ஆதவன் - மித்ரா திருமணம் நடைபெற்று நான்கு வாரங்கள் ஓடிவிட்டன. அன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே இருந்தனர்.
"ஆதவா" காலை உணவு வேளையில் இடையிட்டார் தனசேகர், ஆதவனின் அப்பா.
"என்னப்பா?"
"கல்யாணம் பண்ணி ஒரு மாதம் தான் ஆயிருக்கு. அவளை வெளிய எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டியா?"
"இல்லப்பா அது வந்து..."
"மாமா டெயிலி ஆபீஸ் ஆபீஸ்னு வெளிய தானே திரியிறோம். சன்டே மட்டுமாவது எல்லோரும் ஒன்னா வீட்ல இருப்போம்னு தான்..." கணவனுக்கு எடுத்துக் கொடுத்தாள் மித்ரா.
"இவன் அப்படி சொன்னானாம்மா?"
"ஐயோ இல்ல மாமா. அவரு கூட ரெண்டு தடவை கூப்பிட்டாரு. நான் தான் வேணான்னு சொன்னேன்."
"ம்.... அவனை விட்டுக் கொடுக்க மாட்டியே. ஆதவா... பொண்டாட்டிய நல்லா ரெடி பண்ணி வைச்சிருக்கடா."
"எல்லாம் நீங்க காட்டின டெமோ தான்ப்பா" ஆதவன் சொல்ல சிரிப்பலை தோன்றியது.
"அம்மாடி வீடு, ஆபிஸ் இதைவிட்டா வேற எங்க போறிங்க? லைஃப்ல ஒரு சேன்ஜ் வேணாம்? அவன் கூட அப்பப்ப பார்க் பீச்ன்னு போயிட்டு வாம்மா."
"சரி மாமா"
"ஆதவா இன்னைக்கு உங்களுக்கு வீட்ல லன்ச் டின்னர் ரெண்டுமே கட். வெளில போய் சாப்பிட்டுக்கங்க."
"அம்மா அப்பாவ பாரும்மா. வீட்டை விட்டே தொரத்த ட்ரை பண்றாரு."
"அவர் சொன்னதுல தப்பு எதுவும் இல்லையேடா. வேலைன்னு சொல்லி ஹனிமூன் போகவும் இல்ல. இப்படி ஒரு நாளைக்காவது வெளிய போயிட்டு வாங்கடா" இது ஆதவனைப் பெற்றவள்.
'தாங்க்ஸ் அத்தை... தாங்க்ஸ் மாமா இப்போதைக்கு எனக்கு இப்படி ஒரு அவுட்டிங் கண்டிப்பா தேவைப்படுது' மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் மித்ரா.
"அம்மா நீயும் அப்பாக்கு சப்போட்டா."
"போடா சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புர வழியைப் பாருங்க."
"ஓகேம்மா" தலையசைத்தாலும் மனதிற்குள் இது தேவையா என்று பட்டது. 'நைட் ரூம் உள்ளயே அவளை வைச்சிட்டு எவ்வளவு கஷ்டப்பட்றேன். மனசும் உடம்பும் எவ்வளவு தவிக்கிது. இதுல பார்க் பீச்சுன்னு ஊர் சுத்த போனா அவ்வளவு தான். அங்க உள்ள ஜோடியெல்லாம் பார்க்கிறப்போ எனக்கு தலை சுத்தும். இன்னக்கி அவ்வளவு தான்.' மனதிற்குள் எண்ணியவாறே அறைக்கு நடந்தான்.
*****
"மித்ரா.... இந்த பயணம் தேவையா? ஒரேயடியா ஓகே சொல்லிட்ட. உனக்கு உண்மையாகவே புடிச்சிருக்கா இல்ல அம்மா அப்பா சொன்னதுக்காக ஓகே பண்ணினியா?" வண்டியை செலுத்தியவாறே ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தபடி கேட்டான் ஆதவன்.
