காலையிலிருந்து ஜிஷ்ணு வை காணாமல் அவனுக்காக காத்திருந்த விஷ்ணுவிடம்,"தம்பி என்ன சின்னக் குழந்தையா? இங்கதான் எங்கேயாவது போயிருப்பார்..."என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஜிஷ்ணு வீட்டிற்குள் வந்தான்.
"என்னைதான் தேடறியா அண்ணா? கொஞ்ச நாளா எக்சர்சைஸ் பண்ணாததால, ஒரு மாதிரி இருந்தது... அதான் கொஞ்ச தூரம் வாக்கிங் போயிட்டு வரலாம் னு நெனச்சு ஊருக்குள்ள போனேன். அவ்வளவுதான்..." என்றான், விஷ்ணு விற்காக முத்து வைத்திருந்த மூலிகை கசாயத்தை எடுத்தவாறு.
"தம்பி இது பெரியவருக்காக வச்சிருக்கேன்." என்ற முத்துவிடம்,
"பரவால்ல விடு முத்து, ஜிஷ்ணு தானே!" என்று முத்துவிடம் கூறிவிட்டு,
"எங்க போறேனு எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போடா!... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம அப்பா போன் பண்ணார்.. நீ என்ன பண்ற?, ஏது பண்ற? ன்னு கேட்டார்... எப்ப நீ மறுபடியும் மதுரை வருவன்னு கேட்டார்..." என்று விஷ்ணு கூறியதும், தொலைபேசியை எடுத்து, மதுரை வீட்டு நம்பருக்கு ஜிஷ்ணு ஃபோன் செய்தான்...
"ஹாய் அப்பா!"
"எங்கடா ஊர் சுத்திட்டு வர்ற?" என்று சற்றே கண்டிப்பாக கேட்டார் ராஜசேகர்.
"அப்பாஆ... "
"சரி! எப்ப இங்க வர்ற? ஒரு புது புராஜக்ட் நம்ம கன்ஸ்ட்ரக்சனுக்கு வந்துருக்கு... நீ வந்தா உன் கையில் அந்த புராஜக்ட் டை ஒப்படைக்கலாம்னு இருக்கேன்..."
"நான் இங்க வந்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகலையேப்பா? அதுக்குள்ள தனி ப்ராஜெக்ட் டா.... நான் இங்க வரும்போது என்னப்பா சொல்லிட்டு வந்தேன்? ஒரு ஆறு மாசம் என்னை ப்ரீயா விடுங்க.... அதுக்கப்புறம் நம்ம ஆபீஸ்ல வந்து நான் சேர்ந்துடுவேன். ப்ளீஸ்பா..." என்று மகன் கெஞ்ச,
"சரி! சந்தோஷமா இருந்துட்டு வா!" என்று கூறிவிட்டு விஷ்ணுவிடம் போனை கொடுக்கச் சொல்லி, விஷ்ணுவிடம், தோப்பு சம்பந்தமாக மற்றும் வீடு சம்பந்தமாக பேசிவிட்டு போனை வைத்து விட்டார்.