அத்தியாயம் - 2

4.9K 150 15
                                    

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

மீரா அவள் வேலைகளில் கவனமாக இருந்தாள். திடீரென்று ஏதோ நினைவு வர, கடிகாரத்தை பார்த்தாள். "அட கடவுளே! மணி ஐந்தரை ஆயிடுச்சே" என்று பதட்டமானாள். காலையில் கமலா அவருக்கு சாயங்காலம் வேலை இருப்பதாக கூறி, அவளை நேரமாக வர சொன்னது நினைவுக்கு வந்தது.

அவசரமாக இருந்த வேலைகளை முடித்துவிட்டு கிளம்ப ஆயத்தமானாள்.

"என்ன மேடம் ரொம்ப பரபரப்பா இருக்கீங்க?" கேள்வி கேட்டுக் கொண்டு அதிதி மீராவின் இடத்திற்கு வந்தாள். "ஹே அதி!" மீரா அவளை பார்த்து சிறு புன்னகை செய்தாள், ஆனால் அவள் கவனம் முழுவதும் கிளம்புவதில் இருந்தது.

"பேசுறதை கூட கவனிக்காம அப்படி என்ன வேலை. எல்லா வேலையும் அப்படியே விட்டுட்டு வா, கேன்டீன் போகலாம். போய் நல்லா சாப்பிட்டுட்டு வந்து அப்புறம் வேலை செய்யலாம். அப்போதான் நீ பதட்டப் படாமா வேலை செய்வ. இப்போ வா" என்று கூறி அதிதி அவள் கரங்களை பற்றி அழைத்தாள்.

"சாரி அதி! நான் வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். நீ போய் சாப்பிட்டுட்டு வா" மீரா கூற, "இப்போவே கிளம்புறயா? எப்பவும் ஏழு மணிக்கு தானே கிளம்புவே!" அதிதி ஆச்சரியமாக வினவினாள்.

"இன்னிக்கு கமலா அம்மாக்கு கொஞ்சம் வேலை இருக்குனு சொன்னாங்க. அதான் என்னையும் சீக்கிரம் வர சொன்னாங்க" மீரா காரணத்தை கூறினாள். "ஓ! சாரி மீரா! நான் பேசி லேட் பண்ணிட்டேன். நீ கிளம்பு. அப்புறம் வீட்டுக்கு போன உடனே சாப்பிடணும். நீ மதியமும் சாப்பிடல. புரியுதா?" அதிதி கூற, மீரா புன்னகைத்தாள். "சரிங்க மேடம்!" மீரா புன்னகையுடன் கூறி விட்டு, கிளம்ப முற்பட்டாள்.

"பை அதி! நீயும் சீக்கிரம் வீட்டுக்கு போயிரு" என்று கூறி விட்டு அவள் பேருந்தில் ஏறி சென்றாள். அதிதி அவளை அனுப்பிவிட்டு, மீண்டும் அலுவலகத்துக்கு திரும்பினாள்.

அதிதி மீராவின் தோழி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீரா வேலை செய்துக் கொண்டிருந்த அலுவலகத்தில் அவளும் வேளையில் சேர்ந்தாள். ஆரம்பத்தில் இருந்தே மீராவுக்கு அதிதியை மிகவும் பிடித்து போனது. இருவரும் மிக விரைவில் நல்ல தோழிகளாகி விட்டனர்.

என் உறவானவனேDonde viven las historias. Descúbrelo ahora