"இல்ல ஆதவ் எனக்கும் இப்படி ஒரு அவுட்டிங் ரொம்ப தேவைப்பட்டிச்சி. ஸோ நான் விரும்பி தான் சம்மதிச்சேன்."
"ஓ.... ஓகே" என்றவனின் மனதில் பொறி தட்ட,
"என்னது? என்ன சொன்ன திருப்பி சொல்லு?"
"போங்க சொல்லமாட்டேன். அதெல்லாம் ஒரு தடவை தான் சொல்லுவேன்."
"ஆதவ்னு சொன்ன இல்ல? யெஸ்..... தங்க்யூ மித்து. ஐ லவ் யூ டா.... நான் இதை எதிர்பார்க்கவே இல்ல. ஐயோ என் பொண்டாட்டி இப்படி எல்லாம் சர்ப்ரைஸ் தாராளே."
"போதும் பேசாம வண்டி ஓட்டுங்க" வெட்கத்துடன் தலை குனிந்தாள்.
"ப்ளீஸ் இன்னொருவாட்டி சொல்லேன்"
"ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க."
வண்டி உடனே நின்றது.
"ஏன் என்னாச்சு?"
"தெரியலயே. ஒருவேளை நீ இன்னொருவாட்டி சொன்னா வண்டிக்கும் உயிர் வருமோ என்னவோ. சொல்லி பாரேன்"
"இப்போ முடியாது. அப்புறமா சொல்றேன் நீங்க வண்டிய எடுங்க ஆதவ்."
"கள்ளி ஐ லவ் யூ டி பொண்டாட்டி."
ஆனந்தத்துடன் வண்டியை உயிர்ப்பித்தான். வண்டி உச்ச வேகத்தில் பயணித்து பார்க் முன்னால் தரித்தது.
"இன்னிக்கு மட்டும் உள்ளூர். கூடிய சீக்கிரமே உன்ன ஹனிமூன் கூட்டிட்டு போறேன் டார்லிங்"
'நான் சொல்ல போறத கேட்ட நீங்க என்ன வீட்டை விட்டே அனுப்புவீங்க' உள்ளுக்குள் எண்ணியவாறே தலைசைத்தாள்.
"உனக்கு இந்த ப்ளேஸ் ஓகே தானே"
"ம்.... உங்களோட ஃப்ரீயா பேசக்கூடிய எந்த இடமா இருந்தாலும் எனக்கு ஓகே. இன்னிக்கு நான் நிறைய பேசனும்"
"வா...வ் அப்போ என்னோட பொண்டாட்டி பேச போறா." கண்ணை சிமிட்டியவாறே "நீ பேசுறத கேட்குறதுக்காக ஐயா ஒரு மாசமா வெயிட்டிங்" வண்டியை விட்டு இறங்கினான்.
இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டும் தொடாமலும் நடந்து சென்று தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்தனர். இருவருக்கிடையிலும் ஒரு சின்ன இடைவெளி. சுனாமிக்கு முன்னரான கடல் போல் கடினமான அமைதி. இடைவெளி குறையாதா என்ற ஏக்கத்தில் அவனும், கூடிவிடுமோ என்ற அச்சத்தில் அவளும் சிறிது நேரம் மௌனம் சாதித்தனர்.
"மித்து....." மெதுவாக மௌனத்தை கலைத்தான்.
"ம்...."
"என்னடா நிறைய பேசனும்னு சொன்ன. இப்ப ரொம்ப சைலன்டா இருக்க"
"பேசனும். பட்..... எங்க இருந்து தொடங்குரதுன்னு தெரியல"
அவளை நெருங்கினான். "உனக்கு என்ன பிடிச்சிருக்கா?"
"இதென்ன கேள்வி ஆதவ். பிடிக்காமலா உங்க கூட இவ்வளவு நாள் பேசிட்டு இருக்கேன். என்னோட அப்பாவுக்கு அப்புறம் நான் முழுசா நம்புற ஒரே ஆம்பிளை நீங்க தான்."
