குளிக்காமலும் தரிசிக்கலாம்

25 1 0
                                    

தேசபக்தி தவிர அனைத்தையும் துறந்தவர் காஞ்சிப்பெரியவர். விவேகானந்தரைப் போல் சிறந்த தேச பக்தராக விளங்கினார்.
1922ல், திருச்சி பகுதியில் பெரியவர் யாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது சுதந்திரத் தியாகிகளான தீரர் சத்தியமூர்த்தி, சி.ஆர். தாஸ், ஏ. ரங்கசாமி ஐயங்கார், எஸ். சீனிவாச ஐயங்கார் உள்ளிட்ட பலர் அவரிடம் ஆசி பெற்றனர்.

ஒருநாள், காந்தியால் 'என் மகனைப் போன்றவர்' எனக் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரியவரான ஜம்னாலால் பஜாஜ், பெரியவரைத் தரிசனம் செய்ய வந்தார். அவருடன் வந்தவர் ராஜாஜி.

ஜம்னாலால் பெரியவரைத் தரிசிக்க குடிலுக்குள் வந்தபோது ராஜாஜி உடன் வராமல் வெளியே நின்றுவிட்டார். அதற்கு காரணம் இருந்தது.
ஜம்னாலாலிடம் 'உடன் யார் வந்திருக்கிறார்கள் என விசாரித்தார் சுவாமி. ராஜாஜி வந்திருப்பதாக சொன்னதும், அவரை உள்ளே வரச் சொல்லுங்கள் என்றார். ராஜாஜி தயக்கத்தோடு உள்ளே வந்து சற்றுத் தள்ளி நின்றுகொண்டார்.

ராஜாஜியைச் கனிவோடு பார்த்த சுவாமி நீ இன்று அதிகாலையே எழுந்து பல்வேறு கடிதங்கள் எழுதுகிற அவசர வேலையில் ஈடுபட்டிருந்தாய் இல்லையா வேலைப்பளு காரணமாக இன்னும் நீ குளிக்கக் கூட இல்லை. ஜம்னாலால் அழைத்தவுடன் அப்படியே புறப்பட்டு வந்துவிட்டாய். ஸ்நானம் செய்யாமல் எப்படி சுவாமிகளை தரிசிப்பது, ஆசாரக் குறைவாயிற்றே என்று நினைத்துத்தானே வெளியே நின்றாய் என்றார்.

ஆமாம் சுவாமி என்றார் ராஜாஜி தயக்கத்துடன். நீங்களெல்லாம் உங்கள் வாழ்க்கையை தேச விடுதலைக்காக அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறீர்கள். தேசம் வேறு, தெய்வம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். தேசபக்தர்கள் சின்னச் சின்ன ஆசாரங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தேசபக்தி என்ற உணர்வு உங்கள் உடலையும் மனத்தையும் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் மனமும் உடலும் எப்போதும் சுத்தமாகவே இருக்கிறது. நீ எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். தயங்கத் தேவையே இல்லை. புரிந்ததா, உனக்கு மட்டுமல்ல, தங்களைப் பரிபூரணமாக தேச சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற தியாகிகள் எல்லோருக்கும் இது பொருந்தும் என்றார் பெரியவர்.

பெரியவரின் அன்பைக் கண்ட ராஜாஜியின் விழிகளில் பக்திக்கண்ணீர் திரையிட்டது.  

கதைகள்.Where stories live. Discover now