நான் ஆதி ..ஆதித்யா.. நான் எங்கம்மாவோட வயத்துல இருக்கும் போதே பையன்தான் பொறப்பான்னு எங்க குடும்ப ஜோசியர் அடிச்சு சொன்னாராம்.. அதை நம்பி என் பையன் எல்லாத்துலயும் முதல்ல இருக்கனும்னு ஆதித்யான்னு பேரு வைக்கலாம்னு நினைச்சாங்கலாம்.. ஆனா நான் வந்து பொறந்துட்டேன்.. அப்பவும் எங்கப்பா பொண்ணா இருந்தா என்ன இவதான் என் பையன்னு சந்தோசமா எனக்கு இந்த பேரு வெச்சாருன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும்..
எங்கப்பாவுக்கு நான் தான் உசிராம். யார்கிட்டயும் கொடுக்காம என்னை கைல வெச்சு எந்நேரமும் கொஞ்சிட்டே இருப்பாங்களாம்.. எனக்கும் எங்கம்மா சொல்ல சொல்ல அப்பாவ பார்க்கனும்னு ஆசையா இருக்கும்..ஆனா அவர் எனக்கு ரெண்டு வயசு இருக்கும்போது நடந்த மஞ்சுவிரட்டுல இறந்துட்டாரு. அதுனால எங்கப்பா மேல எனக்கு செம கோபம்.. குடும்பத்த விட அப்படி என்னதான் விளையாட்டுல இருக்கோ. எங்கள அநாதையாக்கிட்டு அவர் பாட்டுக்கு ஜாலியா போயிட்டாரு..
பாவம் எங்கம்மா சின்னதா டீக்கடை வெச்சு என்னையும் அக்காவையும் படிக்க வெச்சாங்க.. நான் சின்ன பொண்ணா இருக்கறதால அம்மாவும் அக்காவும் என்னை ரொம்ப செல்லமா வளத்தாங்க.
அதும் எங்கம்மாக்கு நான் வைக்கற டீ தான் ரொம்ப பிடிக்கும். ஊருக்கே எங்கம்மா டீ வெச்சாலும் எங்கம்மாக்கு நான் தான் டீ வெச்சு கொடுப்பேன்..
நானும் படிச்சு வேலைக்கு போய் எங்கம்மாவ நல்லா பாத்துக்கனும்னு ஆசைப் பட்டேன்..ஆனா எங்கம்மாவும் எங்கள விட்டு போயிடும்னு நினைக்கவே இல்ல.. எங்கம்மா இருக்க வரை கஷ்டம்னா என்னனே எங்களுக்கு தெரியாது. ஆனா அதுக்கப்ரோம் அதுவே பழகிடுச்சு.. ஆனா எவ்ளோ கஷ்டம் வந்தாலும் எங்கம்மா எனக்கும் எங்கக்காவுக்கும் ஒரே மாறி வாங்கி வெச்சிருக்க ஓம் டாலர் போட்ட ரெண்டு பௌன்னு தங்கச்சங்கிலியையும் கடையையும் எதுக்காகவும் விக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணுனோம்..
என்னோட ஸ்கூல் லைப பத்தி சொல்றக்கு பெரிசா ஒன்னுமில்ல.. 9 வது வரை படிச்சிருக்கேன்.பானுக்காக்கு ஆறு மாசம் போச்சுனா காலேஜ் படிப்பு முடிஞ்சிரும். அதையேன் பாதிலயே நிறுத்தனும்னு நான் டீக்கடைய கவனிக்க ஆரம்பி்ச்சேன். கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு.. ஆனா அம்மா இருக்கறப்ப பக்கத்துல இருந்து என்னென்ன எப்படி செய்யனும்னு கத்துகிட்டதால அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன்.. நிறைய கஷ்டப்பட்டேன்.