பிரபா தங்கள் கல்யாண செலவுக்கென கொடுத்த பணத்தை.. பிரபாவின் எதிர்காலத்திற்கு பயன்படும் வண்ணம் பிரபாவிடமே எப்படி கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.
உமாவுக்கு எதுவும் தோன்றவில்லை.. பிரபா ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பது தெரிந்ததால் உமா எதுவும் தோன்றாமல் ரஞ்சனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன் எண்ணத்தை நிறைவேற்றுவது எப்படி என தனக்கு தோன்றியதை உமாவிடம் சொன்னான் ரஞ்சன்.
“உமா.. டூவீலர் ஷோரூம் ஓப்பன் பண்றதுக்கு லோன்க்கு அத்தான் ட்ரை பண்ணிட்டு இருக்காங்கல்ல..” என உற்சாகத்துடன் ரஞ்சன் கேட்க.. ஆம் என தலையசைத்தாள் உமா.
“ஷோரூம்க்கான இடத்துக்கு நாம இந்த பணத்துல ஏற்பாடு பண்ணலாம்..” என ரஞ்சன் சொன்னான்.
“ஆ.. ஆனா இந்தப் பணம் போதாதே..” என உமா சொல்ல.. ரஞ்சன் சிரித்தான்.
“உமா.. இந்தப் பணம்னா இது மட்டும் தானா.. ஷோரூம்க்கான இடம் நம்ம பொறுப்பு சரியா.. நீ எப்ப எப்டி இதை அத்தான் கிட்ட ஒப்படைக்கலாம்ன்றத மட்டும் யோசி..” என சொல்லிவிட்டு நிம்மதியுடன் படுத்துக் கொண்டான் ரஞ்சன்.
ரஞ்சனின் எண்ணம் புரிந்தாலும்.. இதெல்லாம் சாத்தியம் தானா.. என யோசித்துக் கொண்டிருந்தாள் உமா.
இந்த ஐந்து லட்சம் அண்ணன் கொடுத்தது.. அதை செலவழித்தால் வீட்டில் யாரும் எதுவும் கேட்க போவதில்லை.. ஆனால் அது போக வரும் செலவுகளை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்..
இடம் சொந்தமாக வாங்குவதோ முடியாத காரியம்.. வாடகை என்றால் கூட ஷோரூம் அளவுக்கு பெரிய இடம்.. எளிதாக சொல்லிவிட்டான்.. ஆனால் நடக்கும் என்ற நம்பிக்கை தான் வரமறுத்தது உமாவுக்கு.
சிறிது நேரம் ஏதேதோ யோசித்தபடி இருந்த உமா.. அப்படியே உறங்கிப் போனாள்.
அடுத்த நாள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருந்தனர். எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டிருந்த உமா.. மகதியை கவனித்தாள்.