என்றெண்ணி.. அவன்.. அவளால்..

1 0 0
                                    

இலக்கணம் அறியாதவன்
இலக்கியம் வரைகிறான்
இயற்கையின் இறுமாப்பாய்
இவனுக்காக இவள்
இருப்பாள் என்றெண்ணி..

தன்னை உணராதவன்
தன்மைகளை பேசுகிறான்
தடைகளை தகர்த்தெறிந்து
தனக்கானவள் கழுத்தில்
தங்கமிடலாம் என்றெண்ணி..

கவிநயம் கல்லாதவன்
காவியம் படைக்கிறான்
கன்னியவள் இசைந்தாடலால்
கானம் காயம் ஆற்றாது
காணாமற்போகா தென்றெண்ணி..

போக்கன் அவன்
போகன் ஆகிறான்
பொலிவுற்ற மதிமுகமவள்
போதனைக்கு சாய்ந்தால்
போக்குதேவலோக மென்றெண்ணி..

கோழை குணத்தவன்
கோலொச்சி போர்புரிந்து
கொள்கை பேசுகிறான்
கோதையவள் மனக்கோட்டைதனை
கொள்ளையிடலா மென்றெண்ணி..

சோம்பலுக்கு சொந்தக் காரனவன்
சோபித்து நதிவெள்ளமாய்
சோதனைகளை நிர்மூலமாக்கி
சோடிப்புறா அவளுடன் காதலாட
சோலையிலே உலாவலா மென்றெண்ணி..

பாந்தன் அவன்
பாக்கியம் பெறுகிறான்
பதுமையவள் திருமுகத்தை காணுங்கால்
பாற்கடலையும் பர்வதமதையும் பகட்டாக்கி
பற்றலாமவளை புதுமைசெய் தென்றெண்ணி..

அகந்தையை பிடித்தவன் அவன்
அகநிலை அறிகிறான்
அகலிகையவளின் அருள்மொழி அகவலால்
அச்சாணி அவளானால் இவ்வகிலமும்
அவளுக்கு ஈடாகா தென்றெண்ணி..

காட்டாற்றை ஒத்தவன் அவன்
காதல் கொள்கிறான்
கார்மேகக் குழலியவளை..
காலமது தேய்ந்து போனாலும்
காதலது தேய்வுறா தென்றெண்ணி..

அடாவடிக்காரன் அவன்
அமைதியின் ஆற்றல் அறிகிறான்
அணங்கு அவள் அகமறிதலால்..
அணுநொடியும் அகலாதவளை
அணைத்திருக்கலா மென்றெண்ணி..

அளப்பன் அவன்
அளவாய் அறுத்து உரைக்கிறான்
அல்லியவள் மணங்கண்டதால்
அகிலமதில் அளப்பறியதென்பது
அவளின் அன்பே என்றெண்ணி..

நகைச்சொல்காரன் அவன்
நம்பிக்கை நல்குகிறான்
நங்கையவள் நச்சுதலால்
நந்தவனமதில் நடைபழகலாம்
நந்தினியுடன் என்றெண்ணி..

© CG Kumaran

அவனின் கவிதைகள்..Tempat cerita menjadi hidup. Temukan sekarang