நீண்ட நாட்களின் பிறகு நிம்மதியான உறக்கம் தழுவ மறுநாள் காலை மித்ராவுக்கு லேட்டாகவே விடிந்தது. கடிகாரத்தை பார்த்தால் நேரம் 9.30 ஐக் காட்டியது.
'அட இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா?'
பதறி எழுந்தால் பக்கத்தில் ஆதவன் இல்லை. 'எனக்கு முன்னமே எழுந்துட்டான் போல. சீ பொட்டச்சிக்கி இவ்வளவு தூக்கமா?' தன்னைத் தானே கடிந்து கொண்டு கட்டிலை விட்டு இறங்கியவளை சோபாவில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆதவனைக் கண்டதும் வெட்கமாகிப் போயிற்று.
"ஸாரி. வழமையா விடியற்காலைல எழுந்துடுவேன். இன்னக்கி என்னமோ ரொம்ப தூங்கிட்டேன். ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கீங்களா?"
"ம்.... ரொம்....ப நேரமா"
"ஐயோ ஸாரிங்க எழுப்பி இருக்கலாமே"
புன்னகையுடனே எழுந்து அவளருகில் வந்தவன் அவள் நாடியைத் தொட்டு தலையை நிமிர்த்தினான். அவனின் தீண்டல் அவளினுள் அச்சத்தை கிளப்பிய போதும் அவளால் தவிர்க்க முடியவில்லை. உள்ளத்தின் ஒரு பகுதி அவனையும் அச்சூழலையும் ரசித்தது. அவன் அவள் கண்களை பார்த்தான்.
"மித்தும்மா....."
"ம்..."
"ரொம்ப நேரம் பார்த்திருந்தேன். இந்த கபடமில்லா முகம் அமைதியா தூங்குறத ரொம்ப நேரம் பார்த்துகிட்டு இருந்தேன். இன்னும் பத்தல. நீ சீக்கிரமே எழுந்துட்ட. எனக்கு இன்னும் ரொம்ப நேரம் நீ தூங்குற அழகை ரசிக்கனும். என்னோட ரசனையை குழப்பினதுக்கு உனக்கு தண்டனை இது தான்." சட்டென குனிந்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
"ஐயோ என்ன பண்ணுறீங்க. விடுங்க" அவனை தடுக்க முயன்று தோற்றாள்.
ஆழமாக முத்திரை பதித்தவன் இப்போதைக்கு இது போதும் என்று அவளை விடுவித்தான்.
"என்ன பண்ணிட்டேன்? என்னோட பொண்டாட்டிய நான் கிஸ் பண்ணினேன். தப்பில்லையே."
"தப்பில்லை. பட் எனக்கு கொஞ்சம் டயிம் வேணும்"
யோசனையாய் அவளைப் பார்த்தவன் "இதுக்கு கூட இன்னும் டயிம் வேணுமா? ஆதவா உன் பாடு ரொம்ப கஷ்டம்டா. ஓகே டேக் யுவர் ஓன் டயிம் அன்ட் ப்ளீஸ் ஃபர்கிவ் மீ"
"ஸாரி எல்லாம் கேட்க தேவை இல்ல. உங்க பேர்ல தப்பு இல்லை. நான் இன்னும் மென்டலி கல்யாணத்துக்கு ரெடி ஆகலை. கல்யாணம் வேண்டாம்னு தான் இருந்தேன். பட்...... என்ன கம்பல் பண்ணி கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வைச்சிட்டாங்க. உங்ககிட்ட ஏதாவது சொல்லி கல்யாணத்தை நிறுத்திறுவேன்னு தான் உங்க கூட என்னை பேசவும் விடல்ல...... என்னை மன்னிச்சிருங்க. நான் உங்களை ஏமாற்ற நினைக்கல்ல." கண்கள் அருவியாகின.
"ஹேய் என்ன மித்ரா இது. காலைலயே கண் கலங்கிட்டு. நீ இஷ்டம் இல்லாமலா கல்யாணம் பண்ணிக்கிட்ட. எனக்கு எதுவுமே புரியல்லையே." கலங்கினான் ஆதவன். அவனால் ஜீரணிக்க முடியவில்லை. இடிந்து உட்கார்ந்தான்.
"நேத்து உன் முகத்துல சந்தோஷமே இல்லாம இருந்தப்போ கல்யாண டென்ஷன்னு நெனச்சிட்டேன். இப்போ தான் எனக்கு புரியுது."
.......
"ஏன் மித்ரா உனக்கு என்னை புடிக்கலியா....?"
"ஐயோ அப்படி இல்லைங்க. எனக்கு கல்யாணத்துலயே இஷ்டம் இல்லை"
"அப்போ.... நீ வேறு யாரையாச்சும்...."
"என் மேல சத்தியமா எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்."
"அப்போ உனக்கு என்னம்மா ப்ராப்ளம்?"
"நான் கல்யாணத்திற்கு தகுதி இல்லாதவள்."
"புரியல. இப்போ படிப்ப முடிக்காம, தொழில் பண்ணாம, பதினைஞ்சு இருபது வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிறாங்க. நீ படிச்சி பட்டம் வாங்கிட்ட. கை நிறைய சம்பாதிக்கிற தொழில் இருக்கு. இருபத்தி எட்டு வயது முடிய போகுது. இதைவிட என்ன தகுதி தேவைப்படுது?"
