மாலை ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்த சுபத்ரா, ஜிஷ்ணுவை பார்ப்பதை தவிர்ப்பதற்காக,
'இனி நாளையிலிருந்து அலுவலகம் செல்லவேண்டாம்!' என்ற முடிவுக்கு வந்திருந்தாள்...
'இதை எப்படி தாத்தாவிடமும் அப்பத்தாவிடமும் சொல்வது?' என்பதை யோசிக்க வேண்டியதாக இருந்தது... அதனால் வழக்கம்போல் மொட்டை மாடிக்குச் செல்கிறாள்...
'ஜிஷ்ணுவிற்கு தன்மேல் இருப்பது காதல் இல்லை.. ஆனால், தான், ஜிஷ்ணுவை தான் விரும்புகிறோம்!' என்பது சுபத்ராவிற்கு ரொம்ப தெளிவாக தெரிய...
"அம்மாடி! துணி கூட மாத்தாம, மாடிக்குப் போய் என்ன செய்ற?" கீழே இருந்து அப்பத்தாவின் குரல் கேட்டது.
"லேசா தலை வலிக்குது அப்பத்தா! கொஞ்ச நேரத்துல் வந்துடுவேன்." என்று பதிலளித்தாள்.
"தல வலிக்குதா? கீழ வா! சுக்கு காபி போட்டுத் தர்றேன்... அமிர்தாஞ்சன் போட்டுகிட்டு படுத்தா சரியாயிடும்..." என்று அழைத்தார் அப்பத்தா.
"அ!அ!அ!" எனக்கிருக்கிற பிரச்சனைல இவங்க வேற...' என்று கடுப்பான சுபத்ரா,
"கொஞ்ச நேரம் வெளிக் காத்து பட்டாலே சரியாகிடும்... என்னை கொஞ்சம் தனியா விடுங்க அப்பத்தா!.... போட்டு உயிரை வாங்காம... " என்று சுபத்ரா சிடு சிடுத்தாள்.
'இந்த மாதிரி சிடு சிடுப்பது சுபத்ராவின் சுபாவம் கிடையாதே?' என்று யோசித்த அப்பத்தா, தாத்தாவிடம்,
"இவளுக்கு என்ன ஆச்சு? புதுசா கோபம் எல்லாம் வருது!!!" என்று நடந்ததை கூறுகிறார்.
"அவ எங்கே இருக்கா?" என்று தாத்தா கேட்க,
"மாடில தான் இருக்கா!" என்றார் அப்பத்தா.
சுபத்ரா மாடியில் இருப்பதும், சிடுசிடுவென்று விழுவதையும் கவனித்த தாத்தாவிற்கு சிறு கவலை வந்தது...
கீழே இருந்தபடியே, மாடியை பார்த்தவாறு தாத்தா, "சுபா!' என்று அழைக்கிறார்.
தாத்தாவின் குரல் கேட்ட சுபத்ரா,
"இந்த அப்பத்தா இருக்கே... தாத்தாட்ட போட்டுக்கொடுத்துருச்சு..."
என்று தன் அப்பத்தாவிற்கு அர்ச்சனை செய்தபடி கீழே வருகிறாள்...