"அப்போ உனக்கு என்ன ப்ராப்ளம்? இவ்வளவு நாள் நீ தள்ளி இருந்துக்கான காரணம் என்ன?"
"எனக்கு உங்களை பிடிச்சிருந்திச்சி. பட் நீங்க என்னையும் நான் உங்களையும் புரிஞ்சி கொள்றதுக்காக வெயிட் பண்ணினேன்."
"அன்னிக்கு ஏதோ கல்யாணத்துக்கு தகுதி இல்லனு என்னமோ சொன்னியே?"
"யெஸ். ....... உங்க கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?"
"கேளுடா"
"கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கு வரபோற மனைவி பத்தி ஹோப்ஸ் இருந்திருக்குமே"
"கண்டிப்பா எல்லோருக்கும் உள்ளது தானே"
"உங்க மனைவி எப்படி இருக்கனும்னு ஆசைப்பட்டீங்க?"
"கொஞ்சம் அழகா, நிறைய அறிவோட, அன்பானவளா, ஒழுக்கமுள்ளவளா அப்புறம் நம்ம பண்பாடு கலாசாரம் தெரிஞ்சவளா....."
"அதெல்லாம் என்கிட்ட இருக்கா?"
"இதென்ன முட்டாள் மாதிரி பேசுற. இதெல்லாமே உன்கிட்ட இருக்கே."
"ஓகே. இருக்கலாம். பட் இதெல்லாத்துக்கும் மேல ஒரு பொண்ணுக்கு கற்பு முக்கியம் இல்லையா?"
"மித்ரா நீ என்ன சொல்லவாற?" அதிர்ச்சியில் வார்த்தைகள் தொண்டைக்குள் சிறைப்பட்டன.
மித்ராவின் முகத்தில் இருந்த புன்னகை இடம்மாறி ஒருவித இருக்கம் படர்ந்திருந்தது. கண்கள் கண்ணீரை பாய்ச்சுவதற்கு தயாராய் நின்றன.
"சொல்லுங்க ஆதவ். ஒரு பொண்ணுக்கு கற்பு முக்கியம் இல்ல. கற்பு இழந்த ஒரு பெண்ணை நீங்க தெரிஞ்சே மனைவியா ஏத்துப்பீங்களா?"
"மித்ரா நீ சொல்ல போறது எனக்கு புரியல. ப்ளீஸ் புரியும்படி சொல்லேன்." பூகம்பமே வர இருப்பதாய் அவன் மனம் சொல்லிற்று.
"ஆதவ் நான் கற்பிழந்தவள் ஆதவ். கல்யாணத்துக்கு முன்னாடியே கற்பிழந்தவள். எந்த ஆம்பளையும் இப்படி ஒரு பொண்ண தன் மனைவியா ஏத்துக்கமாட்டான். இப்போ சொல்லுங்க நான் கல்யாணத்துக்கு தகுதி இல்லாதவள் தானே." இமைகள் கடந்து துளிகள் பயணிக்க தொடங்கி இருந்தன.
.........
"ப்ளீஸ் ஆதவ் ஏதாவது பேசுங்க" உடைந்து விம்மினாள்.
"எப்போ எப்படி ஆச்சு? யாரையாவது லவ்....." அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாய் கேட்டான்.
"இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னாடி......"
"வாட்.....! அப்போ..... அப்போ உனக்கு ஆறு வயசு இருக்கும்ல"
"ஆமா ஆதவ்."
"யாரு?"
"ஆதவ் நான் வீட்ல கடைக்குட்டி. செல்லமா தான் வளர்த்தாங்க. நான் எதுக்குமே பயப்பட மாட்டேன். ஆனா மனிஷங்க மேல மட்டும் எனக்கு பயம். அதுக்கு காரணம் அந்த கொடிய இரவுகள் தான்......." அவள் உடல் நடுங்கியது. அவளுடன் ஒட்டி அமர்ந்திருந்த ஆதவனுக்கு அந்த அதிர்வு உணர்கையில் முதலிரவில் அவன் தொடுகையில் அவள் அலறியதன் அர்த்தம் புரிந்தது. அவள் தோள்களைச் சுற்றி கைகளை வளைத்து அணைத்துக் கொண்டான். அவளுக்கு அது ஆறுதலைத் தர அவள் கண்ணீரினூடே தொடர்ந்தாள்.
