பயணம் 3

1.5K 47 2
                                    


  அறையைப் பார்த்த மித்ராவின் கண்கள் சுழன்றன. பூவும் பாலும் பழமும் என அறை ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டு அமர்க்களப்படுத்தப்பட்டிருந்தது.


'கடவுளே! இவ்வளவையும் எவ்வளவு எதிர்பார்ப்புடன் ஏற்பாடு செய்திருப்பான். ஆனால் அவனுக்கு ஏமாற்றத்தை தவிர எதையும் பரிசாக என்னால் வழங்க முடிவதில்லையே.' அவளின் எண்ண ஓட்டம் அவளை அணுஅணுவாய் வலுவிழக்கச் செய்தது. கதவைத் தாளிட்டு வாயிலிலேயே நின்றவன் அவள் சிறு குழந்தை போல் அறையை சுற்றி பார்ப்பதை புன்முறுவலுடன் ரசித்துக் கொண்டிருந்தான். அவளின் பின்னால் நின்றிருந்ததால் அவளின் முகமாறுதல்களை அவன் கண்டிருக்க வாய்ப்பில்லை.

அறையை சுற்றி பார்த்தவளின் கண்ணில் பால் சொம்பு தென்பட 'அறைக்குள்ள பால் சொம்பு வைச்சிருக்கும் அதை மாப்பிள்ளைக்கிட்ட கொடு. அவர் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ' அம்மாவின் அறிவுரைகள் காதில் எதிரொலித்தது. கணவனை எதிர்பார்த்தவளாய் பின்புறம் திரும்பியவள் மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டி கம்பீரமாய் தன்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தவனைக் கண்டு நிலைகுழைந்தாள். உணர்வுகள் கொல்லப்பட்டாலும் அவளும் பெண் தானே. அவனின் பார்வைகள் அவளுள் பல வேதியல் மாற்றங்களை செய்து கொண்டு இருந்ததை அவள் உணராமல் இல்லை. ஆனால் அதை சரி கண்டு ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. பார்வை இயல்பாகவே தரை தொட்டது. கால்கள் அப்படியே நின்று விட்டன.

அதே புன்னகையுடன் அவளை நோக்கி எட்டு வைத்தான் ஆதவன். அவன் நெருங்குகையில் மித்ராவின் இதயம் பலமடங்கு அடித்துக் கொண்டது. 'நெருங்கி வருகிறானே. கடவுளே அடுத்து என்ன செய்வான்? சினிமாவில் போல் கட்டிக் கொள்வனா? முத்தமிடுவானா? இன்றைக்கே எல்லாம் நடந்துவிடுமா? அவ்வளவு தானா? என் வாழ்க்கை முடிந்ததா?' உள்ளம் மறுபடியும் தகதிமிதா போட்டது. அவளைத் தொட இரண்டு எட்டுகள் இருக்கையில் ஆதவனின் கால்கள் நின்றன. நெருங்குவதா அவளை நெருங்க விடுவதா குழப்பத்தில் ஆதவனும் நின்று விட்டான்.

"மித்ரா..."

காதலும் ஏக்கமுமாய் ஒலித்தது அவன் குரல். அந்தக் குரல் அவள் மனதை ஏதோ செய்ய மந்திரத்தால் கட்டுண்டவள் போல் அவன் கால்களில் விழப்போனவளை தோளைத் தொட்டு நிறுத்தினான்.

"இதெல்லாம் வேணாம் கண்ணம்மா. நீ என்னைக்குமே கடவுள் அனுக்கிரகத்தால நல்லா இருப்ப. நீ ரொம்ப டயர்டா இருக்க. வா வந்து உட்காரு." பக்கத்தில் இருந்த சோபாவில் அவளை அமர்த்தினான்.

.........

கொஞ்ச நேரம் பொறுத்தான். அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. மௌனத்தை அவனே சிதைத்தான்.

"மித்ராம்மா... நீயா சம்மதிக்கிற வரைக்கும் நமக்குள்ள எதுவும் நடக்காதுடா. பிளிவ் மீ. நீ முதல்ல கொஞ்சம் நார்மல் ஆகுடா."

.....

"எனக்கு உன்ன நிறைய லவ் பண்ணனும். அதுக்கு அப்புறம் தான். இந்த செக்ஸ், குழந்தைங்க இதெல்லாம்."

.......

"அப்புறம் எதுக்கு ஹோட்டல்ல ரூம் போட்டேன்னு பாக்குறியா. எல்லாம் உனக்காக தான்டா."

புரியாதவளாய் அவனை ஏறிட்டாள். குழந்தைத்தனமாய் தெரிந்தது அவள் தோற்றம். புன்னகையுடன் அவள் தலையை வருடி விட்டவன் தொடர்ந்தான்.

