அலைபேசியின் தொடுதிரையை தன் விரலால் தேய்த்துவிட்டு.. பின் நம்பரை அழுத்தினான்.
“ச்சே.. இந்த பின் நம்பரை முத மாத்தணும்.. இது அவளோட போன் நம்பர்..” என மனதில் எண்ணியதை உடனே செயல்படுத்தவும் செய்தான்.
ஆஸ்திரேலியா அழகான நாடு.. தன் உயர்கல்விக்காக இங்கே வந்தான்.. சென்ற வருடமே படிப்பு முடிந்துவிட்டது.
புதிதாக தொழில் தொடங்கிய தன் நண்பனுக்கு உதவுவதற்காக என காரணம் சொல்லிக் கொண்டாலும்.. நடந்து முடிந்த சில எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து தன் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் சொந்த ஊர் திரும்புவதை மேலும் ஓர் ஆண்டு தள்ளி வைத்தான்.
“என்னால உன்னோட வரமுடியாது ரஞ்சன்.. i want to fly high.. எனக்கு என்னோட ப்ரொபசனல் லைப் ரொம்ப முக்கியம்.. நான் ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனில டாப் போஸ்ட்டிங்ல இருக்கணும்னு ஆசைப்படுறேன்..
நீ என்னனா.. தமிழ்நாட்டு மேப்ல தேடினா கூட கிடைக்காத ஒரு சின்ன கிராமத்துல உள்ள ஸ்கூல்ல கரஸ்பாண்டட்.. பிரின்சிபல்.. வாட்எவர்.. உப்.. நோ.. என்னால முடியாது.. இந்த உலகமே என்னோட திறமையை பேசணும்னு ஆசைப்படுறேன்.. ஆனா நீ ஒரு சின்ன வட்டத்துக்குள்ள என்னை அடங்கிப்போக சொல்லுற..
நான் தயாரா இல்லை ரஞ்சன்.. தட்ஸ் ஆல்..”
இரண்டு வருடக் காதல்.. வாழ்வு முழுமைக்குமானது என எண்ணியது அவன் மட்டுமே.. அவளுக்கு அது வெறும் பொழுதுபோக்கு.. அதை அவள் வார்த்தைகளிலே சொன்ன பிறகும்கூட.. நேசம் கொண்ட அவன் மனம் அவளை வெறுக்க தயங்கியது.
ஆனால் அதற்காக நீதான் என் வாழ்க்கை.. உனக்காக நான் பெற்றவர்களை.. பிறந்து வளர்ந்த கிராமத்தை.. தாத்தா காலத்தில் தொடங்கி இன்று வரை பல மாணவர்களுக்கு அறிவின் ஊற்றாக விளங்கிய பள்ளி பொறுப்பை ஏற்க மாட்டேன்.. என விலக்கி விடுகிறேன்.. என அவள் காலடியில் போய் விழ ரஞ்சனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
அவள்.. அவள்.. என நினைத்துக் கொண்டிருந்த மனதை சற்று திசைதிருப்பவே படிப்பு முடிந்த பிறகும் ஒரு வருட காலத்தை வெளிநாட்டிலே கழித்துவிட்டு.. இன்று இந்தியாவுக்கு திரும்புகிறான் ரஞ்சன்.