அஸ்வினுடன் தனியாக இருப்பதை எண்ணி, மனுவின் மனதில் இனம்புரியா பதட்டம் ஏற்பட்டது.
இதுவரை அவனை சுலபமாக சமாளித்து வந்தவளால், இன்று ஏதோ ஒன்று நடக்கவிருப்பது போல் ஒருவித அச்சம் தோன்றியது.
அவளின் பதட்டத்தை உணர்ந்த அஸ்வின், அவளை இயல்பாக்க அடுத்தடுத்து வேலைகள் கொடுத்து யோசிக்க நேரம் இல்லாமல் பார்த்து கொண்டான்.
சற்று நேரத்தில் அவளும் இயல்பாகி வேலையில் ஒன்றிப் போனாள். இடையில் வந்த சாப்பாட்டு வேளையிலும், அஸ்வின் தான் அவளைக் கவனித்தானே தவிர அவள் அவன் புறம் பார்வையைத் திருப்பவேயில்லை.
வேலைகளின் இடையே மனுவின் மொபைல் ஒலிக்க, எடுத்து காதில் வைத்தவள், "ஆங்... ப்பா... இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் வந்து விடுங்கள். ஓரளவுக்கு வேலை முடிந்து விட்டது, மீதியை நாளைப் பார்த்துக் கொள்கிறேன்!" என்று தன் அப்பாவிடம் சொல்லி விட்டு போனை பேக்கினுள் வைத்தாள்.
'பத்து நிமிடத்தில் கிளம்புகிறாளா?' என்று திகைத்தவன், 'நான் இன்னும் அவளிடம் பேசவேயில்லையே!' என்று மலைத்தான்.
இதற்கு மேல் பொறுமை வேண்டாம் என்று நினைத்தவன், "மனு..." என மெல்ல அழைத்தான்.
அவனிடம் பார்வையை உயர்த்தியவள், புருவத்தை சுருக்கியபடி விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
"ப்ளீஸ்... ப்ளீஸ்... இதை தவிர வேறு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தயவுசெய்து என்னை புரிந்து கொள், எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. உன்னுடைய நட்பு எனக்கு வேண்டும், என் தவறை நான் முழுமையாக புரிந்துக் கொண்டேன்!" என்று அவளிடம் மன்றாடினான்.
'நட்பா? ஹும்...' என்று மனதினுள் பழித்தவள், தன் உடைமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
தன்னிடம் எதுவும் பேசாது அவள் கிளம்பி நடக்க ஆரம்பிக்க, அஸ்வின் தடுமாறிப் போனான். அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை, ஆனால் இச்சந்தர்ப்பத்தை விட்டால் மீண்டும் தனிமை வாய்ப்பது அரிது என்று அவளை பின் தொடர்ந்தான்.
YOU ARE READING
சின்ன சின்ன பூவே
Fantasyபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனைக் காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... சின்ன சின்ன பூவே!