மித்ராவின் மனம் படபடவென அடித்துக் கொண்டது. 'எனக்கும் ஓர் திருமணமா? நான் அவனுக்கு துரோகம் பண்றேனா? ஒருத்தனோட வாழ்க்கையை அநியாயமா அழிக்க போறேனா? கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?' செய்வதறியாது உள்ளுக்குள் அழுது புலம்பினாள்.
"மித்து கண்ணா"
அம்மாவின் அன்பான அழைப்பு ஜன்னலினுடே வெளியே வெறித்தவளின் கவனத்தை சிதைத்தது.
"என்னடி ரெண்டு மணி நேரத்துல கல்யாணத்தை வைச்சிக்கிட்டு அலங்காரம் பண்ண போகாம கண்ணு கலங்கிட்டு நிக்கிறே?"
தான் அழுதிருக்கிறோம் என்பதை அப்பொழுது தான் உணர்ந்தவளாய் கண்களை துடைத்துக் கொண்டாள்.
"அம்மா! எனக்கு கல்யாணம் வேண்டாம்மா... ப்ளீஸ்மா...." மீண்டும் கண்கள் குளமாகின.
மகளின் சொல் கேட்ட சாந்தியம்மாவின் முகத்தில் இப்பொழுது காளி குடியேறினாள்.
"மூடுடி வாயை. எவ காதுலயாவது விழுந்து தொலைக்க போகுது. உன் பேச்சை கேட்டு காலங்கடத்தி இப்ப இருபத்தி எட்டு வயசுல வந்து நிற்கிற. இந்த வயசுல உனக்கு இப்படி ஒரு சம்பந்தம் அமைஞ்சதே பெரிய விஷயம். வாயமூடிக்கிட்டு தாலிய ஏத்துக்கோ. எல்லாம் சரியாகிடும்."
"அம்மா நான் சொல்றத புரிஞ்சிக்கோமா ப்ளீஸ்....."
"மித்ரா அம்மா உனக்கு எது செஞ்சாலும் நல்லதா தான் செய்வேன். மாப்ள புடிக்கலன்னு சொல்லு. வேற மாப்ள பாக்குறேன். இல்ல வேற எவனயாச்சும் புடிச்சிருக்கா சொல்லு. அவனையே கட்டி வைக்கறேன். இப்படி கல்யாணமே வேண்டாம்னு நின்னா என்ன அர்த்தம்?"
"அம்மா நான் சொல்றது...."
"நீ எதுவும் சொல்ல வேணாம்டியம்மா. ஊர் முழுக்க பத்திரிகை கொடுத்து கல்யாணம் வரைக்கும் வந்தாச்சி. அப்பா இல்லாத பொண்ணாச்சேனு பாசத்தை காட்டி வளர்த்தது எங்க தப்பு தான். அதுக்காக ஊர் முன்னாடி எங்களை அசிங்கப்படுத்தாதே. எங்க மேல கொஞ்சமாச்சி பாசம் ஒட்டிக்கிட்டு இருந்திச்சின்னா முகத்தை கழுவிக்கிட்டு அலங்காரம் பண்ண போ. இல்ல கல்யாணம் வேண்டாம்னு நீ நின்னா அது உன்னிஷ்டம். அப்புறம் நீ எங்கள உயிரோடு பார்க்க முடியாது." உறுதியாய் கூறி நகர்ந்தார் சாந்தியம்மா.
YOU ARE READING
விடியலை நோக்கி
Romanceதிருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து மித்ராவை உருகி உருகிக் காதலிக்கும் ஆதவன், மித்ரா தன்னை விரும்பவில்லை என அறிந்து முதலிரவில் அதிர்ச்சியடைகின்றான்...