"என்ன புஜ்ஜிம்மாவா? பாருடா... அதற்குள் செல்லப்பெயர் எல்லாம் வைத்தாயிற்றா? ம்... இதிலிருந்தே குழந்தையின் வரவை எவ்வளவு ஆவலாக நீங்கள் எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இவள் உங்களை அப்பா, அம்மாவாக அடைய மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்!" என்று குழந்தையின் பிஞ்சு கரங்களைத் தடவி புன்னகைத்தார்.
"இல்லை ஆன்ட்டி... இவள் தான் எங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தந்திருக்கிறாள்!" என்றான் ரமணன் அவள் முகத்தை வாஞ்சையுடன் நோக்கியவாறு.
மெல்லிய சிரிப்புடன் அவன் தோளை தட்டியவர், "சரி நந்தினியை இன்னும் ஐந்து நிமிடத்தில் ரூமிற்கு அழைத்து வந்து விடுவார்கள். டேக் கேர்!" என்று தன்னறைக்குச் சென்றார்.
அறையில் நந்தினி சோர்வாக கண்களை மூடி படுத்திருந்தாள்.
குழந்தையை மெல்ல தொட்டிலில் படுக்க வைத்தவன், அவளிடம் வந்தான்.
அவள் முகத்தில் தெரிந்த களைப்பை கவனித்தவன், ஆதரவாக... மயிலிறகாக தலையை வருடிக் கொடுத்தான்.
அந்த வருடலில் மெல்ல விழிகளைத் திறந்தவள், சோர்வையும் மீறி அவன் முகத்தை ஆர்வமாக நோக்கினாள்.
கனிவாய் புன்னகைத்தவன், குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
"புஜ்ஜிம்மா நம்மிடம் வந்து விட்டாள்!" என்றான் கரகரப்பாக.
பளிச்சென்று முகமும், இதழும் ஒரு சேர மலர அவனை நோக்கியவளின் விழிகள், அடுத்த நொடி அவளைக் காண வேண்டி ஆசையாக சுற்றிலும் அலைப்பாய்ந்தது.
அதைப் புரிந்து கொண்டவன், குழந்தையை எடுத்து அவளருகில் படுக்க வைத்தான்.
அவள் லேசாக தலையை குனிந்து, குழந்தையின் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.
ரோஜா இதழினும் மெல்லிய பட்டு மேனியை பரவசத்தோடு தடவியவளுக்கு உணர்ச்சிவசத்தால் மெய்சிலிர்த்தது.
"இங்கே பார்!" என்று குழந்தையின் வலது கரத்தை அவளிடம் காண்பித்தான் ரமணன்.
YOU ARE READING
சின்ன சின்ன பூவே
Fantasyபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனைக் காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... சின்ன சின்ன பூவே!