முடிந்து வைத்த ஆசை (1)

158 5 6
                                    

                    வெண்பிறையின் சரிபாதி அவள் நுதலாக, புவியோர் கண் அவள்மேல் பட்டுவிடாமல் மறைத்துக் காக்கும் மேகங்கள் அவன் செயலாக!

சுவாசிக்கும் காற்றுத் தொடக்கம் சுட்டெரிக்கும் சூரியன் வரைக்கும். கண்காக்கும் இமை தொடக்கம் கண்காணா..அதூரம் வரைக்கும்.

எதில் இல்லை கவிதை?

எதில் இல்லை காதல்?

தலையணை ஒன்றை உதவிக்கு வைத்து சுவற்றுடன் சேர்ந்து கட்டிலில் அமர்ந்திருந்தாள் ரைஹானா, மடியில் கிடைமட்டத்துக்கு நாற்பத்தைந்து பாகையில் அந்த நாவலைக் கிடத்திக்கொண்டு,

அந்தக் காதல் நாவலை!

நாவலுக்குட் புகுந்துவிட்ட அவள் மனம் வீடு திரும்பியிருக்கவில்லையாதலால் அசைவில்லை அவளிடம். விழியுட் கருமணிகள் மாத்திரம் வரிக்கு வரி தாவி அவள் இருப்பை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருந்தன. சுவர்க் கடிகாரத்தின் "டிக் டிக்" குரலை அவள் காது மடல்கள் விரட்டிக் கொண்டிருக்க, நேரத்தின் பயணம் அவள் கருத்தில் எங்கே பதிய?

எழுத்துக்களைக் காதலில் குழைத்தெடுத்துக் கவிவடித்துக் காவியம் அமைத்திருந்த அந்த முகம் காணா படைப்பாளரின் திறத்தை மெச்சிய வண்ணம் காதல் செய்யும் மாயங்களை இவ்வளவு நேரம் வியந்தபடி அமர்ந்திருந்தவள் அதே ரைஹானாதான்.

நாவல்கள் மட்டுமே போதுமாம் அவளுக்கு.

ஆகாரவேளை கடக்கும்வரை காத்திருந்த உறவினராய் இருக்கலாம். இல்லை யாரேனும் யாசகம் கேட்டும் வந்திருக்கலாம். இரும்பு நுழைவாயில் குரல் கொடுத்தது. அந்தச் சத்தத்திற்குத் தலையைத் தூக்கினாள் அவள்.

மாமியார் வீடு, மாலை நேரம், மருமகள் கதாபாத்திரம்..

அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது.

நேரம் நான்கு கடந்து ஐந்தாகிக் கொண்டிருந்தது. பகலாகாரத்தை முடித்துக்கொண்டு இரண்டரைக்குப் போல அந்நாவலுடன் கட்டிலில் சரிந்தவள். சாண் அளவின் கால்வாசிக்குத் தடிப்பைக் கொண்டிருந்த அந்தப் பெரும் நாவல் முடிய சில பக்கங்களே மீதம் இருக்க, அதையும் முடித்துவிட்டே எழுந்தாள்.

கதைச் சொட்டுக்கள் Where stories live. Discover now