"இப்போதைக்கு என்கிட்ட இதைவிட எதையும் கேட்க வேணாம். ப்ளீஸ் என்னை மன்னிச்சிருங்க." குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
"ப்ளீஸ்ம்மா இப்படி அழுதா நான் என்ன பண்ணுவேன்? எனக்கு உன்னோட ப்ராப்ளம் என்னானு சுத்தமா புரியல....... பட் எனக்கு இந்த கல்யாணம் புடிச்சி தான் நடந்தது. சேத்து வைச்ச மொத்த காதலையும் உன் காலடில கொட்டனும்னு தான் ஆசையோட கல்யாணம் பண்ணினேன். இப்ப கூட உன் மேல உள்ள பாசம் கொஞ்சம் கூட குறையல."
......
"நீ என்னை உன்னோட ஹஸ்பன்டா நினைக்க வேணாம். ஒரு ப்ரன்டா நினைச்சி உன் ப்ரச்சினைய சொன்னா ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு ட்ரை பண்றேன்."
அவளின் அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை.
"மித்ரா ப்ளீஸ்..... அழ வேணாம்..... ஓகே இப்போ என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம். உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு. எப்பொழுதுமே நான் உனக்கு ஒரு நல்ல ஃப்ரன்டா இருப்பேன். என்னை நீ நம்பலாம்."
"நீயாகவே சொல்லி உன் ப்ராப்ளம் சால்வ் பண்ற வரைக்கும் நான் உன்னை டச் பண்ண மாட்டேன்."
அழுகை சற்று தணிந்ததை உணர்ந்து தொடர்ந்தான்.
".... பட் மத்தவங்களுக்கு முன்னாடி எதையும் காட்டிக்கொள்ளமல் இருப்பது பெட்டர். இல்லன்னா பெத்தவங்க மனசு கஷ்டப்படும். ஓகே."
"ரொம்ப தாங்க்ஸ்..." அழுகையினூடே வார்த்தைகள் விம்மின.
********
முதலிரவு முடித்த ஜோடி அறையைக் காலி பண்ணி விட்டு மீண்டும் சொந்தங்களுடன் இணைவதற்காக காரில் பயணித்தனர்.
காரினுள் பயங்கர அமைதி. அழுது தீர்த்த மித்ரா குளியலின் பின் மன பாரம் சற்று குறைந்தாற் போல் உணர்ந்தாள். அதனால் அவள் முகமும் சற்று தெளிவு பெற்றிருந்தது. ஆனால் ஆதவனின் மனம் அக்குழப்பங்களை பொறுப்பேற்றிருந்தது. மற்றவர்கள் உணராமலிருக்க அமைதியான புன்னகையை இதழோரம் தவழவிட்டிருந்தான்.
மணமக்களின் முகம் அனைவருக்கும் திருப்தியையே ஏற்படுத்த யாரும் எதையும் பெரிதாக துருவிக் கொண்டிருக்கவில்லை. பொழுதுகள் சுமுகமாகவே கடந்தன.
கல்யாண சடங்குகள் அனைத்தும் முடிய சொந்தங்கள் ஒவ்வொன்றாக கலைந்தன. மித்ராவின் வசிப்பிடம் ஆதவனின் வீடு என்றானது. தன்னை நம்பாத தாய் வீட்டை நினைத்து அவள் உருகவில்லை. எல்லோர் முன்னிலையிலும் ஆதவனுடன் ஒன்றியது போல் நடந்து கொண்ட மித்ரா அறையில் மாத்திரம் சற்று விலகி நடந்து கொண்டாள். ஆனால் மனதளவில் அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள் என்பதே உண்மை.
ஆரம்பத்தில் அவளின் பிரச்சினை என்னவாக இருக்கும் என்பதை யோசித்து யோசித்து களைத்து போன ஆதவன்அவளாக சொல்லட்டும் என்று விட்டு விட்டான். இருவருக்கிடையில் கேலியும் கிண்டலுமாக உருவான சுமுகமான உறவை அவர்கள் இருவருமே விரும்பினர்.
காலையில் மித்ராவை அலுவலகத்தில் விட்டுச் செல்லும் ஆதவன் பெரும்பாலான நாட்களில் அவளை அழைத்துக் கொண்டே வீடு திரும்புவான். அந்த இரண்டு தருணங்களும் மித்ராவிற்கு மகிழ்ச்சி ததும்பும் கணங்களாகவே இருந்தன. வேலைப்பளு காரணமாக இரவு நேரத்திலேயே கணவன் வீடு திரும்பும் நாட்களில் மித்ராவுக்கு போரடித்து போகும். அவனது அருகாமை அவளுக்கு மிகவும் தேவைப்படுவதை அவள் உள்ளூர உணர்ந்தே இருந்தாள். அவன்பால் உள்ள ஈர்ப்பும் ஈடுபாடும் அவன் மேல் ஏற்பட்ட நம்பிக்கையும் அவனுக்கு உண்மையை சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்தின. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தாள். அதற்கான நேரமும் விரைவிலேயே வந்தது.
பயணம் தொடரும்..........
YOU ARE READING
விடியலை நோக்கி
Romanceதிருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து மித்ராவை உருகி உருகிக் காதலிக்கும் ஆதவன், மித்ரா தன்னை விரும்பவில்லை என அறிந்து முதலிரவில் அதிர்ச்சியடைகின்றான்...