பரமேஸ்வரி அத்தையின் மகள்

831 1 0
                                    

ரமேஸ்வரி அத்தை சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். அசோக் நகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியை அடுத்த வலது, பிறகு இடது வளைவில் உள்ள மெடிக்கல் ஸ்டோர், பல் மருத்துவமனையைத் தாண்டி நான்காவது பில்டிங். அத்தை சொன்ன மாதிரியே செங்காமட்டை கலரில் பெயின்ட் அடித்திருந்த அப்பார்ட்மென்ட்டை லட்சுமணனால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது. வாசலில், அடையாளத்துக்குச் சொல்லப்பட்டிருந்த மாநகராட்சியின் பச்சை வண்ணக் குப்பைத் தொட்டியும் இருந்தது. ''இந்த பில்டிங்தான்'' என்றபடி ஆட்டோவை நிறுத்தி இறங்கினான். காம்பவுண்டையொட்டி அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட வேண்டியிருந்தது.

''யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க?''

''C3. வசந்தா பாலசுப்பிரமணியம் வீடு'' என்று பதிலுரைத்தபடி பதிவேட்டில் 'உறவினர்' என எழுதிக் கையெழுத்திட்டான்.

அப்போது அவனை அறியாமல் சிரிப்பு வந்தது. திருநெல்வேலியில் இருக்கும்போது நேதாஜி போஸ் மார்க்கெட்டில் உள்ள நூலகத்துக்குச் சென்று அவனும் வசந்தாவும் பதிவேட்டில் கையெழுத்திடுவதை நினைத்துப் பார்த்தான். கையெழுத்து போடுவதற்காகவே அவனும் வசந்தாவும் நூலகத்துக்குச் செல்வார்கள். 'லைப்ரரிக்குப் போறோம்' என்றால், இருவர் வீட்டிலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

லட்சுமணனைவிட வசந்தா ஆறு வயது பெரியவள். கனகராய முடுக்கு தெருவில் உள்ள 'எட்டுக்குடி' வளைவில் எதிரெதிர் வீட்டுக்காரர்கள். ''லட்சுமணன் கைப்பிள்ளையாக இருக்கும்போது அவனை ஒக்கலிலிருந்து இறக்காமல், பாவாடை சட்டை போட்டிருந்த வசந்தாதான் தூக்கிச் சுமந்தாள்'' என்பார்கள். ''கைப்பிள்ளன்னாலும் நல்லா தண்டியா இருப்பான். இவளுக்கும் ஏளெட்டு வயசுதாம்ளா இருக்கும். தூக்க முடியாம தூக்கிக்கிட்டுத்தான் ரேஷன் கடைக்கு, கோயிலுக்கு, ஆஸ்பத்திரிக்குன்னு அலைவா பாத்துக்கோ'' என்றும் சொல்வார்கள். லட்சுமணனை அவன் அம்மா குளிப்பாட்டித் துடைத்து முடித்ததும், பவுடர் போட்டுவிடுவது, கண் மை இடுவது, சட்டை போடுவது எல்லாமே வசந்தாதான். லட்சுமணனின் தாய் அருகில் நின்று பார்ப்பதோடு சரி.

கதைகள்.Место, где живут истории. Откройте их для себя