வகுப்புக்கு வெளியே மாணவர்கள் நிற்பது வித்தியாசமாக தோன்றியது ரஞ்சனுக்கு.. அதுவும் குறிப்பிட்ட அந்த ஆசிரியை ஒருவர் மட்டுமே அப்படி நடந்து கொள்கிறார் அதுவும் ஒரு சில மாணவர்களிடம் மட்டும் என்பதை கவனித்து தெரிந்து கொண்டான் ரஞ்சன்.
நம்பிக்கையான ஒருவர் மூலம் இது குறித்து விசாரிக்க எண்ணிய ரஞ்சனுக்கு உமா தான் நினைவுக்கு வந்தாள்.
பழகியது சில நாட்கள் தான் எனினும் தன் மனதில் உமா நம்பிக்கைக்கு உரியவளாக இருப்பது ரஞ்சனுக்கு வியப்பாக இல்லை.
ஏனெனில் உமாவின் வகுப்பில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் பெயர் கூட இதுவரையில் ரஞ்சனின் அப்பா அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அந்த குழந்தையின் மனநிலையை கருத்தில் கொண்டு உமா.. அத்தனை கவனமாக நடந்து கொண்டிருக்கிறாள் என்பது ரஞ்சனுக்கு புரிந்தது.
அதனால் உமாவிடம் இதைப்பற்றி விசாரிக்க சொல்லலாம் என நினைத்து உமாவை தன்னறைக்கு வரவழைத்தான் ரஞ்சன்.
உமா எதற்காக ரஞ்சன் வரச் சொல்லி இருக்கிறான் என்ற யோசனையுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உமா.. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்..” என தொடங்கினான் ரஞ்சன்.
“என்ன சார் பண்ணனும்..” என கேட்டாள் உமா.
“மிசஸ் விமலா.. ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ க்கு கெமிஸ்ட்ரி ஹேண்டில் பண்றாங்க இல்லையா..” என ரஞ்சன் சொல்ல ஆம் என்பது போல் தலையசைத்தாள் உமா.
“அவங்க க்ளாஸ்ல அடிக்கடி பர்ட்டிக்குலரா ஒரு சில ஸ்டூடண்ட்ஸ் மட்டும் நின்னுட்டு இருக்காங்க.. ஏன்னு கேட்டா.. அவங்க சொல்ற பதில் சரியானது மாதிரி தெரியலை.. சமாளிக்கிறாங்கனு புரியுது. அதான் ஏன் என்னனு விசாரிச்சு சொல்லணும்..” என்றான் ரஞ்சன்.
ஆனால் உமா சரியென சொல்லாமல் யோசனையுடன் இருக்க.. ரஞ்சன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் எ.. எப்டி சார்..” என தயக்கத்துடன் ரஞ்சனை பார்த்தாள் உமா.