வெயில் கொஞ்சம் கடுமையாய் இருந்த பகல் நேரம் அது. மாணவர்கள் எல்லோரும் பாடசாலை முடிவடைந்து வரும் நேரமாதலால் பஸார் தெருவில் வெள்ளைக் கொக்குகளின் ஊர்வலம்போல இருந்தது.
தன்னைவிட இருமடங்கு கனம் கனத்த புத்தகப்பையை சுமந்துகொண்டு வேகவேகமாக வீட்டை நோக்கி ஓடாத குறையாக நடந்து கொண்டிருந்தாள் ஷமீஹா. முதுகில் பாறாங்கல்லைக் கட்டிக்கொண்டு செல்வதைப் போலிருந்தது. பாடசாலை முடிவடைவதற்கான மணியடித்ததும் அரக்கப் பறக்கப் புத்தகங்களை எடுத்து தாறுமாறாகப் பையில் திணித்துக்கொண்டு ஓடி வந்ததில் உள்ளே அவை எந்தக் கோலத்தில் இருக்கின்றனவோ என்னும் கவலையை அப்போதைக்கு அவள் இருந்த அவசரத்தில் புறந்தள்ளியிருந்தாள்.
குறையாத வேகத்துடன் வீட்டுக் கதவில் மோதி அதை உடைத்துக்கொண்டு உட்புறம் சென்று விழப்போவது போல வந்து கதவினருகே சடன் ப்ரேக் போட்டு நின்றவள் கையோயாது படபடவென்று கதவைத் தட்டினாள்.
"யாரது? கதவ உடைச்சிடாதிங்க வாரேன்.." என்று குரல் கொடுத்தவாறு வந்து கதவைத் திறந்தார் அவளது தாயார்.
"உம்மா அஸ்ஸலாமு அலைக்கும் நான் மெத்ஸ் க்ளாஸ் போகனும் டக்குன்டு ப்ளேட்ல கொஞ்சம் சோறு போட்டு வைங்கோ ப்லீஸ்" மனப்பாடம் பண்ணியதுபோல நிறுத்தாமல் ஒப்புவித்துவிட்டு அறைக்கு ஓடினாள்.
தான் கிரகிக்கும் முன்பே சப்பாத்துகளையும் காலுறைகளையும் களைந்துவிட்டு அங்கிருந்து ஓடிய ஷமீஹாவின் சலாத்துக்குப் பதிலளித்தவர் வாரத்திற்கு ஒரு தடவை நடக்கும் இந்தக் கூத்தை எண்ணிப் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
அறைக்குள் வந்தவள் புத்தகப்பையைக் களைந்து அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு வியர்வையில் முற்றாக நனைந்திருந்த சீருடையை மாற்றிக்கொண்டு வுழு செய்து தொழுதுவிட்டு ஹேங்கரில் தொங்கிய அபாயாவை எடுத்து அணிந்து கொண்டாள். அயன் பண்ணி வைத்திருந்த ஹிஜாபையும் எடுத்து சுற்றிக் கொண்டவள் அவசரத்தில் குண்டூசிகளை இருமுறை தன் கை விரல்களிலும் குத்திக் கொண்டாள்.
YOU ARE READING
கதைச் சொட்டுக்கள்
Short Story#1 சிறுகதைகள் என் பேனா உதிர்த்த சின்னஞ் சிறு கதைச் சொட்டுக்கள் சில..