14. மனப்பாடம்

264 22 13
                                    



வினோதினியின் விரல்கள் அவனின் கைரேகையை மீண்டும் வரைந்தன. அவனை முழுமையாக தன் நினைவில் ஏற்றிக்கொள்ள அவள் முயன்றுக்கொண்டிருந்தாள். அவள் மீண்டும் மீண்டும் தன் கைரேகையை தொடுவதைக் கண்டு ராஜ் சிரித்தான்.

"என்ன பண்ற?"

"மனப்பாடம் பண்ணிட்டு இருக்கேன்."

"சரி, கைரேகை எதுக்கு? என் முகத்தை மனப்பாடம் பண்ணலாம்ல," எனக் குறும்பாய் கேட்டான்.

வினோதினி ஏறெடுத்துப் பார்த்துவிட்டு எப்பொழுதும் போல் சிரிக்காமல் சற்று தொய்வான குரலில், "மரணத்திலும் இந்த முகம் மறக்காது டா."

ராஜிடமிருந்து இதற்கு எவ்விதமான சாமர்த்திய பதிலும் வரவில்லை. அவளின் ஏக்கம் இவனின் ஆழ்மனதிலிருந்தும் வெளிவர தூண்டினாலும் அவன் கஷ்டப்பட்டு தனக்காக இல்லாவிட்டாலும் அவளுக்காக தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

இருவரும் காலேஜின் ஒரு ஓரத்தில் இருந்த physics பில்டிங்இன் பின்னால் படிகட்டில் அமர்ந்திருந்தனர். எக்ஸாம் எல்லாம் முடிந்து ஹாஸ்டல் ஆட்கள் மட்டும் ஆங்காங்கே இந்த வெயில் காலத்தில் சொற்பமாய் தென்படும் மேகங்கள் போல் சிதரியிருந்தனர். முதலில் வெறுத்து பின் விரும்பி தங்கிய ஹாஸ்டல் இலிருந்து கிளம்புவதற்கு இன்னொரு வாரம் தேவைப்பட்டது. நான்கு வருடமாய் சேகரித்த வகைவகையான பொருட்களும் சுவற்றில் ஒட்டிவைத்திருந்த படப் போஸ்டர்களும் கண்ணாடி மாட்ட சுவற்றில் அறைந்த ஆணியும் என்றோ காணவில்லை என கைவிடப்பட்ட வேட்டியும் என ராஜின் ஹோஸ்டேல் அறை அவனது நான்காண்டு வாழ்க்கையை பொக்கிஷமாய் உள்ளடக்கி வைத்திருந்தன. வினோதினியும் இவனின் நான்காண்டு காலேஜ் வாழ்க்கையை அவளின் கைகளுக்குள் பொத்திவைத்திருந்தாள்.

"என்னை விட்டு ரொம்ப தூரம் போறியோ நு தோணுது."

"கோவையிலிருந்து தஞ்சாவூர் தூரம் தான் போறேன் வினோ."

"இல்ல ராஜ். அதவிட ரொம்ப தூரம் போறியோ நு பயமா இருக்கு. என்னைய மறந்துட மாட்டியே."

அழகியல்Where stories live. Discover now