உமா ரஞ்சனின் திருமணத்திற்கு முந்தைய நாள்.. உமா வீட்டில் மண்டபத்திற்கு கிளம்புவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இயல்பான மணமக்கள் போல உமா ரஞ்சனுக்கிடையில் போன் பேச்சுக்கள் எதுவும் நிகழவில்லை. நண்பர்களாக வாழ்க்கையை தொடங்கலாம் என ரஞ்சன் சொல்லியிருப்பதால் இதையெல்லாம் எதிர்பார்ப்பது வீண் என தன் மனதை தேற்றிக் கொண்டாள் உமா.
நாளை காலை.. உற்றார் உறவினர் என அனைவர் முன்னிலும் தாலி கட்டி தன்னை ரஞ்சன் சொந்தமாக்கிக் கொள்வான் என நினைக்கையிலே உமாவின் மனமெல்லாம் சந்தோஷத்தில் நிறைந்தது.
ரஞ்சனை பார்த்த நாள் முதல் நடந்த நிகழ்வுகளை மனத்திரையில் ஓடவிட்டு பார்த்தாள் உமா.
“ஐயம் ரஞ்சன்..” என அழுத்திச் சொன்னபடி கைகளை நீட்டிய ரஞ்சன்..
அடுத்த தலைமுறையாக பள்ளி பொறுப்பை ஏற்று நடத்த.. பெற்றோருடன் நடந்துவரும் போது முந்தைய நாளின் நிகழ்வுகளை மனதிற் கொண்டு சிரிப்புடன் தன்னை பார்த்த ரஞ்சன்..
அறைக்கு அழைத்து.. அதை குத்திக்காட்டி பேசுவான் என நினைத்தால் அப்டி ஒன்று நிகழாதது போலவே கிளம்பச் சொன்ன ரஞ்சன்..
பைக்கில் சாய்ந்தபடி நின்று கொண்டு குட்மார்னிங்கை ஏற்றுக்கொண்டு தலையசைக்கும் ரஞ்சன்..
மஞ்சுவின் குழந்தையை ரசனையோடு பார்த்தபடி.. தன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட ரஞ்சன்..
டின்னரில்.. “நீ என்னை சைட் அடிச்சிருக்கீயா..”என கண்களில் குறும்பு மின்ன கேட்ட ரஞ்சன்..
டீச்சர்ஸ் மீட்டிங்கில் பலருக்கும் பயத்தை வரவழைத்த கம்பீரமான அந்த ரஞ்சன்..
அன்று சுஜியின் எழுத்தை வாசித்ததும் தன்னை அறியாமல் வழிந்த கண்ணீரை துடைத்த ரஞ்சன்..
ரஞ்சன்.. ரஞ்சன்.. ரஞ்சன்.. நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது உமாவுக்கு.. இப்போது நினைத்து ரசிக்கும் எந்த ஒரு சந்திப்பும் திட்டமிட்டு நிகழ்ந்தது அல்ல.. அந்த நேரம் ரஞ்சனை இப்போது போல ரசித்ததும் இல்லை.. எப்போதிருந்து இந்த மாற்றம் இந்த நேசம் தனக்குள் வந்தது என உமாவால் அறிந்து கொள்ளவே முடியவில்லை.