"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு"ஒளிரும் சூரிய ஒளி அவள் முகத்தில் பட, கண்களை கசக்கிக் கொண்டு கண் விழித்தாள் மீரா. அழகாக அவளை அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த அவள் மகளை பார்த்தாள், அவள் முகம் பார்க்க மிகவும் அழகாக இருந்தது. மீரா அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு, கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள்.
மணி ஒன்பதை கடந்திருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவள் மெதுவாகவே எழுந்தாள். அதே சமயம் அவள் கைப்பேசி ஒளிர, அதை எடுத்து பார்த்தவள் முகம் மலர்ந்தது.
"ப்ரியா! எப்படி இருக்க?" மீராவின் குரலில் உற்சாகம் தெரிய, ப்ரியாவும் ஆர்வமாக பேச தொடங்கினாள். "நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? என்னோட மருமகள் எப்படி இருக்கா? என்ன பண்ணுறா?" ப்ரியாவும் அதே ஆர்வத்துடன் கேட்டாள்.
"ரெண்டு பேரும் நல்லா இருக்கோம், தூங்கிட்டு இருக்கா அவ. என்னோட குட்டி பையன் எப்படி இருக்கான்?" என்றாள் புன்னகையுடன்.
"அவன் எழுந்துட்டான். உன்கிட்ட பேசுறேனு சொன்னதும் என் பக்கத்துல தான் உக்காந்து இருக்கான். இரு வீடியோ கால் போடுறேன்" என்று கூறி வீடியோ காலில் அவளை அழைத்தாள்.
"ஹாய் ஆதி மா! எப்படி இருக்கீங்க?" மீரா ஆசையாக அவன் முகம் பார்க்க, "நல்லா இருக்கேன் அத்தை. தியா பாப்பா எங்க?" அவன் மழலை குரலில் கேட்டான். "இதோ தூங்கிட்டு இருக்கா!" என்று கூறி தியா முகத்தை காட்ட, ப்ரியா அவள் முகம் பார்த்து ஆசையாக முத்தமிட்டாள்.
"ரொம்ப நேரம் வைக்காத, கண்ணு பட்டுறும் குழந்தைக்கு" என்றாள் ப்ரியா. "சரி! சரி! வருண் எங்க?" மீரா கேட்க, "அவரு ஆஃபீஸ் கிளம்பிட்டாரு" ப்ரியா பதில் அளித்தாள். "ஞாயிற்றுக்கிழமை என்ன ஆஃபீஸ்?" மீரா கேட்டாள். "அவருக்கு டெய்லி ஆஃபீஸ் வேலை தான்" ப்ரியா சோகமாக பேசிக் கொண்டு இருக்கும் போது தியா கண் விழித்தாள்.
"அம்மா!" என்று மீராவின் மடியில் அமர்ந்து கொண்டாள். "தியா! அங்க பாரு. ப்ரியா அத்தை" மீரா கைபேசியை காட்டி கூற, புன்னகையுடன் அவர்களிடம் பேசினாள் தியா. தியா முகத்தை பார்த்ததும் ப்ரியா மற்றவை அனைத்தையும் மறந்து தியாவிடம் பேச தொடங்கினாள்.
YOU ARE READING
என் உறவானவனே
Romanceஅந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இர...