"
சும்மாவே பயந்து போய் இருக்க. அங்க இருந்தா
கலாய்க்கிறோம்னு சொல்லி பீதிய கிளப்பி விடுவாங்க.
ஒரு கும்பல் உன்ன கொண்டு வந்து ஜெயில்ல தள்ற மாதிரி ரூம்ல தள்ளிவிட்டிருப்பாங்க. அப்புறம்
காலைல நீ வெளிய போறப்போ பூ கசங்கி இருக்கா, பொட்டு கலைஞ்சிருக்கானு ஆராய்ச்சி பண்ண பெருசுங்க லைன் கட்டி நிக்கும். எதுக்கு அந்த வம்பு. நம்ம லைஃப் அவசரத்துல ஆரம்பிக்காம அனுபவத்துல ஆரம்பிக்கனும்னு நெனச்சேன் தப்பில்லையே."

அவனின் ஒவ்வொரு சொற்களையும் ஆச்சரியத்துடன் விழி அகல பார்த்தவள் இல்லை என்பதாக தலை அசைத்தாள்.

"முதல்ல பேசி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிப்போம். அப்புறம் மத்ததெல்லாம் தானா நடக்கும். ஓகே. கூல் ஹனி. டேக் இக் ஈஸி."

மனைவியின் முகத்தில் தெளிவைக் கண்ட ஆதவனின் மகிழ்ச்சி பன்மடங்காகியது.

"நானே பேசிக்கிட்டு இருக்குறேன். அந்தப் பக்கம் பேச்சையே காணோம். என்ன மேடம் ஐயாடா பர்சனலிட்டில மயங்கி பேச்சு வரலியோ?"

அவனின் கேலிப் பேச்சை இரசித்தாலும் மனப் போராட்டம் முடிந்தபாடில்லை. 'இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு? எப்பவாச்சு உண்மை தெரிய தானே போகுது. நாமளே சொல்லிட்டா என்ன? சீ வேண்டாம் எப்படியும் என்னை நம்ப போறதில்லை. பெத்து வளர்த்த அம்மாவே கண்டுகாதப்போ இடையில வந்த இவன் எங்க?'

"ஹலோ மேடம். நான் ஒருத்தன் இங்க இருக்குறேன். நீங்க மட்டும் மனசுக்குள்ள தனிய பேசினா எப்படி? என்கிட்டயும் ரெண்டு வார்த்தை பேசுறது. தாங்கள் திருவாயின் முத்துக்களை உதிர்க்கலாமே. அதற்க்காக தான் அடியேன் காத்திருக்கிறேன்." சிரம் தாழ்த்தி அவன் உரைத்த பாணியில் தன்னையும் மீறி சிரித்து விட்டாள் மித்ரா.

"இது... இது... இது தான் எனக்கு வேணும். என்னோட மித்துக் குட்டி சிரிச்சிகிட்டே இருக்கனும். காலைல பந்தல்ல கூட இத தான் நெனச்சேன் மித்து. இன்னக்கி நீ அழுதது உன் லைஃப்ல நீ விட்ட கடைசி கண்ணீரா இருக்கனும். அது தான் என்னோட வெற்றி.
இப்போ தான் நீ ரொம்ப அழகா இருக்கே."

"நான் அழுதது உங்களுக்கு எப்படி....." இழுத்தாள் மித்ரா.

"ஐயோ இத கண்டுபிடிக்க நாஸால இருந்த வருவாங்க? இந்த வீங்கின கன்னமும் சிவந்த கண்ணும் போதுமே."

"ஐயய்யோ அப்போ எல்லோருக்கும் விளங்கி இருக்குமா?" உள்ளுக்குள் நினைத்ததை வாய் விட்டு கேட்டே விட்டாள்.

"பெரிசா இல்லடா.. டோன்ட் ஒரி. நான் பக்கத்துல இருந்து ஆராய்ச்சி பண்ணினதால கண்டுபிடிச்சேன்."

"ஆராய்ச்சியா......?"

"ம்.... அழகையும் அமைதியையும் ஆராய்ச்சி பண்ணினேன்."

மறுபடியும் தலைகவிழ்ந்தாள் மித்ரா. இம்முறை வீங்கிய கன்னத்தில் சில வெட்க ரேகைகள். மேக்அப் தாண்டி அவளை அழகாக்கியது.

"மித்து...."