"எங்க வீட்ல அப்போ பெரிசா வசதி கிடையாது. மூனு பெட்ரூம் தான் இருந்திச்சி. அதுல ஒன்னு அப்பா அம்மா யூஸ் பண்ணினாங்க. இன்னொன்னு பாட்டியும் அக்காவும் யூஸ் பண்ணினாங்க. நானும் அண்ணனும் மற்றைய ரூம்ல தூங்குவோம். நான் சின்ன பொண்ணா இருந்ததுல நான் அண்ணன் கூட ஒரே பெட்ல தூங்கரத யாரும் பெரிசா எடுக்கல. பட் என்னோட அண்ணன் என்னை விட பத்து வருஷம் ஜாஸ்தி. அவனோட வயசுக்கு அவனுக்கு ஃபீலிங்ஸ் வரும்னு எல்லாரும் மறந்துட்டாங்க..." ஆதவனின் பிடி இறுகியதை உணர்ந்தாள்.
"ஒரு நாள் ரெண்டு நாள் அந்த கொடுமையை அனுபவிச்சேன். எனக்கு இத பத்தி அப்போ பெரியளவு விளக்கம் இல்ல. இது தப்புனு தெரியல. பட் அன்கம்பர்டபுளா ஃபீல் பண்ணினேன். இத அம்மாகிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. அண்ணன் கூட ஒரே பெட்ல படுக்க மாட்டேன்னு அடம் புடிச்சேன். அம்மா என்னை திட்டினாங்க...... அப்புறம் அம்மாகிட்ட இத ஓபனாவே சொன்னேன். அம்மாவுக்கு அண்ணன் மேல பாசமும் நம்பிக்கையும் ஜாஸ்தி. நான் சொன்னத நம்பல..... நான் கனவு கண்டு உளர்றதா சொல்லிட்டாங்க. இத வேற யார்கிட்டயாச்சும் சொன்ன அடிப்பேன்னு மிரட்டினாங்க......" ரொம்பவே உடைந்து அழுதாள்.
"ஐ ஆம் ஸாரி மித்ரா. உனக்குள்ள இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும்னு கனவுல கூட நினைக்கல. நீ இதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேணாம்டா" கண்ணீரை துடைத்து விட்டான்.
"இல்ல ஆதவ் இருபத்திரெண்டு வருஷமா யார்கிட்டயும் சொல்ல முடியாம மனசுல பூட்டி வைச்சி அணு அணுவா நான் வேதனைப்பட்டுட்டேன். இன்னக்கி எல்லாததையும் போட்டு உடைக்கனும். இனி என்னைப் பற்றி நீங்க எதுவுமே தெரியாம இருக்க கூடாது."
அவளை அவன் புறமாகதிருப்பி நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டான். அநத முத்தமே அவன் அவள் மீது கொண்ட அன்புக்கும் நம்பிக்கைக்கும் சாட்சியாக, அவள் தன் இருபது வருட மனச்சுமையை இறக்கி வைக்கலானாள்.
