கண்களைச் சுருக்கியவாறு கைகளுக்கு எட்டாத நெருப்புப் பந்தாய்த் தூரத்தே இருந்து தன்னை வாட்டிக் கருவாடாக ஆக்கிக் கொண்டிருந்த சூரியனைப் பார்த்தவள் அந்தக் கடும் வெயிலின் உஷ்ணத்தைத் தாங்கிடாது உடலினுள் இருந்து உருகித் தோளின்மேல் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்த வியர்வைத் துளிகளைக் கையினால் துடைத்தெடுத்தாள்.
தூரத்தே நிறுத்தப்பட்டிருந்த செவ்வக வடிவ பெரிய கரும்பலகையில் அங்கங்கு வெண்கட்டியின் துகள்கள் கூட்டம் போட்டுத் தங்கியிருந்தமை தெளிவாகத் தெரிந்தது. முன்னால் விழுந்திருந்த கரும்பலகையின் நிழலில் வரிசையாக அமர்ந்திருந்தனர் சில குழந்தைகள். எட்டு, ஒன்பது என்று பத்துப் பன்னிரண்டு வயது வரைக்கும். கிட்டத்தட்ட அவள் வயதை ஒத்தவர்கள்தான் அதிகமாக அங்கு அமர்ந்திருந்தோர்.
விரலளவு நீண்ட வெண்கட்டிக் குச்சிகளால் கருப்புப் பலகையில் ஆசிரியர் ஒவ்வொரு தடவையும் எழுதுகையில் அந்த வெண்கட்டியிலிருந்து கீழே சிந்தும் துகள்களையும் கரும்பலகையில் வெண்கட்டி வரைந்த விடயங்களை ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும்போது முன்னால் அமர்ந்திருந்த மாணவர்கள் அதனைக் கோரஸாக அப்படியே திருப்பிச் சொல்வதையும் என்று அங்கு நடப்பதையெல்லாம் ஆர்வத்துடன் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் கண்களில் ஓர் ஏக்கம் தெரிந்தது. ஆர்வத்தில் வாயை லேசாகப் பிளந்தபடி பார்த்திருந்தவள் திடீரென்று தன் பின்னால் கேட்ட குரலில் கையில் பிடித்திருந்த குடத்தைக் கீழே போட்டாள். காய்ந்து போயிருந்த மண்தரையில் விழுந்து அடிபட்டதில் 'டப்'பென்று வலியில் கத்தியது அந்தப் பெரிய ப்லாஸ்டிக் குடம்.
"மெஹரின்!!!"
தன் தாயின் குரலை உணர்ந்து திரும்பிப் பார்த்தவளை அவ்விடத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் குடத்தை எடுத்துக்கொண்டு தன் பின்னே நடக்குமாறு கொஞ்சம் கடுமையான குரலில் ஏவிவிட்டு நடந்தார் அவள் தாய்.
YOU ARE READING
கதைச் சொட்டுக்கள்
Short Story#1 சிறுகதைகள் என் பேனா உதிர்த்த சின்னஞ் சிறு கதைச் சொட்டுக்கள் சில..