சடங்குகள், சம்பிரதாயங்கள், ரிசெப்ஷன் என்று தொடர கடிகார முட்கள் தனது பணியை செவ்வனே செய்து காலம் நகர்வதைக் காட்டின. ஒரு வழியாக மித்ரா பயந்த தருணம் வந்தே விட்டது.
"மாப்பிள்ளைக்கு முதலிரவு நம்ம தொல்லை இல்லாம நடக்கனுமாம். அதனால தான் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிட்டோம்." ஆதவனின் சகோதரன் வம்புக்கு இழுத்தான்.
அநியாயத்துக்கு அசடு வழிந்தான் ஆதவன். முதலிரவு என்றதும் மித்ராவின் மனதில் குழப்பம் பன்மடங்காகியது.
'முதலிரவு பற்றி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு வைத்திருப்பானே. ஹோட்டலில் வேறு ரூம் போட்டாயிற்றே. நமது நிலை தெரிந்தால் என்ன நடக்கும்? ஏமாற்றியதாய் வருத்தப்படுவானா? ஊரைக் கூட்டி நியாயம் கேட்பானா? என்னை ஏற்றுக் கொள்வானா? கடவுளே! எல்லாமே இவ்வளவு அவசரமா நடக்கனுமா? நான் யாருக்கு என்ன பாவம் பண்ணினேன்? எதுக்காக இப்படி ஒரு தண்டனை? சராசரி மனுஷியா என் வாழ்க்கையில் திருமணத்தை கூட அனுபவிக்க முடியாத பாவி ஆயிட்டேனே. ' தலைசுற்றுவதை போன்று உணர்ந்தாள்.
அவளில் மாற்றத்தைக் கண்ட ஆதவன் சரிந்து விழப் போனவளை ஒரு நொடியில் பிடித்து தன் கையணைப்பில் நிறுத்தினான். அவனின் தீண்டலில் மித்ராவின் உடல் நடுங்கியது. கண்கள் சோர்ந்து மூடிக் கொண்டன. ஒரு கதிரையை இழுத்துப் போட்டு அவளை அமரச் செய்தான்.
சுற்றம் ஒரு கணம் ஸ்தம்பித்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"மித்ரா... மித்ரா.... என்னாச்சுமா?" சாந்தியம்மா பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்.
'பாவிப் பொண்ணு கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா. விஷத்தையாவது குடிச்சித் தொலைச்சிட்டளோ?' பெற்ற மனம் ஆயிரம் கணக்கிட்டது.
"அவங்களை கொஞ்சம் ஓரிடத்துல படுக்க வைங்க. சுத்தி உள்ளவங்க கொஞ்சம் விலகி நில்லுங்க" கூட்டத்தை பிளந்து கொண்டு வந்தவர் ஆதவனின் தங்கையின் கணவர் டாக்டர் சீதாராமன்.
YOU ARE READING
விடியலை நோக்கி
Romanceதிருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து மித்ராவை உருகி உருகிக் காதலிக்கும் ஆதவன், மித்ரா தன்னை விரும்பவில்லை என அறிந்து முதலிரவில் அதிர்ச்சியடைகின்றான்...