"நான் அம்மாவோட அடிக்கு தான் பயந்தேன். யார்கிட்டயும் மூச்சு விடல. அம்மா சொன்ன் மாதிரி கனவாக இருக்குமோன்னு எனக்கு ஒரு டவுட். பட் ஒவ்வொரு நைட்டும் இது கன்டினியூ ஆச்சு. அப்போ எனக்கு இத அப்பா கிட்ப சொல்ல தோணல. அப்படி சொல்லி இருந்தா என் தலையெழுத்து மாறி இருக்கும். அப்பாக்கு என்மேல நம்பிக்கை ஜாஸ்தி. அவரு எனக்கு தப்பு நடக்க விட்டிருக்கமாட்டாரு..... ஐ மிஸ் ஹிம் அலொட். என்ன தான் இந்த உலகத்துல அநாதையாக்கிட்டு போயிட்டாரு...... அப்பா இறந்த பின்னாடி தான் எனக்கு விடுதலை கிடைச்சது. அம்மா என்னை அவங்க ரூமுக்கு வர சொல்லிட்டாங்க. ...... பட் எனக்கு அப்போ எனக்கு நடந்த சம்பவத்துட விளைவுகள் தெரியல. தெரியுர வயசும் இல்ல. காலம் போகும் போது எனக்கு எவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்குனு புரிஞ்சிக்கிட்டேன். ஆனாலும் என்னால எதையும் செய்ய முடியல. வீட்ல உள்ளவங்க மேல வெறுப்பு வந்திச்சி. வெறியோட படிச்சேன்.... ஆம்பளைங்க மேல வெறுப்பு வந்திச்சி. இது வரைக்கும் எந்த ஆம்பளையையும் என்ன நெருங்கவிட்டதில்லை. முதல் தடவை நீங்க தான் எல்லாம்..... உங்களோட உள்ள உறவுக்கு சந்தோஷப்பட்றதா கவலைப்பட்றதான்னு தெரியல."
"மித்து குட்டி...."
"ப்ளீஸ் ஆதவ் நான் பேசி முடிக்கட்டுமா?"
"ஹ்ம்ம்ம் ஓகேம்மா"
"வளர்ந்ததும் வீட்ல வரன் தேட ஆரம்பிச்சாங்க. என்னால அத ஏத்துக்க முடியல. நான் கெட்டுப் போனவ. யாருக்கும் தகுதி இல்லாதவன்னு நெனச்சேன். அதனால கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். அம்மா பழைய படி கனவுல கண்டத உளறாதன்னு சொல்லிட்டாங்க. வேற வழி இல்லாம வந்த வரன் எல்லாத்தையும் புடிக்கலன்னு சொல்லிட்டேன். ....... என்னால அவங்களுக்கு ஊருல கெட்ட பேருன்னு அண்ணா ரொம்ப தொல்லை பண்ணினாரு. எனக்கு பிடிச்சுதோ இல்லையோ கண்டிப்பா கல்யாணம் செய்து வைக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் ரெண்டு மூனு வரன்கள் ஓகே பண்ணினாங்க. வீட்ல உள்ளவங்களுக்கு தெரியாம மாப்பள்ளைகிட்ட எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டேன். வந்த வழியே போயிட்டாங்க. அதையும் வீட்ல கண்டுபிடிச்சுட்டாங்க...... அப்புறம் தான் நீங்க..... அம்மா தூக்கு போட்டுக்க போறதா மிரட்டினாங்க. கல்யாணத்துக்கு அவசரமா நாள் குறிச்சாங்க. என்னை உங்க கூட பேசவிடல. கல்யாணம் வரைக்கும் என்னை ஆபிஸ் போகவிடலை...... கிட்டத்தட்ட ஜெயில்ல இருக்குற மாதிரி ஃபீல் பண்ணினேன்...... என்னோட கையவிட்டு எல்லாமே போயிருச்சு.... உங்களை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."
"கல்யாணம் நடந்தன்னிக்கே நீ இத சொல்லி இருக்கலாமே. எதுக்கு இவ்வளவு நாள் எக்ஸ்ட்ராவா கஷ்டப்பட்ட?"