அவனின் இந்த அழைப்பிற்காகவே அவன் காலடியில் வேலைக்காரியாய் கூட இருக்கலாம் என்று தோன்றியது. 'செக்ஸ் என்று ஒன்று மட்டும் இல்லாட்டி இவன் கூட எவ்வளவு சந்தோஷமா இருக்கலாம். இப்படியோ இவன் கூட லைஃப் லாங் இருந்திடலாமே. செக்ஸ் என்று வந்தா தானே பிரச்சினை ஆரம்பிக்கும். பேசாம அதை அவொயிட் பண்ணினா என்ன? ...... யெஸ் அது தான் சரி. பட் அவன் ட்ரை பண்ணினா என்ன பண்றது? ட்ரை பண்றப்ப பாத்துக்கலாம். இப்படியே கொஞ்ச நாள் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டியது தான்.' தீர்மானித்தாள்

'மித்ரா இது ரொம்ப தப்பு டீ. நீ அவனை ஏமாற்ற ட்ரை பண்றாய். உண்மைய அவன் கிட்ட சொல்லிடு.' உள் மனம் கட்டளையிட்டது.

'எப்படியும் அவனுக்கு தெரிய தான் போகுது. அட்லீஸ்ட் இன்னும் கொஞ்ச நாளைக்கு சரி அவன் காதலை அனுபவிச்சிட்டு அப்புறமா இவன் கையால செத்தாலும் சந்தோஷம் தான்.' தீர்மானித்தே விட்டாள்.

"மித்ரா இது ரொம்ப தப்பு. என்னை நீ ஏமாத்தற." அவனின் உள்ளுணர்வு போலவே ஆதவன் பேசவும் மிரண்டே போனாள்.

"என்ன....? புரியல..."

"புரியலயா? தொந்தரவு இல்லாம உன்னோட ஃப்ரியா பேசணும்னு உன்ன இங்க கூட்டிக்கிட்டு வந்த உனக்கு நீயே பேசிக்கிட்டு என்னை ஏமாத்தற."

"அப்பாடா... இது தானா மேட்டர். நான் பயந்துட்டேன்."

"எதுக்குடா பயப்படனும். என்ன நடந்தாலும் நான் உன் கூடவே இருப்பேன். உன்ன ரொம்ப நல்லா பாத்துப்பேன். ப்ராமிஸ்"

நெகிழ்ந்து போனாள் மித்ரா. உள்ளுக்குள் உண்மையைச் சொல் என மனசாட்சி வருத்தினாலும், அவன் பேச்சில் மயங்கி ஆசை மனசாட்சியை வென்றது. அவனுடனான தருணங்களை அழகாக்க அவளும் முடிவு செய்தாள்.

"நான் கொஞ்சம் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரட்டுமா? காலைல இருந்து பட்டு சேலை கட்டி உடம்பெல்லாம் அன்கம்பட்டபுளா ஃபீல் பண்றேன்."

"ஓ.... ஸாரிடா எனக்கு தோணவே இல்லை பார்த்தியா. ஓகே. பார்த்ரூம் இந்த பக்கம் இருக்கு. சேன்ஜ் பண்ணிட்டு வா"

மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு அவன் கைகாட்டிய திசையில் நடந்தாள்.

*****

உடைமாற்றி ப்ரஷ் ஆகி அறையினுள் வந்தவள் ஆதவனின் தோற்றத்தில் அதிர்ச்சியடைந்தாள். வேறும் வேட்டியுடன் கட்டிலில் படுத்திருந்தவனின் வெற்று மார்பு அவளை என்னவோ செய்தது. அவள் வந்ததைக் காண்பிக்க தொண்டையை செருமிக் கொண்டாள். ஆதவன் புறத்திலிருந்து எந்த அசைவும் இல்லை. 'இவனுக்கு கோக்கலியா இல்ல பொய்யா நடிக்கிறானா? என்ன பண்ணலாம்?' மீண்டும் சொஞ்சம் சத்தத்தை உயர்த்தி செருமினாள்.

......

மறுபடியும் மௌனம்.

'இவனை எப்படி பேசுவது? பேர் சொல்லி கூப்பிடலாமா? அது முடியாது. அவய் எப்படி எடுத்துப்பாரோ தெரியாதே. ம்... பேசாம முன்னாடி போய் நிற்போம்.'

அவனின் முன்னே போய் நின்றாள். இதழ்களில் தவழ்ந்த புன்னகையுடன் ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பவன் போல் தோன்றிய ஆதவன் இவள் வந்து நின்றதை சாட்டை செய்ததாகவே தெரியவில்லை. ஒரு கணம் திணறிப் போனாள்.

"நான் வந்துட்டேன்" முயற்சி செய்த போதும் குரல் மெல்லியதாகவே ஒலித்தது.

புன்னகையுடன் அவள் புறம் திரும்பிய ஆதவன் "அம்மா தாயே எனக்கு ஆதவன்னு ஒரு பேர் இருக்கு. ஆதவன்னு கூப்பிடலாம். இல்ல மத்தவங்க மாதிரி ஆதவான்னு கூப்பிடலாம். இல்ல நீயாவே ஓர் செல்ல பேர்.... இந்த பப்பி ஜிம்மி இத மாதிரி இல்லாம ஏதோ உனக்கு புடிச்ச ஒன்ன சொல்லி கூப்பிடலாம். இதுக்கு போயி பாகவதர் மாதிரி தொண்டையை செருமனுமா?"

