ஒரு விண்மீன் போலவே..

358 16 22
                                    

                    கிராமியத் தன்மையை இன்னும் இழந்திடாத ஒரு முஸ்லிம் ஊர் அது. தூரத்தே சில ஊர்களில் சொல்லும்படிக்கு சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருந்தன. மண் வாசனை வீசும் தம்  பழக்க வழக்கங்களை இந்த ஊர் மக்கள் அப்படியே தொடர்ந்திட எண்ணினர் போலும்.

வீடுகள் கொஞ்சம் அருகருகேதான் இருந்தாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் பெரிய பெரிய முற்றமும் முற்றத்தில் முக்கால்வாசி பச்சையுமாய் இருந்தது.

ஒரு வீட்டுக்கு செவ்வரத்தை அடையாளமென்றால் இன்னொரு வீட்டுக்கு முற்றத்தில் என்றும் தலைசாயேன்  என்று கம்பீரமாய் பூதாரகரமாய் நின்றிருந்த ஆனைக்கொய்யா மரம் அடையாளம். எழில் கொஞ்சும் இந்த ஊருக்கு அங்கு பெரும்பான்மையினராய் வாழும் முஸ்லிம்கள் அடையாளமென்றால் அவர்களுக்கு அங்கு அருகே இருந்த 'பச்சைப்பள்ளி' மசூதி அடையாளம் .

சாதாரண தரம் தாண்டி உயர்தரக் கல்விவரை அடியெடுத்து வைத்துச் சென்ற பெண் பிள்ளைகள் இங்கு அத்தி மரத்திற் பூப் போல அரிதிலும் அரிதே. வெளியே டவுன் வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டோர் தான் இந்த மேற்படிப்புக்கெல்லாம் ஒத்து வருவோர் என்று எண்ணிவிட்டார்கள்போலும்.  அறியாமை அல்ல, ஆராயாமை!

ஆனாலும் வெளியூர் ஆட்கள் போலே பெரிய படிப்புப் படிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காதா என்று பெற்றோர் போட்ட கட்டளைச் சிறையின் பின்னால் வாடிக்கொண்டு கிடக்கும் பாவையருக்கும் அங்கு குறையில்லை. அதிகபட்சம் உயர்தரம் வரைதான். அதுவும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து. அதன் பின்பு நேரே கல்யாணம், காட்சி!

ஜாலங்கள் நிறைந்த வான் போலே பறந்து கிடக்கும் அந்தக் கிராமத்திலே பெரிய்ய கனவுகளை சுமந்துகொண்டு கண் சிமிட்டும் விண்மீனாய் சுற்றித் திரியும் ஒரு காரிகைதான் நஜ்மா.

நஜ்மா! அந்த வானத்து விண்மீன்தான் அவள்.

முற்றம் முழுவதும் பூத்துக் குலுங்கும் சிவப்பு செவ்வரத்தைதான் அவர்கள் வீட்டுக்கு அடையாளம். அத்துடன் சிவப்பு நிறத்தில் கொவ்வைப் பழ வடிவத்தில் இருக்கும் பாணிப்பூவும். அந்தப் பூவின் பெயர் தெரியாது. அதன் மெல்லிய காம்பைக் கிள்ளவிட்டு வாயில் வைத்து உறிஞ்சினால் இனிப்பாய் இருக்கும். அதனால் அவர்கள் அதற்கு வைத்த பெயர் பாணிப்பூ.

கதைச் சொட்டுக்கள் Where stories live. Discover now