபிநயாவைப் பார்த்தாள். அதான் படிப்பாளிப்புள்ளை வருதே ஆளை அமுக்குடி என்றாள் நிலவேனில்.