"இல்லிங்க அன்னைக்கி நான் உங்களுக்கு புதியவள். எப்படியும் நம்ப மாட்டீங்க. எவனையாவது லவ் பண்ணிட்டு கெட்டு போய் வந்திருக்குறதா நினைப்பீங்க. அது பிரச்சினைய கூட்டும்...... இப்போ எங்களுக்குள்ள நல்ல ஒரு அன்டர்ஸ்டான்டிங் இருக்கு. உங்க மேல ஒரு நம்பிக்கை இருக்கு..... நீங்க என்னை ஏத்துக்கனும்னு சொல்ல வரல. நான் சொன்னது உண்மைன்னு நம்புவீங்க. எனக்கு அது மட்டும் போதும்...... நான் உங்களை விட்டு போயிடறேன். உங்களுக்கு என்னைவிட நல்ல ஒரு லைஃப் பாட்னர் கிடைப்பாங்க." கண்ணீரினூடே அவள் தன்னை தைரியமானவளாக காட்டிக் கொள்ள முயற்சித்தாள். வரமாய் அமைந்த இந்த வாழ்க்கையை இழக்க மனம் ஒப்பாவிட்டாலும், அவனின் வாழ்க்கையை கெடுக்கக் கூடாது என்ற உறுதி பேச்சில் மேலோங்கி இருந்தது. அவளை வளைத்திருந்த கரத்தை விடுவித்தான் ஆதவன்.
"ஹ்ம்ம்... நீ சொல்றது சரி தான். வா டைவர்ஸ் பண்ணிக்கலாம். நான் வேறு கல்யாணம் பண்ணனும்." அவனை விடுவிக்க வேண்டும் என்று நினைத்தாலும் பெண்ணவள் மனம் அவனின் இந்த பேச்சைக் கேட்டு அதிர்ந்தது.
"ஆதவ்...... ஓகே... பட் இப்போ வீட்டுக்கு போக வேணாம். வீட்ல அத்தை மாமா கிட்ட பக்குவமா எடுத்து சொல்லி அவங்க மனசு கஷ்டப்படாம பிரிஞ்சுடலாம்."
"நோ எனக்கு உடனடியா டைவர்ஸ் வேணும். எனக்கு யார பத்தியும் கவலை இல்லை. எனக்கு இது நடந்தது ஒரு பொம்மைக் கல்யாணம். நான் மறுபடியும் கல்யாணம் பண்ணனும்"
"ஆதவ் நான் எனக்காக சொல்லல. அத்தை மாமாவ கஷ்டப்படுத்த வேண்டாமே....!"
"என்ன அத்தை மாமா பேர்ல போட்டு இன்னும் கொஞ்ச நாள் என்கூட இருக்க ட்ரை பண்றியா? ஏமாற்றி கல்யாணம் பண்ணினதா கோர்ட்டுக்கு போவேன்"
அதிர்ந்தாள் மித்ரா. கண்கள் அடுத்த இனிங்ஸிற்கு தயாராகின. உதடுகள் வரண்டு போயின.
"எனக்கு இந்த பொம்மைக் கல்யாணம் வேண்டாம். நான் எனக்கு புடிச்ச பொண்ண, என்னை உயிராக நேசிக்கிற பொண்ணை அவ விருப்பத்தோட தாலி கட்டி மனைவியாக்கனும்...... என்னோட மித்ராவ அவ விருப்பத்தோட மறுபடி தாலி கட்டி கல்யாணம் பண்ணனும்......"
ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்து அவனை பார்த்தாள்.
"என்ன....... என்ன சொன்னீங்க....?"
"என்ன என் மித்து குட்டிக்கு காது சரியா கேட்கலியா? என்னோட மித்ராவ மறுபடி கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னேன்."
"நான்...... ஏன் ஆதவ்...நான்....கற்பிழந்து....." வார்த்தைகளுக்கு ஏகப்பட்ட பஞ்சமாகியது.
