விலகாதே என்னுயுரே 1
சென்னை அரசு பொது மருத்துவமனை இரவு நள்ளிரவை தாண்டி இருந்தது.
ஏய் எதுக்குடி இப்படி ஒப்பாரி வச்சு ஊரை கூட்டுற, நாங்க சொல்றதை கேட்டுட்டு இப்ப எங்க கூட வர போறியா இல்லையா என்று கேட்டார் மனோகரி. எதிரே மெத்தையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்த தன் மருமகள் கார்த்திகை செல்வியை பார்த்து,
மனோகரி சத்தம் போட்டதும் கார்த்திகை செல்வி தன் வலது புறம் திரும்பி பார்த்தாள் அங்கு இரும்பு தொட்டிலில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு பெண் குழந்தை உறங்கி கொண்டு இருந்தது. அவளின் மடியிலும் ஒரு பெண் குழந்தை இருந்தது.
கடைசியா கேட்கிறேன்டி என் பேச்சை கேட்க போறியா இல்லையா என்று மிரட்டல் தோணியில் மனோகரி கேட்க, கார்த்திகை செல்வியின் அழுகை கூடியது. திருமணம் முடிந்த இந்த ஏழு ஆண்டுகளில் சரியோ தவறோ ஒரு நாளும் மாமியாரின் பேச்சுக்கு மறுவார்த்தை பேசியது கிடையாது. அவர் சொல்வதை தட்டாமல் செய்து இருக்கிறாள் தான், ஆனால் இன்று அவர் செய்ய சொல்வதை எவ்வாறு செய்ய முடியும்.
பத்து மாதம் சுமந்து பெற்ற தன் இரட்டை குழந்தைகளில் ஒன்றை தான் உயிரோடு இருக்கும் போதே பிறந்த நேரம் சரியில்லை என்றூ அநாதையாக விட்டுட்டு வர சொல்லுகிறாரே எவ்வாறு அதை செய்ய முடியும். ஒரு பெண்ணாக தாயாக இருந்து கொண்டு எவ்வாறு இவரால் இதை சொல்ல முடிகிறது. இதோ இந்த மாமியாரே தன்னை திருமணம் ஆகி ஏழு ஆண்டுகளில் குழந்தை இல்லை என்று எத்தனை வசைப்பாடி இருப்பார். எத்தனை கோயில், குளம், ஏறி இருப்பார். எத்தனை விரதம் இருந்திருப்பாள் இந்த குழந்தைகளுக்காக, அப்படி கடவுள் வரமாக அளித்ததில் ஒன்றை தூக்கி எறிய சொல்லுகிறாளே என்று மனம் கதறியது. நான் பெத்த பிள்ளை இது. இதை விட்டுட்டு வர சொல்ல உனக்கு எந்த உரிமையும் கிடையாது என்று சொல்ல வேண்டிய இந்த இரட்டை குழந்தைகளின் தந்தையும் கார்த்திகை செல்வியின் கணவனுமான கந்தசாமியோ தன் தாயின் முதுகிற்கு பின்னே அவர் கூறுவது தான் சரி என்பது போல் அமைதியாக நின்றான். அதை காண்கையில் தான் இன்னும் அழுகையும் அவமானமும் ஒரு சேர வந்தது.