தான் வந்ததை அறிந்தும் தான் பேசுவதற்காக காத்திருந்திருக்கிறான் என்பதை அறிந்த போது அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.

"சரி என்ன சொல்லி கூப்பிட்றதுன்னு யோசிச்சி வை. நான் ப்ரஷ் ஆகிட்டு வரேன்."

கட்டிலில் அமர்ந்தவள் அவன் திரும்பி வரும் வரை அசையவே இல்லை. அவள் செய்தது போலவே அவன் வருகையை உணர்த்த இரு முறை தொண்டையை செருமி 'நான் வந்துட்டேன்' என்று மெல்லிய குரலில் கூறவும் அவள் முகம் பிரகாசித்து சிரிப்பலை எழுந்தது.

"உங்களை என்ன பண்றேன் பாருங்க" போலிக் கோபம் காட்டவும்,

"அடடா என் பொண்டாட்டிக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா?" அவன் போலியாக ஆச்சரியப்படவும் மீண்டும் சிரிப்பு தோன்றியது.

"சரி என்ன யோசிச்ச சொல்லு"

'ஐயோ இவன் எதைக் கேட்குறான்?' மனதிற்குள் எண்ணியவளாய்,

"எதைக் கேட்குறீங்க?"

"பேர்... பேர்... எனக்கு என்ன பேர் வைச்சிருக்க. சீக்கிரம் சொல்லு."

"நான் அதை யோசிக்கவே இல்லியே"

"கடவுளே அப்போ இவ்வளவு நேரமா என் கூட எப்படி ரொமேன்ஸ் பண்றதுன்னு யோசிச்சியா?"

மீண்டும் நாணத்தினால் தலை கவிழ்ந்தால். அவள் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான் ஆதவன்.


"மித்து... உன்னை நான் அப்படி கூப்பிடலாமா?"

மறுப்பின்றி தலை அசைத்தாள்.

"உனக்கு எப்படி தோணுதோ அப்படியே என்னை கூப்பிடலாம். பட் வன் திங்..."

"என்ன...?"

"சிவாஜி படத்துல வர்ற மாதிரி ப்ராண நாதா, அப்புறம் விஜயகாந்த் படத்துல வர்ற மாதிரி என்னங்க இதெல்லாம் வேணாம். ஓகே."

"ஓ....ஓகே." யோசனையுடன் பதில் சொன்னாள்.

சில நேரம் கேலியும் சில நேரம் உணர்வுபூர்வமாகவும் தம்மைப் பற்றிய சில தகவல்களை பரிமாறிக் கொண்டனர். நேரம் பன்னிரண்டை அண்மித்துக் கொண்டு இருந்தது. மித்ராவின் கண்கள் அயர்ச்சியில் தானாக மூடிக் கொண்டன. தன்னிலை மறந்து கட்டிலில் சாய்ந்தவாறே உறங்கிவிட்டாள்.

ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்த ஆதவன் மித்ராவின் புறமிருந்து எந்த பதிலும் வராததால் திரும்பி பார்த்து அவள் அப்படியே உறங்கி விட்டதைக் கண்டான். அப்படியே அவளை தூக்கி கட்டிலில் கிடத்துவதற்காக அவளை தொட்டு தூக்கியவன் மித்ராவின் செயலில் அரண்டு போனான். ஆதவனின் கரங்கள் பட்டதும் திமிறிக் கொண்டு எழுந்தாள்.

"விடு என்னை தொடாதே" அதட்டில் பயந்து இரண்டு எட்டுகள் பின் வைத்தான் ஆதவன்.

எழுந்தவள் தன் முன்னால் திகைத்து நின்ற ஆதவனைக் கண்டதும் சூழ்நிலையை உணர்ந்து தலைகவிழ்ந்தாள்.

"ஸாரி நான் வேற யாரோன்னு நெனச்சிட்டேன்."

அவள் நிலைமை புரிந்து தெளிந்தவன் "ஓகேம்மா பேசிகிட்டு இருந்து திடீர்னு பார்த்தா நீ தூங்கிட்ட. அதான் உன்னை பெட்ல ஒழுங்கா படுக்க வைக்கலாம்னு. ஸாரிடா. நீ தூங்கு."

'முதல் தடவை இல்ல. தன்னை மறந்து தூங்கிட்டா. அதான் திடீர்னு தொடவும் பயந்துட்டா போல.' தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டு உறங்கச் சென்றான்.


பயணம் தொடரும்..........  

விடியலை நோக்கிWhere stories live. Discover now