அந்தி சாய்ந்த நேரம் செங்கதிர்கள் பூமியை நிரப்ப பறவைகளும் ஆதவனை வழியனுப்பி விட்டு தத்தம் உறைவிடத்திற்கு சென்று கொண்டு இருந்தன.
இங்கு ஒருத்தி மட்டும் இருப்பு கொள்ளாமல் தன் அறையை அளந்து கொண்டு நகங்களுக்கு தண்டனை தந்து கொண்டும் இருந்தாள்.
"குழலி... குழலி.. " தன் தாயின் குரல் அவள் செவியை தீண்டியதாக தெரியவில்லை. அவள் அருகே வந்த அவள் அம்மா ஓங்கி ஒன்று அவள் தலையில் வைத்தாள்...
"ஸ்ஸ்ஸ்ஸ்...ஆஆஆ" தலையை தேய்த்து கொண்டு இடையில் கை வைத்து முறைக்கும் தன் அன்னைக்கு ஈஈஈஈ என பல் வரிசை காட்டினாள்.
" என்ன அம்மா.. ஏன் குட்டினாய்"
" எவ்வளவு நேரமாக உன்னை அழைப்பது.. அப்படி எந்த லோகத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்தாய்"
" அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா. நீ எதற்கு அழைத்தாய் அதை சொல் "
" நாளைக்கு மாப்பிளை வீட்டார் வருகிறார்கள், உன் நினைவில் உள்ளது தானே? சொன்னது எல்லாம் நியாபகம் உள்ளது அல்லவா? "
" அய்யோ அம்மா இதையே நீ ஆயிரம் முறை கூறி விட்டாய். எல்லாம் நியாபகம் உள்ளது , நான் சமத்தாக இருப்பேன் அதை பற்றி நீ ஒன்றும் அச்சம் கொள்ளாதே சரியா ?"
அவள் மேல் நம்பிக்கையில்லாமல் அவள் அன்னை அவளை ஏற இறங்க பார்த்து விட்டு " பகவானே காப்பாற்று " என்று முணுமுணுத்து விட்டு அவ்விடம் விட்டு அகல முற்பட்டார்
அவர் தோளை பற்றியவள் "அம்மா நீ ஒன்றும் கவலை கொள்ளாதே கடவுள் உன் அருமை மகளை கை விடுவாரா என்ன ?"
"உன்னை பற்றி யாரடி கவலை கொண்டது, சண்டி ராணியான உன்னிடம் சிக்க போகும் அந்த பிள்ளையை நினைத்து தான் கவலையாக உள்ளது " என்று பெருமூச்செறிந்தார் திருநிறைச்செல்வி
தன் தாயின் பதிலால் சினம் கொண்டவள் தன் முட்டை கண்ணை உருட்டி "அம்மாஆஆ... " என கத்தினாள். செல்வியோ இவள் இமை மூடி திறக்கும் முன் அவ்விடம் விட்டு அகன்றிருந்தார்.
" என்னடி உன் அம்மா உன்னை இப்படி பரிகசித்து விட்டு செல்கிறார்"
"இருக்கட்டும் இருக்கட்டும்.. எனக்கும் காலம் வரும் பார்த்துக்கொள்கின்றேன் அப்பொழுது"
" என்னடி நாளை மாப்பிளை வருகிறார் போல" என்று கண்ணடித்தாள் அவள்
" ம்ம்ம்... வரட்டும் வரட்டும். ஒரு கை பார்க்கிறேன்"
" அடியே உன் வாலை கொஞ்சம் நாளை சுருட்டி வைத்துக்கொள் . பிறகு அம்மாவிடம் நன்றாக வாங்கி கட்டி கொள்வாய் "
" சரிங்க அம்மணி தங்கள் சித்தபடியே ஆகட்டும், முயற்சி செய்கிறேன் "என்று கலுக்கி சிரித்தாள் பூங்குழலி
இவளிடம் மல்லு கட்ட முடியாது என்று அறிந்த இவள் மனசாட்சியும் மெல்ல உறங்கி போனது.
( என்ன முழிக்கிறீர்கள் ? 😉
இவ்வளவு நேரமும் நம் நாயகி அவளுடன் தான் மனதில் பேசிக்கொண்டு இருந்தாள்😝. இது அவ்வப்பொழுது நிகழும் நிகழ்வு தான் என்பதால் இப்பொழுதே நீங்களும் பழகி கொள்ளுங்கள்)
-------------------------------
YOU ARE READING
காத்திருந்த விழிகள்
Historical Fictionநிகழ்காலத்தின் அழகு இறந்த காலமாகும் போது புலப்படும் காதலில் பிரிவும் சுகம் தரும் இன்ப தருணங்களை நினைத்துக்கொண்டே கூடலை எதிர்நோக்கையில்... (இங்கு கதிரவனை எதிர்நோக்கும் ஒரு கமலம்... திங்களை காண துடிக்கும் ஞாயிறு)