Hassan Ashari 1

47 8 7
                                    

வௌவால் ஏன் இரவில் நடமாடுகிறது?

காட்டில் மிருகங்களுக்கும் பறவைகளுக்குமிடையே போர் மூண்டது. ஒரு பக்கம் சிங்கம், புலி, யானை, கரடி...

மறுபக்கம் சிட்டு, மைனா, கொக்கு, காகம்...

பலம் வாய்ந்த மிருகங்களின் அதிரடி தாக்குதலுக்கு பறவையினால் ஈடுக் கொடுக்க முடியவில்லை. சிறகு உடைந்த பட்சிகள் தோல்வியை தழுவின.

போரில் கலந்து கொள்ளாத வௌவால் வெற்றி பெற்ற மிருகங்களிடம் போய் "நான் குட்டி ஈன்று பாலூட்டும் முலையூட்டி. நானும் உங்களை போல ஒரு மிருகம் தான்." என்று கூறி மிருகங்களுடன் சேர்ந்து வெற்றி விழா கொண்டாடியது.

' தோல்வி என்பது ஒத்தி வைக்கப்பட்ட வெற்றியே' என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பறவைகள் யானை இராட்சிப் பட்சி, பருந்து, புறா, கழுகு முதலானவற்றின் தலைமையில் மீண்டும் ஒருமுறை மிருகங்களை திட்டமிட்டு தாக்கின. தனது கூரிய அலகுகளினால் மிருகங்களின் கண்களை கொத்தி குருடாக்கின. 'புத்திவானே பலவான்' என்பதை பறவைகள் நிரூபித்து விட்டன. மிருகங்கள் போரில் தோற்று விட்டன. இம்முறை பறவைகளுக்கே வெற்றி.

இப்போது வௌவால் பறவைகளிடம் பறந்து வந்து, "நானும் உங்களை போல சிறகடித்துப் பறக்கிறேன். கனிவகைகளை சாப்பிடுகிறேன். மரக்கொப்புகளிலே தான் உறங்குகின்றேன். நானும் உங்களை போல ஒரு பறவைதான்" என்று கூறி பறவைகளின் ஆதரவை பெற்று கொண்டு ஆனந்த கூத்தாடியது.

அடிக்கடி யுத்தம் நிகழ்வதால் காட்டில் அமையில்லை. அபிவிருத்தியில்லை. சந்தோஷமில்லை. ஆகவே அதற்கு ஒரே வழி இரு சாராரும் யுத்த நிறுத்தம் செய்து சமாதானத்தை நிலைநாட்டுவதுதான் என்று மிருகங்களும் பறவைகளும் தீர்மானித்து உடன்படிக்கை செய்து கொண்டன.

தனக்கென்று ஒரு கொள்கை இல்லாமல் அங்கும் இங்குமாக தொத்திக் கொண்டிருந்த வௌவாலின் சாயம் வெளுக்க தொடங்கியது.

மிருகங்களின் முகத்திலோ பறவைகளின் முகத்திலோ விழிக்காமல் பகல் முழுவதும் பதுங்கி இருந்த விட்டு இரவிலே தான் நடமாட வர வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்து அந்த திட்டத்தை இன்னும் அமுல் நடத்தி கொண்டிருக்கிறது வௌவால்

சிலரை சில காலம் ஏமாற்றலாம். பலரை பல காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எக்காலமும் ஏமாற்ற முடியாது.

இது போன்ற 105 தத்துவங்களுக்கு பொருத்தமான 105 சிறு கதைகளையும், கவிதைகளையும் உள்ளடக்கிய மிக சிறந்த வாழ்வியல் புத்தகவே "மனிதன் புனிதமாக".

இதனை எழுதியவர் - ஹஸன் அஸ்ஹரீ.

Talk With Books📖 Where stories live. Discover now