"கண்மணி கற்புங்குறது உடம்பு சம்பந்தப்பட்டதில்ல. மனசு சம்பந்தப்பட்டது. மனசு விரும்பி நீ அதை செஞ்சிருந்தா தான் அது தப்பு. இது செக்ஸ்ன்னா என்னான்னே தெரியாத சின்ன வயசுல உனக்கே தெரியாம உனக்கு நடந்த கொடுமை. உங்கம்மா சொன்ன மாதிரி இதை கனவா நெனச்சி மறந்திருக்கனும். இன்னும் அத நெனச்சிகிட்டு...... அத விட்டு வெளிய வா மித்து. உனக்காக நாங்கெல்லாம் இருக்கோம். நம்பு கடைசி வரைக்கும் உன்னை நல்லா பார்த்துக்குவேன்." அவளை கரங்களை இருகப் பற்றிக் கொண்டான்.
"இல்லைங்க இது சரியா வராது. நீங்க என்னை நம்பினதே பெரிய விஷயம். நான் இதுக்கு மேல எதையும் உங்க கிட்ட இருந்து எதிர்பாக்கல."
"மித்ரா என்ன இது சின்ன குழந்தை மாதரி. எனக்கு உன்னை புடிச்சிருந்திச்சி. கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட அக்டிவிடீஸ், லிவிங் ஸ்டைல் ரொம்பவே புடிச்சது. இப்போ நீ சொன்னதெல்லாம் கேட்டதுக்கு அப்புறம் உன் மேல லவ் இன்னும் கூடியிருக்கே தவிர குறையல்ல. உனக்கு என்னை புடிக்கலன்னா நீ விலகிபோறேன்னு சொல்றது நியாயம். என்னோட கண்ண பார்த்து சொல்லு என்னை விட்டு போக போறியா?"
..........
நீண்ட நேர அமைதிக்கு பின்னர் மித்ரா ஆதவனைத் தலை நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் இடைவேளை எடுத்துக் கொண்டிருந்தன.
"என்ன மித்து...." பரிவுடன் கேட்டான். அவள் கரைந்தாள்.
"தாங்ஸ் ஆதவ்"
"போடி புருஷனுக்கு தாங்ஸ் சொல்லிகிட்டு."
இரண்டு சோடிக் கண்களும் ஆனந்த மழையில் நனைந்தன. மித்ரா கணவனின் தோளில் இலகுவாக சாய்ந்து கொண்டாள். நம்பிக்கைக்கு உரியவனின் தோளில் உரிமையாக சாய்ந்து இருப்பதும் ஒரு சுகம் என்பதை முதன் முதலில் உணர்ந்தாள்.
"மித்து....."
"ம்......."
"மித்து.........."
"என்னடா...?
"நாம மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாமா?"
"மறுபடியுமா?"
"ஆமா. உன்னோட கல்யாணத்தின் சந்தோஷங்களை நீ அனுபவிச்சி இருக்கமாட்ட. அதான்."
"வேணாம் ஆதவ் எனக்கு இதுவே போதும். அந்த ஒரு நாளில வராத சந்தோஷம் எனக்கு இந்த ஒரு மாசத்துல முக்கியமா இன்னிக்கு கிடைச்சது. நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன்."
"சரி கல்யாணம் வேணாம்.... ஃபர்ஸ்ட் நைட்....."
"சீ..... போங்க ஆதவ்" கணவனின் தோள்களுக்குள் வெட்கி முகம் புதைத்தாள்.
"ஓ.... ஃபர்ஸ்ட் நைட் வேண்டாமா? இன்னும் டைம் வேணுமா... ஹ்ம்ம்ம்.... ஓகே வெயிட் பண்றலாம்."
"நான் அப்படி சொல்லவே இல்லியே!"
"எப்படி?"
கணவன் சீண்டுகிறான் என்பதை அறிந்தவள் அந்தி வானமாய்ச் சிவந்தாள். மெதுவாக அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளை தன் கையிருப்பினுள் கொண்டு வந்தான் ஆதவ்.
பயணம் தொடரும்...
CZYTASZ
விடியலை நோக்கி
Romansதிருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து மித்ராவை உருகி உருகிக் காதலிக்கும் ஆதவன், மித்ரா தன்னை விரும்பவில்லை என அறிந்து முதலிரவில் அதிர்ச்சியடைகின்றான்...