ஃபோனில் அன்று காலையில் அலாரம் அடிக்கவில்லை என்றபோதும் டாணென்று காலை ஐந்தரைக்கெல்லாம் முழித்துக்கொண்டாள் வன்ஷி. தனியாய் அலாரமொன்றும் வைத்து எழ அவசியமில்லாது அவளது biological clockஇன் அழைப்பில் எழுந்திருந்தாள். முந்திய நாள் மாலையும் வீடு திரும்பி தான் கொணர்ந்த உணவை உண்டு உடனேயே தனித்திருந்த தன்னை தானே நொந்து கொள்ள மனமில்லாது உறங்கிப்போயிருந்த அவளுக்கு அந்த பத்து மணிநேர சர்வரோக நிவராண தூக்கத்திற்கு பின் அவளை இறுக வளைத்து கட்டிப்போட்டிருந்த யாவும் சற்றே தளர்ந்திருந்ததைப் போலொரு உணர்வு.
எழுந்துவிடவே கூடாதென்று பிடிவாதமாய் புரண்டு படுத்து தன் கைகளை விருட்டென்று போர்வைக்குள் இழுத்துக் கொண்டாள். கண்ணிமைகளை இறுக ஒன்றை ஒன்று அணைத்துக்கொண்டாலும் தூக்கமில்லை. மறுபுறம் புரண்டு படுக்கலானாள்; பின் ஒட்டு மொத்தமாய் கவிழ்ந்து தலையணைக்குள் தலை புதைத்தும், இறுதியாய் சீராய் சவாசனத்தில்.. ம்ஹூம்.. கொஞ்சூண்டும் தூங்கவிடுவதாய் தெரியவில்லை அவளுக்குள் சுழன்று பெருத்த எதுவோ ஒன்று.
வேலை இல்லை. வெளியிலும், வீட்டிலும் இப்போதைக்கு வன்ஷிக்கு சொல்லிக்கொள்ளும்படி வேலையில்லை. எதற்காக இத்தனை காலையில் உறக்கம் துறந்து ஒரு கண்முழிப்பு, தன்னந்தனியே இந்த மெட்றாசில், இந்த வீட்டில் நிம்மதியாய் துயில் கொள்ளும் இந்த விடியற்காலையில் எல்லாம் ceilingஇல் சுற்றும் விசிறியைப் பார்த்துக்கொண்டு என்று அவளுடைய ஒரு நாளுக்கான அசாதரணமான தொடக்கம். பேசாமல் இப்போது நன்றாக மீண்டும் அந்த நிவாரண தூக்கத்திற்குள் தன்னை தொலைத்து பின் மாலை போல் ஒரு நான்கரைக்கு மேல் எழுந்து, மூஞ்சி அலம்பிக்கொண்டு, பின் ஊரைப் பார்க்க சென்றுவிட்டால் தான் என்ன?
சென்றுவிட்டால், சென்று ஒரு வாரம் அங்கு இருந்துவிட்டு பின் இந்த இயந்திரமாய் சுற்றும் நாட்களுக்கு திரும்பினால்.. திரும்பினால் மீண்டும் அதே வேலை, அதே தன்மேலான வசைப் பேச்சு, அதே அவதியான காலை உணவும், அரைகுறை மதிய உணவும்... வன்ஷி, இப்போது உன் தினசறி வாழ்க்கை இத்தனை அலுப்பாகவா உள்ளது? ஆமென்றால் அதனை மாற்றிக்கொண்டு விடேன். கொஞ்ச நாள் வேறு வேலை. வேறு அலுவலகம், வேறு மக்கள். பின் இந்த அலுப்பும் வேறாகிவிடும்.