விலகாதே என்னுயுரே 2
சந்தோஷ் 25 வயதே ஆன நல்ல வாட்டசாட்டமான இளைஞன். கோதுமை நிறத்திலும் டீரிம் செய்யப்பட்ட மீசை தாடியுடனும் அப்படியே துல்கர் சல்மான் போல் இருப்பான் பார்ப்பதற்கு, அவன் பாரதியை முதன் முதலில் பார்த்தது மருத்துவமனையில் தான். பாரதியை பார்ப்பதற்கு முன்பு வரை சந்தோஷ் பொறுப்பற்ற இளைஞனாக தான் இருந்தான். சில ஆகாத நண்பர்களுடன் சேர்ந்து பெட் கட்டி சென்னையின் போக்குவரத்து நிறைந்த சாலையில் பைக் ரேஸ்ஸில் ஈடுபடுவான். அன்றும் அது போல் ஒரு ரேஸ்ஸில் ஈடுபட விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு பாரதி பயிற்சி மருத்துவராக இருந்தாள்.
மருத்துவமனையிலே இரண்டு வாரம் தங்கும் அளவு பயங்கர அடிபட்டு இருந்தது. அவனின் பெற்றோர் அவனை கொண்டு வந்து அனுமதிக்கும் போது அழுத அழுகையை பார்த்தவளுக்கு கஷ்டமாக இருந்தது. சந்தோஷ் டிஸ்சார்ஜ் ஆகும் அன்று அவனை பரிசோதிக்க வந்த பாரதி அவனிடம் அவன் பெற்றோர் அவனுக்கு அடிபட்டதும் பட்ட துன்பத்தையும் அவன் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பையும் எடுத்து சொல்லி இன்னும் சில புத்திமதியையும் சற்று கடுமையாகவே கூறினாள். ஏற்கெனவே மருத்துவமனையில் கண்விழித்தில் இருந்து பாரதியை பார்த்தவனுக்கு பிடித்து போனது. இதுவரை எத்தனையோ முறை பெற்றோர் கூறி கேட்காதவன் பாரதி கூறியதில் இருந்து பைக் ரேஸை விட்டு விட்டான். அதன் பிறகு பாரதியின் பின் சுற்றுவது தான் அவனின் முழு நேர வேலையாக இருந்தது. அவளிடம் தன் காதலை பலமுறை வெளிப்படுத்தியும் பாரதி முதலில் ஒத்து கொள்ளவே இல்லை. காரணம் சந்தோஷுன் குடும்ப நிலை.
சந்தோஷ் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். அவனின் பெற்றோர் இன்னமும் சாதி, மதம், சாஸ்திரம், சம்பிரதாயம்,என்று தேவை இல்லாத மூட்டைகளை முதுகில் சுமந்து கொண்டு வாழ்பவர்கள். அதனால் தன்னை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று சந்தோஷ் மீது பிடித்தம் இருந்த போதும் காட்டி கொள்ளாமல் இருந்தாள். ஆனால் சந்தோஷ் பிடிவாதமாக ஒற்றை காலில் நின்று பாரதியை மாற்றி விட்டான்.
