அனைவர் முகத்திலும் இருந்த புன்னகை மறைந்து தனக்காக அவர்கள் வருந்துவதை கண்டு மனதில் விரக்தி பிறக்க, வெறுமையாக இதழ்களை விரித்தான் யாதவ்.
"வேண்டாம் அக்கா... இருக்கின்ற மகிழ்ச்சியான சூழ்நிலையை கெடுக்கவென்று அவளை வேறு எதற்காக இங்கே அழைத்து வரச் சொல்கிறாய். எந்த சச்சரவும் வேண்டாம் என்று தான் நானே இவ்வளவு நேரமாக கீழே ஒதுங்கி இருந்தேன். சரி நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து அனைவரும் ஓய்வாக இருக்கிறீர்கள் என ஆசையாக பேச வந்தால் வம்பை விலைக் கொடுத்து வாங்கப் பார்க்கிறாயே!" என்றான் அவன் சலிப்புடன்.
"அதற்கில்லைடா யாது... ஒரு போட்டோவிற்கு தானே!"
"அதெல்லாம் எதுவும் வேண்டாம்... ஏற்கனவே அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து மிகவும் வயிறெரிந்து போய் யாரை எந்த நேரம் குத்திக் கிழிக்கலாம் என்பது போல் வெறிப்பிடித்து காத்திருக்கிறாள். அதற்கு நாமே வேறு ஆரத்தி எடுத்து தனியாக வரவேற்க வேண்டாம்!" என்றான் உறுதியாக.
"அத்தான்! நான் சொல்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள். இப்படியே ஒவ்வொன்றுக்கும் அவர்கள் மனம் நோகப் பேசுவார்கள் என பயந்து பயந்து ஒதுங்கியிருந்தால், அவர்களுக்கு தான் என்கின்ற அகங்காரம் அதிகமாகி கொண்டே தான் போகும். நியாயமே இல்லாமல் ஒருதலையாக விட்டுக் கொடுத்தலும் வீண் தான். இது உங்கள் ஒரே தம்பியின் திருமணம் ஏன் ஒதுங்கி ஒதுங்கி இருக்கிறீர்கள்? அப்படி என்ன பேசி விடுவார்கள்? பேசி விட்டுப் போகட்டுமே... இங்குள்ள அனைவருக்கும் அவர்களை பற்றி தெரியும் என்பதால் யாரும் யாரைப் பற்றியும் தவறாக நினைக்க மாட்டார்கள். நீங்கள் அழைத்து வாருங்கள், குழந்தைகளும் பாவம்... வந்ததிலிருந்து தனியாக அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்கள்!" என்றாள் அஸ்வதி.
"இல்லைம்மா... அவள் உடையளவில் மட்டும் தான் நாகரீகம் உள்ளவள், உள்ளத்தில் அது சற்றும் கிடையாது அதற்கு தான் யோசிக்கிறேன்!" என்று யாதவ் மேலும் தயங்க, எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என அவனை சமாதானப்படுத்தி லேசான வற்புறுத்தலோடு அனுப்பி வைத்தாள்.
YOU ARE READING
அழகே அழகே... எதுவும் அழகே!
General Fictionபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் எ...