இரவில் தூங்கும் முன் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட ஜிஷ்ணு, எவ்வளவு முயன்றும் புத்தகத்தில் மனம் செல்லாததால்,
இன்று காலை ஊருக்குள் சென்றபோது ஊர்மக்கள் கூறிய விஷயங்கள் காட்சியாய் விரிய,
"யாரது? பிருந்தாவனம் தோப்பு சின்னவரா? எப்ப வந்தீங்க? அப்பா அம்மால்லாம் நல்லாயிருக்காங்களா?" என்றே அனைவரும் ஆரம்பித்து,
"பெரியவர் சொல்லியிருப்பாரே? நம்ம ஊர்ல மோகினிப்பேய் ஒன்னு சுத்துது தம்பி! உங்க தோப்புக்குள்ள கூட அதை நிறையபேர் பார்த்திருக்காங்க... உங்க அண்ணன் ட்ட சொன்னோம். .. அவரு 'யாராவது மனுசங்க வேலையா இருக்கும்... என்ன ஏதுன்னு பார்த்துட்டு சொல்றேன்னாரு. .. இதுவரை எந்த தகவலும் இல்லை! " என்று அவர்கள் கூறியதும்,
"கோதையும், முத்துவும் அண்ணனும் மோகினியை ப் பார்த்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை போல, இது ஒரு வகையான பாசம்... இந்த மாதிரி உண்மையானவங்க சிட்டியில் கிடைப்பதில்லை...' என்று நினைத்துக் கொண்டவன்,
"எங்க தோப்பில் மட்டும் தான் இருக்கா?" என்று கேட்டான் மோகினியைப்பற்றி மேலும் அறியும் நோக்கில்.
"ஊரு முழுக்கத்தான் சுத்துது."
"அந்த மோகினியை யாராவது பக்கத்துல பார்த்தீங்களா? யாருக்காவது அடையாளம் எதுவும் தெரிஞ்சதா?"
" பத்தடி தூரம் வரை பார்த்திருக்கானுங்க. .. ஆனா யாருனுதான் அடையாளம் தெரியல... இங்க இருக்கற யாரையும் அந்த மோகினிப்பேய் அடிக்கல... பார்த்தவங்களைக் கூட ஒன்னும் பண்ணல." என்று கூறிய அனைவருமே ஹஸ்கி வாய்சில் சொன்ன விஷயங்கள் தான் ஜிஷ்ணுவிற்கு, அந்த மோகினியை பார்த்தே ஆகனும் என்ற ஆர்வத்தை தூண்டியது.
" யாரையும் ஒன்னும் பண்ணலையா? பிறகு எதுக்கு ஊருக்குள்ள திரியுது? ஒருவேளை அதுவும் கோடைகாலத்தில் விடுமுறைக்கு வந்திருக்குமோ?" என்று ஜிஷ்ணு சிரித்தபடி கேட்டதும்,
"தம்பிக்கு எல்லாமே சோக்குதான் (ஜோக் ப்பா ). வெடலவயசு, (வாலிப வயசு ப்பா) அதான் இப்படி பேசுறீக. .. நீங்களே அந்த மோகினிப்பேய நேர்ல பார்த்து கேட்டுற வேண்டியதுதானே?"